சமூக வலைத்தளங்கள்:

RSS:

வத்திக்கான் வானொலி

உலகோடு உரையாடலில் திருத்தந்தை மற்றும் திருஅவையின் குரல்

மொழி:

திருஅவை \ ஆசியா

கர்தினால் ஜோசப் கூட்ஸ் அவர்களுக்கு கராச்சியில் வரவேற்பு

கர்தினால் ஜோசப் கூட்ஸ் அவர்களுக்கு கராச்சி பேராயர் இல்லத்தில் வழங்கப்பட்ட வரவேற்பு - REUTERS

11/07/2018 16:14

ஜூலை,11,2018. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வழங்கிய கர்தினால்கள் பொறுப்பை அண்மையில் ஏற்ற 14 பேரில், மூன்று இத்தாலிய கர்தினால்களுக்கு, இத்தாலிய அரசுத் தலைவர், செர்ஜோ மாத்தரெல்லா (Sergio Mattarella) அவர்கள், ஜூலை 11, இப்புதன் காலை, அரசுத்தலைவர் மாளிகையில் வரவேற்பு விருந்தளித்தார்.

இத்தாலிய அரசுத்தலைவர் மாளிகையில் புதிய கர்தினால்கள்

திருத்தந்தையின் பிரதிநிதியாக, உரோம் மறைமாவட்ட ஆயராகப் பணியாற்றும் கர்தினால் ஆஞ்செலோ தே தொனாத்திஸ், புனிதர் நிலை வழிமுறைகளை ஒருங்கிணைக்கும் பேராயத்தின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள கர்தினால் ஆஞ்செலோ பெச்சு, மற்றும் அக்கிலா உயர்மறைமாவட்டப் பேராயர் கர்தினால் ஜியூசப்பே பெத்ரோக்கி ஆகிய மூவருக்கும் இத்தாலியப் பாரம்பரியத்தின்படி இவ்விருந்து வழங்கப்பட்டது.

பாகிஸ்தான் கர்தினாலுக்கு வரவேற்பு

மேலும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களிடமிருந்து, அண்மையில் கர்தினால் பொறுப்பைப் பெற்ற, பாகிஸ்தான் கர்தினால் ஜோசப் கூட்ஸ் அவர்களுக்கு, ஜூலை 10 இச்செவ்வாயன்று, பாகிஸ்தானில் சிறப்பான வரவேற்பு வழங்கப்பட்டது என்று UCA செய்தி .கூறுகிறது.

இச்செவ்வாய் அதிகாலை 1 மணிக்கு கராச்சி, ஜின்னா பன்னாட்டு விமான நிலையத்தை அடைந்த கர்தினால் கூட்ஸ் அவர்களை வரவேற்க, பெண்களும், குழந்தைகளும் உட்பட, மக்கள் திரளாக கூடியிருந்தனர் என்றும், அந்நாட்டு மரபு வழி வரவேற்பு அவருக்கு வழங்கப்பட்டதென்றும் UCA செய்தி கூறுகிறது.

மத நம்பிக்கைக்காக துன்பங்களை அனுபவித்துவரும் பாகிஸ்தான் மக்களை திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தன் நினைவில் கொண்டிருப்பதால், தங்களுக்கு புதிய கர்தினாலை வழங்கியுள்ளார் என்று கராச்சி மறைமாவட்டத்தின் முன்னாள் தலைமை அருள்பணியாளர் ஆர்தர் சார்ல்ஸ் அவர்கள் கூறினார்.

கர்தினால் கூட்ஸ் அவர்கள், பேராயர் இல்லத்திற்குச் செல்லும் வழியில், நான்கு இடங்களில் மேடைகள் அமைக்கப்பட்டு வழங்கப்பட்ட வரவேற்புகள் ஒவ்வொன்றிலும் நூற்றுக்கணக்கில் மக்கள் கூடியிருந்தனர் என்று சொல்லப்படுகிறது.

ஆதாரம் : UCAN / வத்திக்கான் செய்திகள்

11/07/2018 16:14