2018-06-29 15:23:00

கிறிஸ்தவர்கள் இயேசுவின் தனித்துவம் பற்றி உறுதி


ஜூன்,29,2018. புனிதர்கள் பேதுரு, பவுல் பெருவிழா திருப்பலியை நிறைவு செய்தபின்னர், பகல் 12 மணிக்கு வத்திக்கான் தூய பேதுரு வளாகத்தில் கூடியிருந்த பல்லாயிரக்கணக்கான திருப்பயணிகள் மற்றும் சுற்றுலாப் பயணிகளுக்கு மூவேளை செப உரையும் வழங்கினார், திருத்தந்தை பிரான்சிஸ்.

தான் யார் என்று மக்களும், திருத்தூதர்களும் நினைப்பது பற்றி திருத்தூதர்களிடம் இயேசு கேட்ட கேள்விகளை மையப்படுத்தி மூவேளை செப உரையாற்றிய திருத்தந்தை, நீர் மெசியா, வாழும் கடவுளின் மகன்”என்ற உண்மையை, கடவுளின் அருளால், பேதுருவும், அவரோடு சேர்ந்து, எல்லாக் காலத்திலும் வாழ்கின்ற திருஅவையும் சொல்கின்றது என்றார்.

நீதி மற்றும் அன்பின் மாபெரும் இறைவாக்கினர், வாழ்வின் ஞானமுள்ள போதகர், புரட்சியாளர், கடவுளின் கனவுகளைக் காண்பவர் போன்ற பல்வேறு வழிகளில், உலகம், இயேசுவை, நூற்றாண்டுகளாக விளக்கியுள்ளது, ஆனால் இயேசுவின் தனித்துவத்தை வெளிப்படுத்தும் பேதுருவின் விசுவாச அறிக்கை, இன்றும் கிறிஸ்தவர்களில் நிலைத்து நிற்கிறது என்று கூறினார், திருத்தந்தை.

இயேசு, கடவுளின் மகன், அவரின் இறைத்தந்தை என்றென்றும் வாழ்வதுபோன்று, அவரும் வாழ்கிறார், இந்த உண்மை, இயேசுவின் பேருண்மைக்குத் தங்களைத் திறந்து வைத்திருப்பவர்களின் இதயங்களில் சுடர்விடுகின்றது என்றும் திருத்தந்தை கூறினார்.

மேலும், “உன் பெயர் பேதுரு, இந்தப் பாறையின்மேல் என் திருஅவையைக் கட்டுவேன். பாதாளத்தின் வாயில்கள் அதன்மேல் வெற்றி கொள்ளா(மத்.16,18)” என்று, இயேசு பேதுருவிடம் கூறியவேளையில், “திருஅவை” என்ற சொல்லை இயேசு முதன்முறையாகப் பயன்படுத்தினார் என்றும், அவர், திருஅவையை, என் திருஅவை என்று கூறி, அதன் மீதுள்ள தம் அன்பை வெளிப்படுத்தினார் என்றும் திருத்தந்தை கூறினார். இயேசுவின் புதிய உடன்படிக்கை சமூகம், அவரின் மனுவுரு மற்றும் மோசே சட்டத்தின்கீழ் இல்லாமல், அவரில் விசுவாசம் வைப்பதை அடிப்படையாகக் கொண்டது என்றும் கூறியத் திருத்தந்தை, திருஅவைக்காகச் செபிக்குமாறு கேட்டுக்கொண்டார்.

உரோம் மற்றும் உலகமனைத்திலுமிருக்கின்ற திருஅவை அங்கத்தினர்கள் அனைவரும், நற்செய்திக்கு என்றென்றும் விசுவாசமாக வாழ்வதற்கு, திருத்தூதர்களின் அரசியாம் அன்னை மரியின் பரிந்துரையை இறைஞ்சி, இவ்வுரையை நிறைவு செய்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.

மேலும், மூவேளை செப உரையின் இறுதியில், புதிய கர்தினால்களுடன் திருப்பலி நிறைவேற்றியதையும், பல்வேறு நாடுகளில் கடந்த ஆண்டில் நியமிக்கப்பட்ட புதிய பேராயர்களுக்கு பாலியங்களை ஆசீர்வதித்ததையும் கூறி, அவர்கள் நற்செய்திக்கும், திருஅவைக்கும் ஆர்வமுடனும், மனத்தாராளத்துடனும் பணியாற்றுவதற்குச் செபிக்குமாறு கேட்டுக்கொண்டார் திருத்தந்தை.

கிறிஸ்தவ ஒன்றிப்பு முதுபெரும்தந்தையின் பிரதிநிதிகள் குழு, உரோம் நகருக்கு வருகை தந்து, புனிதர்கள் பேதுரு, பவுல் பெருவிழா திருப்பலியில் கலந்துகொண்டதற்கு நன்றியும் தெரிவித்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.   

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.