2018-07-06 16:00:00

காலநிலை மாற்ற பாதிப்பைக் களைய தொடர்ந்து பணியாற்றுங்கள்


ஜூலை,06,2018. அறிவியலாளர் குழு, சுற்றுச்சூழலை மதிப்பீடு செய்து வெளியிடும் அறிக்கைகள், வருங்காலத் தலைமுறைகளுக்கு, குப்பைகள், பாலநிலங்கள் மற்றும் கழிவுகளையே நாம் விட்டுச்செல்வோம் என்ற கவலையை அதிகரித்து வருகின்றன என, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், சுற்றுச்சூழல் ஆர்வலர்களிடம் தெரிவித்தார்.

“இறைவா உமக்கே புகழ்” திருமடல் வெளியிடப்பட்டதன் மூன்றாம் ஆண்டு நிறைவை முன்னிட்டு நடைபெற்ற பன்னாட்டு கருத்தரங்கில் கலந்துகொண்ட ஏறத்தாழ 300 பிரதிநிதிகளை, இவ்வெள்ளிக்கிழமையன்று திருப்பீடத்தில் சந்தித்து உரையாற்றிய  திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இவர்கள் இந்தக் கருத்தரங்கில் கலந்துகொண்டதே, இப்பூமியைப் பாதுகாப்பதற்கு இருக்கும் ஆவலின் அடையாளமாக உள்ளது என்று கூறினார்.

நம் பூமியின் நிலைமை குறித்த கவலை, சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதற்குத் தெளிவான நடவடிக்கைகள் எடுப்பதில் வெளிப்படுத்தப்படும் என்ற தன் நம்பிக்கையைத் தெரிவித்த திருத்தந்தை, காலநிலை மாற்றத்தால் மோசமான விளைவுகள் மேலும் ஏற்படுவதைத் தடுக்கும் விதமாக, 2015ம் ஆண்டில் இடம்பெற்ற பாரிஸ் ஒப்பந்தத்தை அரசுகள் மதித்து நடக்குமாறும் வலியுறுத்தினார்.

வருகிற டிசம்பரில் போலந்து நாட்டின் Katowice நகரில் நடைபெறவிருக்கும் கார்பன் வெளியேற்றத்தைக் குறைப்பது குறித்த (COP24) உச்சி மாநாடு, பாரிஸ் ஒப்பந்தத்தை செயல்படுத்தும் பாதையில், ஒரு மைல்கல்லாக அமையும் என்ற நம்பிக்கையையும் தெரிவித்தார், திருத்தந்தை.

காலநிலை மாற்றத்தைத் தடுப்பதற்கு உலக அளவில் எடுக்கப்படும் நடவடிக்கை குறித்து வருகிற செப்டம்பரில், சான் பிரான்சிஸ்கோவில் நடைபெறவிருக்கும் உலக மாநாடு பற்றியும் குறிப்பிட்ட திருத்தந்தை, காலநிலை மாற்ற பிரச்சனை மற்றும் அதற்குரிய தீர்வுக்கு, நிதி நிறுவனங்களும் முக்கிய பொறுப்பைக் கொண்டுள்ளன என்றும் கூறினார்.

சுற்றுச்சூழலைப் பாதுகாத்து பேணும் முயற்சிகளில் இளையோர் மற்றும் பழங்குடி மக்களுக்கு முக்கிய பங்கு அளிக்கப்பட வேண்டும் என்றும், வருகிற அக்டோபரில் நடைபெறவிருக்கும் உலக ஆயர்கள் மாமன்றத்தில் இளையோரே மையமாக இருப்பார்கள் என்றும் திருத்தந்தை கூறினார்.

“இறைவா உமக்கே புகழ் : நம் பொதுவான இல்லத்தைப் பாதுகாத்தல்” எனப்படும்,  திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் புகழ்பெற்ற Laudato si’ திருமடல் வெளியிடப்பட்டதன் மூன்றாம் ஆண்டு நிறைவை முன்னிட்டு, உரோம் நகரில் இவ்வாரத்தில் பன்னாட்டு கருத்தரங்கு ஒன்று நடைபெற்றது. இந்த இரண்டு நாள் கருத்தரங்கு, “நம் பொதுவான இல்லத்தையும், இப்பூமியில் வருங்கால வாழ்வையும் பாதுகாத்தல்” எனும் தலைப்பில் நடைபெற்றது. 

ஆதாரம் : வத்திக்கான் செய்திகள்








All the contents on this site are copyrighted ©.