2018-07-03 15:45:00

காவல்துறையின் சித்ரவதைகள் நிறுத்தப்பட வலியுறுத்தல்


ஜூலை,03,2018. இலங்கையில் காவல்துறையின் தடுப்புக்காவலில் அப்பாவி பொது மக்கள் சித்ரவதைப்படுத்தப்படுவது நிறுத்தப்பட, உடனடியாக சட்டங்களையும், ஏனைய முயற்சிகளையும் எடுக்குமாறு, சமயத் தலைவர்களும், மனித உரிமை ஆர்வலர்களும் அரசை வலியுறுத்தியுள்ளனர். 

கண்டியில், கத்தோலிக்கத் திருஅவையின் மனித உரிமை அலுவலகம் நடத்திய நிகழ்வில் பேசிய அந்த ஆர்வலர்கள், தடுப்புக்காவலில் இடம்பெறும் முறைகேடான நடவடிக்கைகள் குறித்து புலன்விசாரணை நடத்துவதற்கு, இதுவரை எவ்வித பலனுள்ள அமைப்புமுறை இல்லையென குறை கூறியுள்ளனர்.

1994ம் ஆண்டில் கொண்டுவரப்பட்ட, சித்ரவதை தடுப்பு விதிமுறை, முறைகேடுகளைத் தடுத்து நிறுத்துவதற்கு இதுவரை தவறியுள்ளது என்றும் அவர்கள் கூறினர்.

ஒருவர் சித்ரவதைக்கு உள்ளாகும்போது, ஒவ்வொரு மனிதரும் புண்படுகிறார் என்றும், காவல்துறையால், பெண்கள் கடும் சித்ரவதைக்கு உள்ளாகின்றனர் என்றும் அந்நிகழ்வில் கூறப்பட்டது.

இந்நிகழ்வில் கலந்துகொண்டு பேசிய புத்தமத தலைவர் Atipola Mangala Thera அவர்கள், இலங்கையில் சித்ரவதைகள் தொடர்ந்து இடம்பெறுவது குறித்து, ஐ.நா.வும், பல்வேறு பன்னாட்டு மனித உரிமை நிறுவனங்களும், கவலை தெரிவித்து வருகின்றன எனத் தெரிவித்தார். 

ஆதாரம் : UCAN / வத்திக்கான் செய்திகள்








All the contents on this site are copyrighted ©.