2018-07-06 14:35:00

இமயமாகும் இளமை …............, : எளிமையின் நாயகன் கலாம்


இரமலான் மாதத்தில், இந்திய குடியரசுத் தலைவர், 'இப்தார்' விருந்தளிப்பது, பாரம்பரியமான ஒரு நிகழ்வு. கடந்த 2002ம் ஆண்டு, அப்துல் கலாம் அவர்கள், குடியரசுத் தலைவராக பொறுப்பேற்றபோது, தன் தனிச்செயலாளரை அழைத்து, இப்தார் விருந்துக்கு குடியரசுத் தலைவர் மாளிகையில் எவ்வளவு செலவாகும்? என்று கேட்டார். 22 இலட்ச ரூபாய் செலவழிப்போம், என்றார், தனிச்செயலாளர் பி.எம்.நாயர். இருக்கப்பட்டவர்களுக்கு இப்தார் விருந்தளிப்பதால் என்ன பயன்? அந்த 22 இலட்சத்தை அனாதை இல்லங்களுக்கு பிரித்து வழங்கிவிடுவோம். அந்த தொகைக்கு இணையாக அனாதை இல்லத்தில் உள்ள குழந்தைகளுக்கு தேவையான உணவுப் பொருட்கள் வழங்க ஏற்பாடு செய்யச் சொன்னார் கலாம். பின்னர் தன் தனிச்செயலாளரை தனியாக அழைத்து, ஒரு இலட்ச ரூபாய்க்கு செக் அளித்து, இதையும் சேர்த்து 23 இலட்ச ரூபாய்க்கு குழந்தைகளுக்கு உணவு ஏற்பாடு செய்யுங்கள் என கலாம் அவர்கள் கூறியபோது, மனித நேயமிக்க மனிதரிடம் பணிபுரிவது குறித்து மிகுந்த பெருமையடைந்ததாக பி.எம்.நாயர் அவர்களே கூறியுள்ளார்.

அப்துல் கலாம் அவர்களின் 5 ஆண்டு பதவி காலம் முடிய சில நாட்கள் இருந்த சமயத்தில் குடியரசுத் தலைவர் மாளிகை அதிகாரிகள், ஊழியர்கள் ஒவ்வொருவரும் அவரை சந்தித்துக் கொண்டிருந்தனர். அப்போது பி.எம்.நாயரும் அவரை சந்தித்தார். என்ன மிஸ்டர் நாயர் உங்கள் மனைவியை காணோம்? என்று கலாம் அவர்கள் கேட்க, தன் மனைவி, ஒரு விபத்தில் சிக்கி, கால் உடைந்து வீட்டில் இருக்கிறார் என்றிருக்கிறார் தனிச்செயலாளர் பி.எம். நாயர். அடுத்த நாள், அவரது வீட்டை சுற்றி ஒரே காவல்துறை பாதுகாப்பு அமைக்கப்பட்டது. என்னவென்று பார்த்தால், கலாம் அவர்கள், பி.எம். நாயரின் மனைவியை பார்க்க வீட்டுக்கே வந்துவிட்டார். ஒரு குடியரசுத் தலைவர், சாதாரண ஊழியரின் மனைவியை சந்தித்து பேசுகிறாரே என்று, அப்பகுதி மக்கள் வியந்தனர்.

ஆதாரம்: வத்திக்கான் செய்திகள்








All the contents on this site are copyrighted ©.