2018-07-07 16:55:00

மத்திய கிழக்கின் பெருந்துயர்களில் மௌனம் காப்பதற்கு கண்டனம்


ஜூலை,07,2018. அண்மை கிழக்கு நாடுகளுக்குச் சன்னலாக அமைந்துள்ள பாரி நகருக்கு, நாம் திருப்பயணிகளாக, பெரும்துன்ப சூழல்களில் வாழ்கின்ற நம் சபைகள், மக்கள் மற்றும் அனைவரையும் நம் இதயங்களில் தாங்கி வந்துள்ளோம். அவர்கள் அனைவரிடமும், நாங்கள் உங்களுக்கு நெருக்கமாக இருக்கின்றோம் என, அவர்களிடம் சொல்கிறோம். விண்ணின் விடியலாகிய ஆண்டவர் மத்திய கிழக்கிலிருந்து நம்மைச் சந்திக்க வந்தார். அங்கிருந்தே உலகெங்கும் விசுவாச ஒளி பரவியது. ஆன்மீகம் மற்றும் துறவு வாழ்வின் ஊற்றுகள் அங்கிருந்தே வந்தன. எனினும் அப்பகுதி அண்மை ஆண்டுகளாக, போர், வன்முறை மற்றும் அழிவின் இருள் மேகங்களாலும், ஆக்ரமிப்பு மற்றும் பல்வேறு அடிப்படைவாத நிகழ்வுகளாலும், கட்டாயப் புலம்பெயர்வு மற்றும் புறக்கணிப்புகளாலும் போர்த்தப்பட்டுள்ளது. முடிவில்லாத இத்துன்பங்கள் அனைத்தும், பலரின் மௌன உடன்பாட்டிற்கு மத்தியில் இடம்பெறுகின்றன. தங்களின் சொந்த பூமியைவிட்டுச் செல்லும் மக்களின் நிலமாக மத்திய கிழக்கு மாறியுள்ளது. கிறிஸ்தவர்களின் இருப்புமே மறையக்கூடிய ஆபத்து உள்ளது. கடவுளின் ஒளி உலகின் இருளை விரட்டுவதாக என்ற செபத்துடன் இந்த நாளை நாம் தொடங்கியுள்ளோம். புனித நிக்கொலாஸ் திருப்பண்டத்தின் முன்னர், ஒரே திருஅவையின் அடையாளமாக, ஒரு விளக்கை ஏற்றியுள்ளோம். நாம் இன்று, ஒன்றாக, நம்பிக்கையின் சுடரை ஏற்ற விரும்புகிறோம். உங்களுக்கு அமைதி உரித்தாகுக. எருசலேம் புனித நகருக்காக சிறப்பாகச் செபிப்போம். அங்கே அமைதி நிலவுவதாக.

கடும்துன்பங்கள் மத்தியில் புறக்கணிப்புநிலை

எருசலேமில் அமைதி நிலவுவதாக. ஆபேல் போன்று, இன்று இருக்கும் அனைவரின் அழுகையும் இதுவே. நான் என் சகோதரனுக்கு காவலாளியா எனச் சொல்வதற்கு, மத்திய கிழக்கிலும், உலகில் எந்தப் பகுதியிலும், நமக்கு உரிமையே கிடையாது. புறக்கணிப்பு, கொலை செய்கின்றது. விடாஉறுதியுடன் கொலைசெய்யும் நிலைக்குப் பாராமுகமாய் இருப்பதற்கு எதிராக நம் குரல்களை உயர்த்த விரும்புகிறோம். தங்களின் கண்ணீர்களைத் துடைக்க மட்டுமே முடிந்தவர்களுக்கு மற்றும், ஒன்றும் செய்ய இயலாதவர்களுக்கு ஆதரவாக குரல் எழுப்புவோம். அதிகாரம் அல்லது செல்வங்களுக்காக, தங்கள் நிலங்கள் பறிக்கப்படும்போது, துன்பப்படும் மற்றும் அமைதியாய் இன்று கண்ணீர் சிந்தும் மத்திய கிழக்கிற்காக குரல் கொடுக்க விரும்புகிறோம். சிறியவர்கள், எளியவர்கள், காயமுற்றோர், மற்றும் கடவுள் சார்ந்துள்ள அனைவர் சார்பாக, கடவுளிடம், அங்கே அமைதி நிலவுவதாக. இவ்வாறு செபித்து, தனது மறையுரையை நிறைவு செய்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : வத்திக்கான் செய்திகள்








All the contents on this site are copyrighted ©.