2018-07-07 16:43:00

கிறிஸ்தவ ஒன்றிப்பு திருப்பயணம் : பாரி நகரில் திருத்தந்தை


ஜூலை,07,2018. இயேசு கிறிஸ்து மனிதஉடல் எடுத்த புண்ணிய பூமி, கிறிஸ்தவம் பிறந்த புனித பூமி, காலம் காலமாய் வன்முறைகள் நிறைந்து, அமைதியின்றி தவிக்கின்றது. அப்பகுதியில் வாழ்கின்ற கிறிஸ்தவர்கள் தொடர்ந்து துன்பங்களையும், நெருக்கடிகளையும் அனுபவித்து வருகின்றனர். கிறிஸ்தவ சபைகளின் ஒன்றிப்பில் ஆர்வமாய் ஈடுபட்டுவரும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இதுவரை இடம்பெறாத ஒரு நிகழ்வை, ஜூலை 07, இச்சனிக்கிழமையன்று பாரி நகரில் நிறைவேற்றினார். தென் இத்தாலியிலுள்ள, அட்ரியாட்ரிக் கடற்கரை நகரமான பாரியின் கத்தோலிக்க பேராலயத்தில், Myra நகர் புனித நிக்கொலாஸ் அவர்களின் திருப்பண்டம் வைக்கப்பட்டுள்ளது. அமைதி, ஒருமைப்பாடு மற்றும் கிறிஸ்தவ ஒன்றிப்பு உரையாடலுக்குச் சான்றாய் விளங்கும் இப்புனிதர், ஆர்த்தடாக்ஸ் கிறிஸ்தவர்களுக்கும் மிகவும் முக்கியமானவர். எனவே மத்திய கிழக்கில் அமைதிக்காகச் செபிப்பதற்காக, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் விடுத்த அழைப்பை ஏற்று, அப்பகுதியில் பணியாற்றும் ஆர்த்தடாக்ஸ் கிறிஸ்தவ சபைகளின் முதுபெரும்தந்தையர் மற்றும் கிறிஸ்தவத் தலைவர்கள், இச்சனிக்கிழமை காலையில் பாரி நகரில் கூடினர். நொறுங்கிய இதயங்களைக் குணப்படுத்தும் மற்றும், காயங்களைப் பாரமரிக்கும் அனைத்து ஆறுதலின் கடவுள், நம் செபத்தைக் கேட்டருள்வாராக, மத்திய கிழக்கில் அமைதி நிலவுவதாக! என்ற சொற்களை, தன் டுவிட்டரில் வெளியிட்டு, இந்த ஒருநாள் கிறிஸ்தவ ஒன்றிப்பு திருப்பயணத்தை, இச்சனிக்கிழமை காலை ஏழு மணிக்கு வத்திக்கானிலிருந்து ஹெலிகாப்டரில் தொடங்கினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

பாரி நகரில் வரவேற்பு

காலை 8.15 மணிக்கு பாரி நகர் கிறிஸ்டோபர் கொலம்பஸ் வளாகத்தை அடைந்த திருத்தந்தையை, பாரி பேராயர் பிரான்செஸ்கோ கக்குச்சி, பூல்யா மாநிலத் தலைவர் Michele Emiliano, பாரி நகராட்சி தலைவர் Marilisa Magno, பாரி மேயர்  Antonio Decaro  ஆகியோர் வரவேற்றனர். அங்கிருந்து பாரி புனித நிக்கொலாஸ் பேராலயத்திற்கு காரில் சென்றார் திருத்தந்தை. அப்பேராலயத்திற்கு முன், மத்திய கிழக்கின் ஏறத்தாழ 19, கிறிஸ்தவ சபைகள் மற்றும் சமூகங்களின் தலைவர்கள் திருத்தந்தைக்காகக் காத்திருந்தனர். இரஷ்ய ஆர்த்தடாக்ஸ் முதுபெரும்தந்தை கிரில் அவர்கள், தனது பிரதிநிதியை அனுப்பியிருந்தார். இத்தலைவர்களை வரவேற்ற பாரி நகர மேயர் தெகாரோ அவர்கள், “பாரி நகர் பெருமகிழ்ச்சியடைகின்றது. இந்த நகர், மக்களைப் பிரிப்பதாக இல்லாமல் இணைப்பதாக உள்ளது, ஆயிரமாம் ஆண்டு ஆரம்பத்தில் இத்திருப்பண்டம் பாரிக்கு வந்துள்ளது, அன்றுமுதல் இங்கு இது போற்றப்பட்டு வருகிறது, அமைதி மற்றும் உரையாடலின் உறுதியான பாதை இல்லாமல் வருங்காலத்தைச் சிந்தித்துப் பார்க்க இயலாது” என்று கூறினார். அனைத்து கிறிஸ்தவத் தலைவர்களுக்கும், பூல்யா ஒலிவக்கிளைகள் பதிக்கப்பட்ட, புனித நிக்கொலாஸ் அவர்களின் அழகிய வண்ணப்படம் ஒன்றையும் அளித்தார் மேயர். 

ஆதாரம் : வத்திக்கான் செய்திகள்








All the contents on this site are copyrighted ©.