2018-07-02 16:31:00

அமைதி இன்றி வளர்ச்சியும், வளர்ச்சியின்றி அமைதியும் இல்லை


ஜூலை,02,2018. உலகில் பாதுகாப்பு என்பது வளர்ச்சிக்கு இன்றியமையாதது, அந்த வளர்ச்சி வழியாகவே ஏழ்மையை எதிர்த்துப் போராட முடியும், என ஐ.நா. அவைக் கூட்டத்தில் உரையாற்றினார் ஐ.நா.விற்கான திருப்பீடப் பிரதிநிதி, பேராயர் பெர்னதித்தோ அவுசா.

சிறு ஆயுதங்கள் உற்பத்திச் செய்யப்படுவது, சட்டவிரோதமாக விற்கப்படுவது போன்றவற்றைத் தடைசெய்யும் அனைத்துலக ஒப்பந்தம் எவ்வாறு நடமுறைப்படுத்தப்படுகின்றது என்பது குறித்து ஆராயும் ஐ.நா. கூட்டத்தில் உரையாற்றிய பேராயர் அவுசா அவர்கள், அமைதி கலாச்சாரத்தை ஊக்குவிப்பதன் வழியாகவே, வாழ்வுக்கான மதிப்பையும் மனித மாண்பையும் மேம்படுத்த முடியும் என்பதை வலியுறுத்தினார்.

சிறு ரக ஆயுதங்களை கட்டுப்படுத்துவது குறித்த முயற்சியில், தகவல் சேகரிப்பு, அனுபவப் பகிர்வு, நல் நடவடிக்கைகள் போன்றவை வழியாக, மக்கள் சமூகமும், அரசு சாரா அமைப்புக்களும் ஆற்றி வரும் சிறப்புப் பணிகள் பாராட்டுக்குரியவை என்பதையும் சுட்டிக்காட்டினார் பேராயர் அவுசா.

அமைதியின்றி உறுதியான வளர்ச்சியைப் பெறமுடியாது, உறுதியான வளர்ச்சியின்றி, அமைதி கிட்டாது என்ற, வளர்ச்சி குறித்த 2030ம் ஆண்டிற்கான திட்ட வரைவு குறித்தும் எடுத்துரைத்த பேராயர் அவுசா அவர்கள், 1967ம் ஆண்டு திருத்தந்தை 6ம் பவுல் அவர்கள் வெளியிட்ட ' அமைதியின் புதிய பெயர் வளர்ச்சி' என்ற பதத்தை இது எதிரொலிப்பதாக உள்ளது என்றார்.

சிறு ரக ஆயுதங்களின் சட்ட விரோத விற்பனைகள், அமைதிக்கும், வளர்ச்சிக்கும், பாதுகாப்புக்கும் பெரும் அச்சுறுத்தலாக உள்ளன என்பதையும் சுட்டிக்காட்டினார், பேராயர் அவுசா.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.