சமூக வலைத்தளங்கள்:

RSS:

வத்திக்கான் வானொலி

உலகோடு உரையாடலில் திருத்தந்தை மற்றும் திருஅவையின் குரல்

மொழி:

திருத்தந்தை பிரான்சிஸ் \ பயணங்கள்

பாரி ஒரு நாள் திருப்பயணம் பற்றி கர்தினால் சாந்த்ரி

பாரி புனித நிக்கொலாஸ் பசிலிக்கா - RV

03/07/2018 15:44

ஜூலை,03,2018. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஜூலை 07, வருகிற சனிக்கிழமையன்று, இத்தாலியின் பாரி நகருக்கு மேற்கொள்ளும் ஒரு நாள் திருப்பயணம் பற்றி, கீழை வழிபாட்டுமுறை பேராயத் தலைவர், கர்தினால் லெயோனார்தோ சாந்த்ரி தலைமையிலான குழு, இச்செவ்வாயன்று செய்தியாளர்கள் கூட்டத்தில் விளக்கியது.

மத்திய கிழக்கின் கிறிஸ்தவ சமூகத் தலைவர்கள் மற்றும், பிற கிறிஸ்தவ சபைகளின் முதுபெரும் தலைவர்களோடு, திருத்தந்தை, பாரி நகரில் கலந்துரையாடவிருப்பது பற்றி பேசிய கர்தினால் சாந்த்ரி அவர்கள், மத்திய கிழக்கின் தற்போதைய சூழலை எதிர்கொள்வதில், கிறிஸ்தவ சபைகளின் தலைவர்களோடு ஒருமைப்பாட்டை உருவாக்கும் நோக்கத்தைக் கொண்டுள்ளது என்று தெரிவித்தார்.

பாரி நகரில் இடம்பெறும் இந்த சந்திப்பில், இஸ்லாம் மற்றும் யூதமதப் பிரதிநிதிகள் சேர்க்கப்படாதது குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த கர்தினால் சாந்த்ரி அவர்கள், கிறிஸ்தவ சபைகளுக்கு இடையே உருவாக்கப்படும் இந்த ஒருமைப்பாடு, மத்திய கிழக்கில் அமைதியை ஏற்படுத்தும் முயற்சியில், பிற மதத்தவரை ஒதுக்குவதாக இல்லை எனத் தெரிவித்தார்.

இஸ்லாம் மற்றும் யூதமத பிரதிநிதிகள் சேர்க்கப்படுவது, உண்மையில் நல்ல பரிந்துரை என்றுரைத்த கர்தினால் சாந்த்ரி அவர்கள், முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்கள், புனித பூமிக்கு மேற்கொண்ட திருத்தூதுப்பயணத்தில் நாசரேத்திலும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், எகிப்துக்கு மேற்கொண்ட திருத்தூதுப்பயணத்தில், Al-Azhar பல்கலைக்கழகத்திலும் இத்தகைய சந்திப்புகள் இடம்பெற்றுள்ளன என்று கூறினார்.

ஜூலை 7ம்தேதி, வரும் சனிக்கிழமையன்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், புனித நிக்கொலசின் திருப்பண்டங்கள் வைக்கப்பட்டிருக்கும் பாரி பசிலிக்காவுக்குச் சென்று அமைதிக்காகச் செபிப்பதுடன், அந்நகர் கடற்கரையின் திறந்தவெளி அரங்கில், விசுவாசிகளோடும், கிறிஸ்தவ சமூகத் தலைவர்களோடும், பிற கிறிஸ்தவ சபைகளின் முதுபெரும் தலைவர்களோடும் இணைந்து, அமைதிக்கான செபவழிபாட்டில் கலந்து கொள்வார். சனிக்கிழமை உள்ளூர் நேரம் பதினொரு மணியளவில், கிறிஸ்தவ சபைகளின் தலைவர்களோடு, பூட்டிய அறைக்குள் கலந்துரையாடல்களை நடத்துவார் திருத்தந்தை.

பின், கிறிஸ்தவ சபை தலைவர்களோடு இணைந்து, பாரி பேராயர் இல்லத்தில் மதிய உணவை அருந்தியபின், அங்கிருந்து ஹெலிகாப்டரில் புறப்பட்டு, மாலை 5 மணி 15 நிமிடங்களுக்கு, வத்திக்கான் வந்தடைவார், திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : வத்திக்கான் செய்திகள்

03/07/2018 15:44