ஜூலை,11,2018. ஜூலை 7ம் தேதி, கடந்த சனிக்கிழமை, இத்தாலியின் பாரி நகரம், கிழக்கையும் மேற்கையும் கிறிஸ்தவ ஒன்றிப்பில் இணைத்த ஒரு நகராக மாறியது, மறக்கமுடியாத அனுபவம் என்று, கீழை வழிபாட்டு முறை பேராயத்தின் தலைவர், கர்தினால் லியோனார்தோ சாந்த்ரி அவர்கள், வத்திக்கான் நாளிதழுக்கு அளித்த பேட்டியில் கூறினார்.
பாரி நகரம், அசிசி நகராக மாறியது
மத்தியக் கிழக்கிலும், உலகிலும் அமைதி நிலவவேண்டும் என்ற மையக்கருத்துடன் பாரி நகரில் நடைபெற்ற கிறிஸ்தவ ஒன்றிப்பு வழிபாட்டு நாளையொட்டி, வத்திக்கான் நாளிதழ் L'Osservatore Romanoவுக்கு கர்தினால் சாந்த்ரி அவர்கள் அளித்த பேட்டியில், ஜூலை 7ம் தேதி, பாரி நகரம், அமைதியின் மையமான அசிசி நகராக மாறியது என்று குறிப்பிட்டார்.
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களும், ஏனைய முதுபெரும் தந்தையரும் இணைந்துவந்து செபித்தது, மிக அதிக அளவில் துன்பங்களை அனுபவித்து வரும் மத்தியக் கிழக்குப் பகுதியையும், இன்னும் ஏனைய நாடுகளையும் உலக அரசுகளின் கவனத்திற்கு மீண்டும் ஒருமுறை கொணர்ந்தது என்று, கர்தினால் சாந்த்ரி அவர்கள், தன் பேட்டியில் குறிப்பிட்டார்.
பாரி நகரம், கத்தோலிக்கர்கள், ஆர்த்தடாக்ஸ் சபையினர் இருவருக்கும் பொதுவான புனிதத்தலம் என்பதாலும், இந்நகரில் உள்ள புனித நிக்கோலஸ், மற்றும், மரியன்னை, உலகின் பல பகுதிகளிலிருந்து, குறிப்பாக மத்தியக் கிழக்குப் பகுதியிலிருந்து பக்தர்களை ஈர்த்து வருகின்றனர் என்றும், கர்தினால் சாந்த்ரி அவர்கள், தன் பேட்டியில் சுட்டிக்காட்டினார்.
ஆதாரம் : வத்திக்கான் செய்திகள்
சமூக வலைத்தளங்கள்: