2018-07-07 16:51:00

பாரி கடற்கரையில் கிறிஸ்தவ ஒன்றிப்பு செப வழிபாடு


ஜூலை,07,2018. கிறிஸ்தவத் தலைவர்கள் எல்லாரும் பசிலிக்காவுக்குள் சென்று புனித நிக்கொலாஸ் திருப்பண்டத்தின் முன்னர் செபித்தனர். அதன்பின்னர் அவர்கள் எல்லாரும் பேருந்தில், பாரி கடற்கரைக்குச் சென்று "Rotonda" என்ற பகுதியில் அமைதிக்காக, கிறிஸ்தவ ஒன்றிப்பு செப வழிபாட்டில் கலந்துகொண்டனர். ஏறத்தாழ ஐம்பதாயிரம் கிறிஸ்தவர்கள் பங்குபெற்ற இச்செப வழிபாடு, கிரேக்கம், அசீரியம், அர்மேனிய சிரியம் போன்ற பழங்கால கிறிஸ்தவத்தின் மொழிகளில் நடைபெற்றது. அமைதியின் அடையாளமாக, ஒவ்வொரு கிறிஸ்தவத் தலைவர்களும் மெழுகுதிரிகளை ஏற்றினர். உங்களுக்கு அமைதி உரித்தாகுக என்ற தலைப்பில் நடைபெற்ற இச்செப வழிபாட்டில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் மறையுரையாற்றினார். இவ்வழிபாட்டிற்குப் பின்னர், திருத்தந்தையும், ஏனைய முதுபெரும் தந்தையரும், கிறிஸ்தவத் தலைவர்களும் பேருந்தில் ஏறி, புனித நிக்கொலாஸ் பசிலிக்கா சென்றனர். அங்கு கதவுகள் பூட்டப்பட்ட நிலையில், கலந்துரையாடினர். அதன் முடிவில் பசிலிக்கா வளாகத்தில் திருத்தந்தை உரையாற்றினார். அதன் பின்னர் பகல் 1.30 மணிக்கு பாரி பேராயர் இல்லத்தில் மதிய உணவு அருந்தினர். மாலை 3.30 மணிக்கு முதுபெரும்தந்தையரிடம் விடைபெற்ற திருத்தந்தை, ஹெலிகாப்டரில் ஏறுவதற்கு முன்னர், அரசு அதிகாரிகளுக்கு நன்றி சொல்லி வாழ்த்தினார். மாலை 4 மணிக்கு வத்திக்கானுக்குப் புறப்பட்டார் திருத்தந்தை பிரான்சிஸ்.

மத்திய கிழக்கில், குறிப்பாக தொடர்ந்து போர் இடம்பெறும் சிரியாவில், விரைவில் அமைதி நிலவ செபிப்போம்.

ஆதாரம் : வத்திக்கான் செய்திகள்








All the contents on this site are copyrighted ©.