சமூக வலைத்தளங்கள்:

RSS:

வத்திக்கான் வானொலி

உலகோடு உரையாடலில் திருத்தந்தை மற்றும் திருஅவையின் குரல்

மொழி:

திருத்தந்தை பிரான்சிஸ் \ எழுத்து வடிவில்

திருத்தந்தை - புதிய கர்தினால்களுக்காகச் செபிப்போம்

விசுவாசக் கோட்பாட்டு பேராயத்தின் தலைவரான புதிய கர்தினால் லூயிஸ் லதாரியா

28/06/2018 15:57

ஜூன்.28,2018. "புதிய கர்தினால்களுக்காகச் செபிப்போம். இறை மக்கள் அனைவரின் நலனுக்கென, உரோமைய ஆயரான என்னுடன் இவர்கள் அனைவரும் இணைந்து பணியாற்றுவார்களாக" என்ற சொற்களை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இவ்வியாழன் தன் டுவிட்டர் செய்தியாக வெளியிட்டார்.

ஜூன் 28, இவ்வியாழன் மாலை 4 மணியளவில் புனித பேதுரு பசிலிக்கா பேராலயத்தில் நிகழ்ந்த ஒரு சிறப்பு திருவழிபாட்டு நிகழ்வில், 14 புதிய கர்தினால்கள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களிடமிருந்து சிவப்பு தொப்பியும், மோதிரமும் பெற்று, தங்கள் பொறுப்பை ஏற்றுக்கொண்டனர்.

கடந்த சில நாள்களுக்கு முன் உரோம் நகர் வந்தடைந்த புதிய கர்தினால்களில் சிலர் வத்திக்கான் வானொலிக்கு பேட்டிகள் அளித்தனர்.

பெரும் இறையியல் கல்வியோ, உயர்ந்த சிந்தனை உருவாக்கமோ பெற இயலாத வெகு எளிய மக்களின் நம்பிக்கையைப் பாதுகாப்பதும், வளர்ப்பதும் என் முதன்மையான கடமை என கருதுகிறேன் என்று, புதிய கர்தினால்களில் ஒருவரும், விசுவாசக் கோட்பாட்டு பேராயத்தின் தலைவருமான லூயிஸ் லதாரியா அவர்கள், தன் பேட்டியில் குறிப்பிட்டார்.

உலகில் எழும் பல்வேறு முரண்பாடான சிந்தனைகளுக்கு நடுவே, எளிய மக்களின் நம்பிக்கையைப் பாதுகாப்பது, திருஅவையின் நம்பிக்கையை வளர்ப்பதற்குச் சமம் என்று இயேசு சபை கர்தினால் லதாரியா அவர்கள் தன் பேட்டியில் குறிப்பிட்டார்.

திருப்பீடச் செயலகத்தில் பணியாற்றி, விரைவில் புனிதர்பட்ட வழிமுறைகளை ஒருங்கிணைக்கும் பேராயத்தின் தலைவராகப் பொறுப்பேற்கவிருக்கும் புதிய கர்தினால் ஆஞ்செலோ பெச்சு அவர்கள் வழங்கிய பேட்டியில், திருஅவை என்பது அதிகாரத்தையும், வலிமையையும் கட்டியெழுப்பும் ஓர் அமைப்பு அல்ல, மாறாக, மனிதகுலத்தை இறைவனின் அனுபவத்தில் கட்டியெழுப்பும் ஓர் அமைப்பு என்று எடுத்துரைத்தார்.

வரலாற்றில் மிக இளமையான பாகிஸ்தான் திருஅவையில், பெரும்பாலான நேரம் மக்களுடன் இருப்பதே தன் தலையாயப் பணிப் என்றும், இச்சூழலில், கர்தினால் என்ற பொறுப்பைப் புரிந்துகொள்ள இன்னும் நேரம் தேவைப்படுகிறது என்றும், கராச்சி பேராயரான கர்தினால் ஜோசப் கூட்ஸ் அவர்கள், தன் பேட்டியில் கூறினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

28/06/2018 15:57