2018-07-07 14:32:00

பொதுக்காலம் 14ம் ஞாயிறு - ஞாயிறு சிந்தனை


சில மாதங்களுக்கு முன், Whatsapp வழியே, சில நண்பர்கள், ஒரு படத்தையும், அத்துடன், ஓர் எச்சரிக்கையையும் பகிர்ந்துகொண்டனர். ஏழு தலைகள் கொண்ட பாம்பு ஒன்று, சாலையோரத்தில் படமெடுத்து ஆடுவது போன்று, அந்தப் படம் அமைந்திருந்தது. படத்திற்கு அடியில், அந்தப் பாம்பு, ஹொண்டுராஸ் நாட்டில் காணப்பட்டதாகவும், ஏழு தலை நாகம், உலக முடிவுக்கு ஓர் அறிகுறி என்றும் எச்சரிக்கை விடப்பட்டிருந்தது.

அந்தப் படத்தையும், எச்சரிக்கையையும் சிறிது ஆழமாக ஆய்வு செய்தால், அவற்றில் உள்ள தவறுகள் வெளிச்சமாகும். அந்தப்படம், ஹொண்டுராஸில் அல்ல, இந்தியாவில் எடுக்கப்பட்டது என்பதும், கம்ப்யூட்டர் நுணுக்கங்கள் தெரிந்த ஒருவர், படமெடுத்து ஆடும் ஒரு பாம்பின் தலையை, ஏழுமுறை வெட்டி ஒட்டி, அந்தப் படத்தை உருவாக்கியுள்ளார் என்பதும், புரியும்.

பிரமிக்கத்தக்க தொழில் நுட்பங்களால், நம்மிடையே தகவல் பரிமாற்றங்கள் தாறுமாறாகப் பெருகிவிட்டன. நம்மை வந்தடையும் ஒரு தகவலை உள்வாங்கி, அதில் உள்ள உண்மையையும், அதனால் விளையக்கூடிய நன்மை, அல்லது, தீமையையும் குறித்து சிறிதும் சிந்திக்காமல், அதை உடனே மற்றவர்களோடு பகிர்ந்துகொள்ள வேண்டும் என்ற அவசரம், நம்மிடம் அதிகம் உள்ளதோ என்ற கவலை எழுகிறது. இத்தகைய அவசரப் பரிமாற்றங்களால், வதந்திகள் அதிகம் உருவாகின்றன.

ஒரு சில வேளைகளில், பொறுப்பின்றி நாம் பரப்பும் வதந்திகளால், உயிர் பலிகளும் நிகழ்ந்துள்ளன. அண்மைய சில மாதங்களில், 'வாட்ஸப்' வதந்திகளால், இந்தியாவில், 30க்கும் அதிகமான அப்பாவி மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். தர்மம் கேட்டு வந்த சில அப்பாவி மக்களை, குழந்தைகளைக் கடத்துபவர்கள் என்ற தவறான முடிவெடுத்து, அந்த வதந்தியைப் பரப்பியதால், அந்த அப்பாவி மக்கள் உயிரோடு எரித்து கொல்லப்பட்டுள்ளனர். இதில் மற்றொரு வேதனை என்னவென்றால், திரிபுரா மாநிலத்தில், குழந்தைக் கடத்தல் வதந்திகளை நம்பவேண்டாம் என்று கூறச்சென்ற அரசு அதிகாரி ஒருவரையும், மக்கள் எரித்து கொன்றனர் என்று, நம் ஊடகச் செய்திகள் கூறுகின்றன.

சொல்லப்படும் செய்திகளையும், அவற்றில் உள்ள உண்மைகளையும் சரிவரப் புரிந்துகொள்ளாமல், நமக்குள் ஏற்கனவே உருவாக்கப்பட்டிருக்கும் சில முற்சார்பு முடிவுகளின் (prejudice) அடிப்படையில் நாம் செயல்படுவதை, இன்றைய ஞாயிறு வாசகங்கள் கேள்விக்குள்ளாக்குகின்றன. முற்சார்பு முடிவுகளால், நாம் அனைவரும் வாழ்வில் சந்தித்திருக்கும், அல்லது, சந்திக்கவிருக்கும் வேதனையான ஓர் அனுபவத்தையும் இன்றைய ஞாயிறு வாசகங்கள் நினைவுறுத்துகின்றன. அந்த அனுபவம்... புறக்கணிப்பு! மனித அனுபவங்களிலேயே ஆழமான காயங்களை உருவாக்க வல்லது, புறக்கணிப்பு. அதிலும், காரணம் ஏதுமின்றி, அல்லது, நமக்குப் புரியாத காரணங்களுக்காக நாம் புறக்கணிக்கப்படும்போது, அந்த வேதனை மிகக் கொடுமையாக இருக்கும்.

