2018-07-03 15:11:00

மங்களூரு மறைமாவட்டத்தின் புதிய ஆயர் பால் சல்தான்ஹா


ஜூலை,03,2018. இந்தியாவின் மங்களூரு மறைமாவட்டத்தின் புதிய ஆயராக, அருள்பணி பால் சல்தான்ஹா(Paul Saldanha) அவர்களை, இச்செவ்வாய்க்கிழமையன்று நியமித்துள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

மங்களூரு மறைமாவட்டத்தின் ஆயராகப் பணியாற்றிய அலாய்சியஸ் பால் டி சூசா அவர்களின் பணி ஓய்வை ஏற்றுக்கொண்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், உரோம் உர்பானியானம் பாப்பிறை பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணியாற்றும், 54 வயது நிரம்பிய அருள்பணி பால் சல்தான்ஹா அவர்களை, மங்களூரு மறைமாவட்டத்தின் புதிய ஆயராக நியமித்துள்ளார்.

1964ம் ஆண்டு ஏப்ரல் 27ம் தேதி மங்களூரு மறைமாவட்டத்தின் Kinnigoli என்ற ஊரில் பிறந்த புதிய ஆயர் சல்தான்ஹா அவர்கள், 1991ம் ஆண்டில் அருள்பணியாளராகத் திருநிலைப்படுத்தப்பட்டார்.

உரோம் உர்பானியானம் பாப்பிறை பல்கலைக்கழகத்தில், இறையியலில் முனைவர் பட்டமும், பெங்களூரு இறையழைத்தல் பயிற்சி நிறுவனத்தில் உளவியலில் சான்றிதழ் படிப்பும் முடித்துள்ள இவர், மங்களூரு மறைமாவட்டத்தில் முக்கிய பொறுப்புகளை வகித்த பின்னர், 2015ம் ஆண்டு உர்பானியானம் பாப்பிறை பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணியைத் தொடங்கினார்.

இப்பல்கலைக்கழகத்தில் துணை ஆன்மீக இயக்குனராகவும் பணியாற்றிய மங்களூரு புதிய ஆயர், பால் சல்தான்ஹா அவர்கள், 2015ம் ஆண்டு மார்ச் மாதத்தில், உலக ஆயர்கள் மாமன்ற பொதுச் செயலகத்தின் ஆலோசகராகவும் நியமிக்கப்பட்டார்.

ஆதாரம் : வத்திக்கான் செய்திகள்








All the contents on this site are copyrighted ©.