2018-07-10 15:42:00

பானமா உலக இளையோர் நிகழ்வில் திருத்தந்தை


ஜூலை,10,2018. உங்களுக்கு அருகில் இருப்பவர்களில் கிறிஸ்துவின் முகத்தைக் காணும்போது, நீங்களும் நல்ல சமாரியர்கள் போன்று இருக்கின்றீர்கள் என, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இச்செவ்வாயன்று வெளியிட்ட டுவிட்டர் செய்தியில் கூறியுள்ளார்.

மேலும், பானமா நாட்டில் 2019ம் ஆண்டு, சனவரி 22ம் தேதி முதல் 27ம் தேதி வரை நடைபெறவிருக்கும் உலக இளையோர் நாள் நிகழ்வுக்கு, அந்நாட்டு அரசும், ஆயர்களும் விடுத்த அழைப்பை ஏற்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அந்நாடு செல்லவுள்ளார் என்று, திருப்பீட தகவல் தொடர்பாளர் Greg Burke அவர்கள் அறிவித்துள்ளார்.

பானமா நாட்டின் பானமா நகரில், உலக இளையோர் நாள் தொடங்கிய அடுத்த நாள், அதாவது சனவரி 23ம் தேதி பானமா செல்லும் திருத்தந்தை, 27ம் தேதி வரை அந்நாட்டில் இருப்பார். இந்த உலக இளையோர் நாள், “நான் ஆண்டவரின் அடிமை; உம் சொற்படியே எனக்கு நிகழட்டும் (லூக்.1,38)”என்ற தலைப்பில் சிறப்பிக்கப்படவிருக்கின்றது.

பானமாவில் திருத்தந்தை கலந்துகொள்ளும் இந்நிகழ்வுகள், அவர் கலந்துகொள்ளும் மூன்றாவது உலக இளையோர் நாள் நிகழ்வுகள் ஆகும். 2013ம் ஆண்டில் பிரேசில் நாட்டில் நடைபெற்ற உலக இளையோர் நாளில் கலந்துகொண்டுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

போலந்து நாட்டின் கிரக்கோவில் 2016ம் ஆண்டு நடைபெற்ற உலக இளையோர் நாள் கொண்டாட்டத்தின் நிறைவு திருப்பலியில், அடுத்த உலக இளையோர் நாள், 2019ம் ஆண்டில் பானமா நாட்டில் சிறப்பிக்கப்படும் என்று திருத்தந்தை அறிவித்தார்.

ஆதாரம் : வத்திக்கான் செய்திகள்








All the contents on this site are copyrighted ©.