தன்னை வெறுத்து, ஒதுக்கி, தனக்கெதிராகக் கிளர்ச்சிசெய்யும் இஸ்ரயேல் மக்களைப்பற்றி இறைவாக்கினர் எசேக்கியலிடம் இறைவனே முறையிடுவதை, முதல் வாசகம் கூறுகிறது. தன் சொந்த ஊருக்குச் சென்ற இயேசுவை, மக்கள் ஏற்றுக்கொள்ளத் தயங்கினார்கள் என்பதை, இன்றைய நற்செய்தியில் நாம் வாசிக்கிறோம்.

சொந்த ஊருக்குத் திரும்பிய இயேசு செய்த முதல் செயல்... தொழுகைக் கூடத்தில் பேசியது! இயேசு பேச ஆரம்பித்ததும், அங்கிருந்தவர்கள், வியப்பில் ஆழ்ந்தனர். நேரம் செல்லச் செல்ல, மக்களின் வியப்பு, விடைபெற்றது, தயக்கங்கள் தோன்றின. அவ்வுணர்வுகள், இயேசுவைப் புறக்கணிக்க வழிவகுத்தன.

இந்த மாற்றத்திற்கு முக்கிய காரணம்... மக்கள் இயேசுவைப்பற்றி கொண்டிருந்த முற்சார்பு முடிவுகள்! வழக்கு ஆரம்பமாகுமுன்னரே, தீர்ப்பு வழங்குவதைத்தான், முற்சார்பு முடிவுகள் (Prejudice) என்று கூறுகிறோம்.

இயேசு பேச ஆரம்பித்தபோது, அவர் என்ன சொன்னார் என்பதை மக்கள் கேட்டதால் மகிழ்வும், வியப்பும் ஏற்பட்டன. ஆனால், விரைவில், அவர்கள் எண்ணங்கள் மாறின. ‘என்ன சொல்கிறார்’ என்பதிலிருந்து, 'யார் சொல்கிறார்' என்று அவர்கள் சிந்திக்க ஆரம்பித்ததும், அவர்கள் வியப்பு, தயக்கமாகவும், வெறுப்பாகவும் மாறியது.

சொல்லப்படும் கருத்தை விட்டுவிட்டு, சொல்பவர் யார் என்பதில் நம் கவனம் திரும்பும்போது, இந்தப் பிரச்சனை உருவாகும். அதிலும், சொல்பவரது குடும்பம், குலம் இவற்றைக் குறித்து முற்சார்பு முடிவுகள் எடுத்திருந்தால், பிரச்சனை பெரிதாகி, சொல்லப்பட்ட கருத்துக்களுடன், சொல்பவரும் சேர்த்து ஒதுக்கப்படுவார்.

இயேசு தன் சொந்த ஊருக்கு திரும்பிச் சென்ற காலக்கட்டத்தில், அவர் புகழ் ஓரளவு பரவியிருந்தது. ஆயினும், ஊர்மக்கள் அவரை இன்னும் பழையவராக, தங்களுக்கு பழக்கமானவராக எண்ணியதால், தடைச் சுவர்கள் எழுந்தன. “பழகப் பழகப் பாலும் புளிக்கும்” என்று தமிழிலும், “Familiarity breeds contempt” என்று ஆங்கிலத்திலும் பழமொழிகள் உண்டு. பெற்றோர், உடன்பிறந்தோர், ஊரில் நம்முடன் வளர்ந்தவர், வாழ்க்கைத் துணை, நமது குழந்தைகள் என்று, நமக்கு மிகவும் நெருங்கியவர்கள் பலரின் அழகான, ஆழமான அம்சங்களைக் காண்பதற்கு, நமது நெருக்கமே ஒரு தடையாகிவிடும். "ஓ, இவர்தானே" என்ற முத்திரைகள் எளிதில் நம் கைவசம் இருக்கும். இயேசுவுக்கும் இத்தகைய 'ரெடிமேட்' முத்திரைகள் குத்தப்பட்டன. "இவர் தச்சர் அல்லவா?, இவர் மரியாவின் மகன்தானே!" என்று, ஊர்மக்கள் எடுத்திருந்த முற்சார்பு முடிவுகள், முத்திரைகளாகக் குத்தப்பட்டன .

