2018-07-10 15:47:00

அத் லிமினா சந்திப்பு குறித்து வெனெசுவேலா ஆயர்கள்


ஜூலை,10,2018. வருகிற செப்டம்பர் 10ம் தேதியன்று, வத்திக்கானில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களைச் சந்திக்கவிருக்கும் நேரம், நாட்டின் நிலைமை மற்றும் ஒவ்வொரு மறைமாவட்டத்தின் வாழ்வு பற்றி, ஓர் உடன்பிறப்பு உணர்வில் கலந்துரையாடுவதாக அமைந்திருக்கும் என்று, வெனெசுவேலா நாட்டு ஆயர்கள் கூறியுள்ளனர்.

வெனெசுவேலா தலைநகர் கரகாசில் இவ்வாரத்தில் ஆண்டு நிறையமர்வு கூட்டத்தை நடத்திவரும் ஆயர்கள், வருகிற செப்டம்பர் 4ம் தேதி முதல் 17ம் தேதி வரை இடம்பெறவிருக்கும் அத் லிமினா சந்திப்பையொட்டி வெளியிட்டுள்ள மேய்ப்புப்பணி சுற்றறிக்கையில், இவ்வாறு குறிப்பிட்டுள்ளனர்.

வெனெசுவேலா நாடு, கடும் நெருக்கடிகளை அனுபவித்துவரும்வேளை, நாட்டின் மிக ஏழை, எளிய மக்களின் குரலை திருத்தந்தையிடம் எடுத்துச் செல்வதாகவும், சுதந்திரம், நீதி மற்றும் அமைதிக்காக ஏங்கும் மக்களோடு ஆயர்கள் நெருங்கிய ஒத்துழைப்பாளர்களாக இருப்பதை திருத்தந்தை உணரும்படிச் செய்யவிருப்பதாகவும் ஆயர்களின் அறிக்கை கூறுகின்றது.

மேய்ப்புப்பணியில் வெனெசுவேலா மக்களுக்கு ஆதரவாக, புதிய ஒளியைப் பெறுவதற்காக, அத் லிமினா சந்திப்பு நடைபெறுவதால், ஆயர்கள், சுற்றுலா பயணிகளாகவோ அல்லது சாதாரண அலுவலகர்களாகவோ இச்சந்திப்புக்குச் செல்லவில்லை எனவும், அவ்வறிக்கை கூறுகின்றது.    

ஆதாரம் : வத்திக்கான் செய்திகள்








All the contents on this site are copyrighted ©.