2018-07-02 15:35:00

இமயமாகும் இளமை – துணிச்சல்தான் அழகு


“ஒரு பிரச்சனைக்காகப் போராடுகிறோம் என்றால், காலையில பதாகையை ஏந்தி வீதிக்கு வந்துவிட்டு, மாலையில் வீட்டுக்குப் போவதில்லை. முழுமையான தீர்வு கிடைக்கும்வரை அதைக் கவனிக்க வேண்டும். இவர்கள் போராடட்டும். ஆனால், போராட்டத்தின் பயனாக கிடைக்கும் நல்லதை மட்டும் நாம் அனுபவிக்கலாம் என்று, சொகுசாய் நினைக்கும் கூட்டத்தின் சிந்தனை மாறவேண்டும்”. இவ்வாறு குரல் உயர்த்திச் சொல்பவர், பல அச்சுறுத்தல்களுக்கிடையேயும் மணற்கொள்ளைக்கு எதிராகத் தொடர்ந்து போராடிவரும் இளம் போராளி இசை. கரூர் மாவட்டத்தில் உள்ள 12 மணல் குவாரிகளில் பத்து மூடப்பட்டதில் இசை அவர்களின் பங்களிப்பு முக்கியமானது. மணற்கொள்ளைக்கு எதிராக மட்டுமல்லாது, நூறு வருடப் பழைமை வாய்ந்த ஆலமரம் வெட்டப்பட்டதற்கு எதிராக, பவானி ஆற்றின் குறுக்கே கேரள அரசு அணை கட்டுவதற்கு எதிராக, மீனவர் பிரிட் ஜோவைச் சுட்டுக்கொன்றதற்கு எதிராக, காவிரி நீர் உரிமை, நெடுவாசல், கதிராமங்கலம், கூடங்குளம் மக்கள்மீது போடப்பட்ட வழக்குகளைத் திரும்பப் பெற சட்டமன்ற உறுப்பினர்கள், முதலமைச்சர் தனிப்பிரிவு ஆகியோருக்குத் தொடர்ந்து மனு அளித்துவருவது போன்ற பல போராட்டங்களிலும் களத்தில் நிற்கிறார் இசை. இவர் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில், துப்பாக்கிச் சூட்டில் நூலிழையில் உயிர்பிழைத்திருக்கிறார். காவிரி ஆற்றுக்கு அருகில் தன் வீடு இருப்பதால் சிறுவயதில் காவிரியில் ஆடி மாதத்தில் நுங்கும் நுரையுமாகப் பொங்கி ஓடிய நீர் வந்ததைப் பார்த்து இரசித்தது, சர்க்கரை மாதிரி இருக்கும் காவிரி ஆற்று மணல் மேல் புரண்டு, புழுதி பறக்க விளையாடியது போன்ற, ஆறும் ஊரும் ஒன்றி வாழ்ந்த அந்தக் காலம் இன்று இல்லையே என ஏங்குகிறார் இசை. சிறுமியாகத் தான் விளையாடி மகிழ்ந்த ஆறும், ஆற்று மணலும் கண்ணெதிரே சூறையாடப்படுவதைப் பார்க்கச் சகிக்காமல், `காவிரி ஆறு பாதுகாப்பு இயக்கம்’ என்ற அமைப்பில் முழு ஈடுபாட்டுடன் தன்னை இணைத்துக்கொண்டார் இசை. எம்.சி.ஏ பட்டதாரியான இசை, மக்கள் பிரச்சனைகள் சார்ந்து போராடுவதையே தன் அன்றாட வாழ்வாக்கிக்கொண்டதற்கு, குடும்பத்தில் பலத்த எதிர்ப்பு. எனவே தற்போது, போராட்டங்கள், அதற்கான தயாரிப்புகள் ஆகியவற்றுக்கு இடையே, பகுதி நேரமாக DTP வேலைகள் செய்து அதில் கிடைக்கும் வருமானத்தில் வாழ்ந்து வருகிறார். அதிகாரவர்க்கம், எளியவர்களை ஒடுக்க நினைக்கிற ஒவ்வொரு முறையும், அதைத் தடுக்கிற முதல் கை என்னுடையதாக இருக்கவேண்டும் என நினைப்பேன்” என்று சொல்கிறார் இசை.

ஆதாரம் : விகடன் /வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.