ஒருவரது பிறப்பையும், அவர் செய்யும் தொழிலையும் வைத்து, நாம் உருவாக்கிக்கொள்ளும் அவலமான முடிவுகள், எவ்வளவு தூரம் நமது சமுதாயத்தைப் பாதித்துள்ளன என்பதை, நாம் விளக்கத் தேவையில்லை. இத்தகைய முற்சார்பு முடிவுகளுக்கு இயேசுவே பலியானார் என்பது, இன்றைய நற்செய்தி நமக்குத் தரும் ஓர் எச்சரிக்கை!

மக்களின் முற்சார்பு முடிவுகளால், தான் புறக்கணிக்கப்பட்டிருப்பதை உணர்ந்த இயேசு, பொருள் செறிந்த வார்த்தைகளைச் சொன்னார்: “சொந்த ஊரிலும் சுற்றத்திலும் தம் வீட்டிலும் தவிர மற்றெங்கும் இறைவாக்கினர் மதிப்புப் பெறுவர்.” (மாற்கு 6:4) இயேசு கூறிய இந்தப் பொன்னான வார்த்தைகள், அன்றுமுதல் இன்றுவரை பல்வேறு சூழல்களில், பலராலும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

தன் பிறப்பையும், தொழிலையும் வைத்து, தன்னை, குறைவாக மதிப்பீடு செய்திருந்த அம்மக்களிடம், இயேசு, தன்னை ஓர் இறைவாக்கினராக ஒப்புமைப்படுத்திப் பேசினார். இயேசுவின் அடையாளம் பிறப்பினாலோ, அவர் செய்த தொழிலாலோ வரவில்லை. இறைவாக்கினராக, இறைவனின் வாக்காக வாழ்ந்ததே, அவருக்குரிய தனித்துவமான அடையாளம் என்பதை, தன் சொந்த ஊர் மக்களுக்கும், நமக்கும் நினைவுறுத்துகிறார் இயேசு.

இறைவாக்கினராக வாழ்வது, அன்றும், இன்றும், என்றும், சவால்கள் நிறைந்த வாழ்க்கை. ஓர் இறைவாக்கினர் சந்திக்கும் மிகப்பெரும் சவால்.... தன் மனசாட்சியின் வழியாகப் பேசும் இறைவனின் குரலுக்கு, எப்போதும், எந்நிலையிலும், என்ன விலை கொடுத்தாகிலும், செவிமடுத்து வாழ்வது. இதனால், இறைவாக்கினர், தன் வாழ்வின் பெரும்பாலான நேரங்களில், தனித்தே நிற்க வேண்டியிருக்கும். பத்தோடு பதினொன்றாக, கூட்டத்தோடு கூட்டமாகக் கரைந்து வாழாமல், ஆயிரத்தில் ஒருவராக தனித்து நிற்பது, இறைவாக்கினர்களின் பெரும் சவால்.

இன்றைய உலகம் அழுத்தந்திருத்தமாகச் சொல்லித்தரும் ஒரு முக்கியப் பாடம் - ஊரோடு ஒத்து வாழ்வது. வாழ்க்கையின் குறிக்கோள், மனசாட்சியின் தூண்டுதல் போன்ற அனைத்தையும் மறந்துவிட்டு, அல்லது, அவற்றைப் புதைத்துவிட்டு, பலரும் போகும் பாதையிலேயே பயணம் செய்யத்தூண்டுகிறது, இவ்வுலகம். தனித்து நிற்பதால், மற்றவர்களின் தாக்குதல்களுக்கு எளிதான இலக்காகிவிடுவோம், எனவே, கூட்டத்தோடு கூட்டமாக வாழ்வதே பாதுகாப்பு என்று, பலவழிகளில் பாடங்கள் சொல்லித்தருகிறது, இவ்வுலகம். உடை, உணவு, வீடு என்று, வெளி வசதிகளில் ஆரம்பித்து, மதம், அரசியல், கலாச்சாரம் என்ற பல்வேறு துறைகளில், ஒவ்வொருவரும் கொண்டிருக்க வேண்டிய எண்ணங்களை ஒரே மாதிரியான எண்ணங்களாக மாற்ற, வர்த்தக உலகம் வெகுவாக முயன்றுவருகிறது. உலகம் சொல்லித்தரும் பாடங்களிலிருந்து விலகி, தங்கள் குறிக்கோளை அடைய, தங்கள் மனசாட்சியின் குரலுக்குப் பணிய, தங்களுக்கென பாதைகளை உருவாக்கிக் கொள்ளும் பல்லாயிரம் பேர் இன்னும் இவ்வுலகில் இருக்கத்தான் செய்கிறார்கள்.

