2018-06-29 15:29:00

பராமரிப்புகள் குறைவால் 230 கோடிப் பேர் பாதிக்கப்படக்கூடும்


ஜூன்,29,2018. உலக அளவில், பராமரிப்புகளின்றி கைவிடப்படும் சிறார் மற்றும் வயதானவர்கள் எண்ணிக்கை அதிகரித்துவரும்வேளை, இந்நிலை, 2030ம் ஆண்டுக்குள், 230 கோடிப் பேரைப் பாதிக்கக்கூடும் என்று, ஐ.நா. வல்லுனர்கள் எச்சரித்துள்ளனர்.

ILO எனப்படும் உலக தொழில் நிறுவனம் இவ்வியாழனன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், தொழில் உலகில் சமத்துவமற்றநிலை அதிகரித்து வருவதாகவும், ஊதியமில்லாமல் வேலை செய்பவரில், 75 விழுக்காட்டிற்குமேல் பெண்கள் எனவும் கூறப்பட்டுள்ளது.

கல்வி, நலவாழ்வு மற்றும் சமூகநலத் துறைகளுக்கு தற்போது ஒதுக்கப்பட்டுள்ள நிதி, இரட்டிப்பாக்கப்பட்டால், அடுத்த 12 ஆண்டுகளில் 26 கோடியே 90 இலட்சம் வேலைகளை உருவாக்க முடியும் என்றும், ஒரு நாளைக்கு எட்டுமணி நேரம் வீதம், 200 கோடிப் பேர் ஊதியமின்றி வேலை செய்கின்றனர் என்றும், உறுப்பு நாடுகளிடம் கூறியுள்ளது, ILO நிறுவனம்.

2015ம் ஆண்டில், 210 கோடிப் பேருக்கு பராமரிப்பு தேவைப்பட்டது என்றும், இவர்களில் 190 கோடிப் பேர், 15 வயதுக்குட்பட்ட சிறார் என்றும், ஏனையோர் வயதானவர்கள் என்றும் அவ்வறிக்கை கூறுகின்றது.  

ஆதாரம் : UN/வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.