2018-07-05 16:04:00

மால்ட்டா அரசின் முடிவைக் குறித்து ஆயர்கள் கவலை


ஜூலை,05,2018. மால்டாவின் துறைமுகங்கள் வழியே நுழையவிரும்பும் புலம்பெயர்ந்தோருக்கு உதவிகள் செய்யும் வண்ணம் அரசு சாரா அமைப்புகள் பயன்படுத்திவந்த படகு சேவைகளைத் தடை செய்வதற்கு மால்ட்டா அரசு எடுத்துள்ள முடிவைக் குறித்து, அந்நாட்டு ஆயர்கள் தங்கள் கவலையை வெளியிட்டுள்ளனர்.

மால்ட்டாவின் அரசு சாரா அமைப்புகள், புலம்பெயர்ந்தோருக்கு ஆற்றிவந்துள்ள பணிகளைத் தடைசெய்வது, பல்லாயிரம் உயிர்களுக்கு ஆபத்தாக அமையும் என்று, அரசு சாரா அமைப்புகளுடன் இணைந்து, ஆயர்கள் வெளியிட்டுள்ள அறிக்கை கூறுகிறது.

2015ம் ஆண்டு முதல் 2018ம் ஆண்டு வரை, மத்தியத் தரைக்கடல் வழியே வந்து சேர்ந்த புலம்பெயர்ந்தோரில் 26 விழுக்காட்டினர், அரசு சாரா அமைப்புகள் பயன்படுத்திவந்த படகுகளால் காப்பாற்றப்பட்டுள்ளனர் என்று கூறப்படுகிறது.

ஐரோப்பிய நாடுகளுக்குள் நுழைய விரும்பும் புலம்பெயர்ந்தோரைத் தடுக்க, அரசுகள் வேறு வழிகளில் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்றும், நடுக்கடலில் தவிப்போரை கரை சேர்க்கும் முயற்சிகளைத் தடுப்பது மனிதாபிமானமற்றது என்றும் மால்ட்டா ஆயர்களும், அரசு சாரா அமைப்புக்களும் கூறியுள்ளன.

ஆதாரம் : வத்திக்கான் செய்திகள்








All the contents on this site are copyrighted ©.