பழக்கமான, பத்திரமான பாதையில் பலரும் பயணம் செய்யும்போது, புதுப் பாதைகளை வகுத்துக்கொண்டு பயணம் செய்வோரைப்பற்றி சிந்திக்கும்போது, Robert Frost என்ற ஆங்கிலக் கவிஞர் எழுதிய “பயணிக்காத பாதை” (The Road Not Taken) என்ற கவிதை நம் நினைவுக்கு வருகிறது:

அந்த மஞ்சள் காட்டில் இரு பாதைகள் பிரிந்தன.

இரண்டிலும் ஒரே நேரத்தில் பயணம் செய்வது

என்னால் முடியாது எனத் தெரியும்.

ஒரு பாதையில் பயணம் துவக்கினேன்;

மற்றொன்றில் பிறகு பயணிக்கலாம் என்று

அப்போது எண்ணியிருந்தேன்.

மற்றொரு பாதையில் பயணிக்க

நான் மீண்டும் இவ்விடம் வருவேனா என்ற

சந்தேகம் எனக்குள்...

நான் சென்ற பாதை...

பலரும் பயன்படுத்தாத, பயணிக்காத பாதை என்று

புரிந்து கொண்டேன்.

பல ஆண்டுகள் சென்று,

நிறைவான ஒரு பெருமூச்சுடன் நான் இதைச் சொல்வேன்:

காட்டில் இரு பாதைகள் பிரிந்தன.

மற்றவர் அதிகம் செல்லாத

ஒற்றையடி பாதையில் நான் பயணித்தேன்!

அதுவே என் வாழ்வில்

பெரும் மாற்றங்களை உருவாக்கியது!

தனியொரு பாதையை அமைத்து, இறைவாக்கினராக வாழ்ந்த திருத்தூதர் பவுல் இன்றைய 2ம் வாசகத்தில், உடலில் தைத்த முள்ளைப்போல் தன்னை வதைக்கும் ஒரு பெருங்குறையைப் பற்றி பேசுகிறார். அந்தக் குறையை நீக்கும்படி அவர் இறைவனை வேண்டியபோது, இறைவன் அவரிடம், "என் அருள் உனக்குப் போதும்; வலுவின்மையில்தான் வல்லமை நிறைவாய் வெளிப்படும்" - 2 கொரி. 12:9 என்று கூறியதையும் வெளிப்படையாகப் பகிர்ந்துகொள்கிறார். திருத்தூதர் பவுலைப்போல பல்லாயிரம் இறைவாக்கினர்கள், இறைவனின் அருளை மட்டுமே நம்பி வாழ்ந்ததை, அதேவண்ணம் வாழ, நம்மைத் தூண்டிவருவதை, இவ்வேளையில் நன்றியோடு எண்ணிப்பார்ப்போம்.

பலரும் செல்லாத பாதைகளில், தனித்து தங்கள் பயணத்தை மேற்கொண்ட வீர உள்ளங்களுக்கு...

அப்பயணங்களின் வழியே, புதிய பாதைகளை அடுத்தத் தலைமுறைகளுக்கு வகுத்துத் தந்த வழிகாட்டிகளுக்கு...

உலகம் காட்டும் வழிகளில் ஓடிக்கொண்டிருக்கும் கூட்டத்திலிருந்து விலகி, இறைவன் காட்டும் வழியில் சென்றதால் புறக்கணிக்கப்பட்ட புண்ணியவான்களுக்கு...

வன்கண்ணும் கடின இதயமும் கொண்ட மக்கள் செவிசாய்த்தாலும், சாய்க்காவிட்டாலும் (எசே. 2: 4-5) இறைவார்த்தையைத் துணிவுடன் எடுத்துரைத்த இறைவாக்கினர்களுக்கு... இன்று இறைவனிடம் சிறப்பாக நன்றி சொல்வோம்.

இன்றைய நற்செய்தியின் இறுதிப் பகுதியில் நமக்கு ஓர் எச்சரிக்கையும் தரப்பட்டுள்ளது. அங்கே உடல் நலமற்றோர் சிலர்மேல் கைகளை வைத்துக் குணமாக்கியதைத் தவிர வேறு வல்ல செயல் எதையும் இயேசுவால் செய்ய இயலவில்லை. அவர்களது நம்பிக்கையின்மையைக் கண்டு அவர் வியப்புற்றார் (மாற்கு 6:6) என்று நற்செய்தியில் வாசிக்கிறோம். அற்புதங்களை ஆற்ற வல்ல இறைவனையே கட்டிபோட்டுவிடும் நமது முற்சார்பு முடிவுகளை அகற்றி, மூடப்பட்டக் கல்லறைகளாக மாறியிருக்கும் நமது உள்ளங்களை இறைவன் திறந்து, நமக்கு உயிர் தர வேண்டும் என்று உருக்கமாக மன்றாடுவோம்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.