2018-06-28 16:15:00

கிறிஸ்தவ ஒன்றிப்பு பிரதிநிதிகளிடம் திருத்தந்தை


ஜூன்.28,2018. திருத்தூதர்களான புனிதர்கள் பேதுரு, பவுல் ஆகிய இருவரின் நினைவைக் கொண்டாடுவது, நம் திருஅவைகளுக்கிடையே நிலவும் வேர்களை நினைவுகூர்வது மட்டுமல்ல, மாறாக, புதிய மனித சமுதாயத்தை உருவாக்க, நற்செய்தி வழியே எவ்விதம் பணியாற்றுவது என்பதை புரிந்துகொள்வதும் ஆகும் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தன்னைச் சந்திக்க வந்திருந்த கிறிஸ்தவ ஒன்றிப்பு பிரதிநிதிகளிடம் கூறினார்.

ஒவ்வோர் ஆண்டும், புனித பேதுரு பவுல் பெருவிழாவன்று, கிறிஸ்தவ ஒன்றிப்பு முதுபெரும்தந்தையின் சார்பாக வத்திக்கானுக்கு வருகை தரும் அச்சபையின் பிரதிநிதிகளை இவ்வியாழன் காலை திருப்பீடத்தில் சந்தித்தத் திருத்தந்தை, முதுபெரும் தந்தை பார்த்தலோமேயு அவர்களின் சார்பாக வருகை தந்திருக்கும் பிரதிநிதிகளுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.

மனித மாண்பு குலைக்கப்படுதல், பணத்தை வழிபடுதல், வன்முறையை வளர்த்தல், இயற்கையை அழித்தல் போன்ற போக்குகள் பெருகிவரும் இந்நாள்களில், இத்தகைய அழிவுப் பாதைக்கு நம்மையே உட்படுத்தாமல் மக்களை வழிநடத்துவது கிறிஸ்தவ சபைகளுக்கு வழங்கப்பட்டுள்ள முக்கிய பணி என்று திருத்தந்தை எடுத்துரைத்தார்.

அழிவுக்கு இட்டுச்செல்லும் இன்றைய உலகப் போக்கிற்கு மாற்று ஏதுமில்லை என்ற நம்பிக்கையற்ற நிலையை நாம் ஏற்றுக்கொள்ளக் கூடாது என்று முதுபெரும்தந்தை பார்த்தலோமேயு கூறியதை, தான் முற்றிலும் ஆமோதிப்பதாக திருத்தந்தை கிறிஸ்தவ ஒன்றிப்பு பிரதிநிதிகளிடம் கூறினார்.

படைப்பைப் பாதுகாப்பது, நவீன அடிமைத்தனத்திற்கு எதிராகப் போராடுவது, அமைதியை உருவாக்குவது ஆகிய முக்கிய பணிகளில் கத்தோலிக்கத் திருஅவையும், கிறிஸ்தவ ஒன்றிப்பு சபையும் இணைந்து உழைத்து வருவது நிறைவைத் தருகிறது என்று, திருத்தந்தை தன் உரையில் சுட்டிக்காட்டினார்.

மத்தியக் கிழக்குப் பகுதியில் நிலவும் அவலமான நிலையை மையப்படுத்தி, அனைத்து கிறிஸ்தவ சபைகளும் ஒன்றுகூடி ஜூலை 7ம் தேதி பாரியில் மேற்கொள்ளும் செப வழிபாட்டில் கலந்துகொள்ள கிறிஸ்தவ ஒன்றிப்பு முதுபெரும் தந்தை பார்த்தலோமேயு அவர்கள் சம்மதம் கூறியிருப்பதற்கு திருத்தந்தை தன் நன்றியைத் தெரிவித்தார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.