2018-07-11 15:54:00

பொலிவியா - கர்தினால் பிலோனி: மறைபரப்புப்பணியின் மையம், இயேசு


ஜூலை,11,2018. மீட்பு வரலாற்றில் இறைவன் எப்போதும் முதல் அழைப்பை விடுப்பதையும், அதற்கு, மனிதர்கள் பதிலிருக்கும்போது, இறைவனின் ஆசீர் இறங்கிவருவதையும் காண்கிறோம் என்று, நற்செய்தி அறிவிப்புப்பணி பேராயத்தின் தலைவர் கர்தினால் பெர்னாண்டோ பிலோனி அவர்கள் பொலிவியா நாட்டில் மறையுரையாற்றினார்.

மறைபரப்புப் பணி என்றால் என்ன?

ஜூலை 10, இச்செவ்வாய் முதல், 14, வருகிற சனிக்கிழமை முடிய, பொலிவியா நாட்டின் சாந்தா க்ரூஸ் தெ லா சியேரா (Santa Cruz de la Sierra) எனும் நகரில் நடைபெறும் அமெரிக்க மறைபரப்புப்பணி மாநாட்டின் துவக்கத் திருப்பலியை தலைமையேற்று நடத்திய கர்தினால் பிலோனி அவர்கள் தன் மறையுரையில் இவ்வாறு கூறினார்.

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் சார்பாக, இந்த மாநாட்டில் பங்கேற்கும் கர்தினால் பிலோனி அவர்கள், மறைபரப்புப் பணி என்றால் என்ன? அறிவிப்பதும், சாட்சியமாவதும், விளிம்பில் இருப்போர் மற்றும் வறியோர் மீது கவனம் செலுத்துதல் ஆகிய கருத்துக்களில் தன் மறையுரையை வழங்கினார்.

வார்த்தைகளைவிட வாழ்வே சிறந்த நற்செய்தி

இன்றைய உலகில், ஆயிரமாயிரம் வார்த்தைகளைக் கொண்டு போதிப்பதைக் காட்டிலும், நம்பகத்தன்மையுடன் வாழ்வது, பெரும் சாட்சியமாகவும், நற்செய்தியைப் பறைசாற்றும் சிறந்த வழியாகவும் அமையும் என்று கர்தினால் பிலோனி அவர்கள் தன் மறையுரையில் வலியுறுத்திக் கூறினார்.

ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் அமெரிக்க மறைப்பணி மாநாடு, 2013ம் ஆண்டு வெனிசுவேலா நாட்டில் நடைபெற்றது. அதற்கு முந்தைய மாநாடுகள், ஆர்ஜென்டீனா, குவாத்தமாலா மற்றும் ஈக்குவதோர் ஆகிய நாடுகளில் நடைபெற்றுள்ளன.

ஆதாரம் : வத்திக்கான் செய்திகள்








All the contents on this site are copyrighted ©.