2018-07-10 15:50:00

ஜப்பானில் வெள்ளத்தில் இறந்தவர்களுக்கு திருத்தந்தை செபம்


ஜூலை,10,2018. ஜப்பான் நாட்டில் பெய்த கனமழை, வெள்ளம் மற்றும் நிலச்சரிவு காரணமாக, குறைந்தது 122 பேர் உயிரிழந்துள்ளவேளை, இதில் இறந்தவர்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களுக்கு, தனது செபங்களையும், ஆறுதலையும் தெரிவித்துள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

கடந்த 35 ஆண்டுகளிலே, தற்போது பெய்த கனமழையால், பெருமளவான  உயிர்சேதமும், பொருள்சேதமும் ஏற்பட்டுள்ளதையடுத்து, பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு திருத்தந்தையின் செபங்களையும், ஒருமைப்பாட்டுணர்வையும் தெரிவிக்கும் தந்திச் செய்தியை, திருத்தந்தையின் பெயரில், திருப்பீட செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்கள் அந்நாட்டிற்கு அனுப்பியுள்ளார்.

ஜப்பானில், குறிப்பாக, ஹிரோஷிமா பகுதியில் ஜூலை 5ம் தேதி தொடங்கிய கன மழை  மற்றும் வெள்ளம், தற்போது நின்றிருந்தாலும், அவற்றின் பாதிப்பு கடுமையாக உள்ளது என செய்திகள் கூறுகின்றன.

ஆயிரக்கணக்கான வீடுகள் சேதமடைந்துள்ளன. ஏறத்தாழ 17 ஆயிரம் வீடுகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. ஏறத்தாழ 23 ஆயிரம் பேர் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். மேலும், ஜப்பான் பிரதமர் Shinzo Abe அவர்கள், சிறப்பு பேரிடர் நிவாரணப் பணிகள் இடம்பெறும் என அறிவித்துள்ளதுடன், மத்திய கிழக்கு மற்றும் ஐரோப்பாவுக்குச் செல்லும் பயணத்தையும் இரத்து செய்துள்ளார்.

ஆதாரம் : வத்திக்கான் செய்திகள்








All the contents on this site are copyrighted ©.