2018-06-30 15:36:00

கர்தினால் Krajewski ஏழைகளுக்கு அளித்த விருந்தில் திருத்தந்தை


ஜூன்,30,2018. நம்மை அன்புகூர்ந்து, பேணிப் பாதுகாத்து வருகின்ற கடவுளோடு, நாம் மிகவும் உறுதியுடன் ஒன்றித்திருக்கும்போது, வாழ்வில் நாம் எதிர்கொள்ளும் அனைத்து இன்னல்கள் மற்றும் சவால்களைத் தாங்கிக் கொள்ள இயலும் என்பது, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் டுவிட்டரில், இச்சனிக்கிழமையன்று வெளியானது.

மேலும், ஜூன் 28, இவ்வியாழன் மாலையில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களிடமிருந்து கர்தினால்களுக்குரிய தொப்பி மற்றும் மோதிரத்தைப் புதிதாகப் பெற்ற கர்தினால் Konrad Krajewski அவர்கள், ஜூன் 29, இவ்வெள்ளிக்கிழமையன்று ஏறத்தாழ 280 ஏழைகளுக்கு விருந்தளித்தார்.

வீடற்றவர், புலம்பெயர்ந்தவர், முன்னாள் கைதிகள் போன்ற 280 ஏழைகளுக்கு, புதிய கர்தினால் Krajewski அவர்கள், வத்திக்கானில் அளித்த இரவு உணவு விருந்தின்போது, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், திடீரென அவ்விடத்திற்குச் சென்று, கடைசி மேஜையில் காலியாக இருந்த ஒரு நாற்காலியில் அமர்ந்து உணவருந்தினார். இரண்டு மணி நேரம் அங்கு இருந்து, அங்கிருந்தவர்களின் கதைகளைக் கேட்டு, அவர்களோடு உரையாடிக்கொண்டிருந்தார், திருத்தந்தை.

திருத்தந்தையின் தர்மச் செயல்களுக்குப் பொறுப்பானவரான, போலந்து நாட்டைச் சேர்ந்த, புதிய கர்தினால் Krajewski அவர்கள், திருத்தந்தையின் இந்தத் திடீர் வருகை குறித்து வியப்போடு நோக்குகையில், தான் ஏழைகளுக்காக இங்கு வந்தேன் என்று கூறினார், திருத்தந்தை பிரான்சிஸ்.

திருத்தந்தையின் தர்மச் செயல்கள் அமைப்போடு சேர்ந்து, வீடற்றவர்களுக்கு உதவிவரும், உரோம் ஜான் எஜிதியோ அமைப்பின் கார்லோ சந்தோரோ உட்பட ஏறத்தாழ அறுபது தன்னார்வலர்கள், ஏழைகளுக்கு உணவைப் பரிமாறினர்.  இந்நிகழ்வில், திருத்தந்தையின் உரையாடல்கள் பற்றிக் கூறிய, சந்தோரோ அவர்கள், புலம்பெயர்ந்தவர்களை ஏற்காமல் இருப்பது, குழந்தைகள் பெற்றுக்கொள்ளாமல் இருப்பது போன்றவைகளால், ஐரோப்பியக் கண்டத்தின் எதிர்காலம் கேள்விக்குறியாக உள்ளதாகவும், ஐரோப்பா, தற்கொலையின் விளிம்பில் இருப்பதாகவும் திருத்தந்தை கூறியதாகத் தெரிவித்தார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.