சமூக வலைத்தளங்கள்:

RSS:

வத்திக்கான் வானொலி

உலகோடு உரையாடலில் திருத்தந்தை மற்றும் திருஅவையின் குரல்

மொழி:

வத்திக்கான் \ நிகழ்வுகள்

கர்தினால் Jean-Louis Tauran அவர்களின் அடக்கத் திருப்பலி

கர்தினால் Jean-Louis Tauran அவர்களின் அடக்கத் திருப்பலியில் இறுதிச் சடங்கை நிகழ்த்தும் திருத்தந்தை பிரான்சிஸ்

12/07/2018 15:25

ஜூலை,12,2018. பல்சமய உரையாடல் திருப்பீட அவையின் தலைவராகப் பணியாற்றி வந்த கர்தினால் Jean-Louis Tauran அவர்கள் ஜூலை 5, கடந்த வியாழனன்று இறைவனடி சேர்ந்ததையடுத்து, அவரது அடக்கத் திருப்பலி, ஜூலை 12 இவ்வியாழன், வத்திக்கான் புனித பேதுரு பசிலிக்காவில் நடைபெற்றது.

காலை 10.45 மணிக்கு துவங்கிய இத்திருப்பலியை, கர்தினால் ஆஞ்செலோ சொதானோ அவர்கள் தலைமையேற்று நடத்தினார்.

இரக்கமுடையோர் பேறுபெற்றோர், தூய்மையான உள்ளத்தோர் பேறுபெற்றோர், அமைதி ஏற்படுத்துவோர் பேறுபெற்றோர் என்று இயேசு வழங்கிய பேறுபெற்றோர் வாக்கியங்களில் பல, கர்தினால் Tauran அவர்களின் வாழ்வில் காணப்பட்டன என்று கர்தினால் சொதானோ அவர்கள் தன் மறையுரையில் சுட்டிக்காட்டினார்.

கர்தினால் Tauran அவர்கள் வாழ்வில் பல நன்மைகளைப் பெற்றிருந்ததைப்போல, துன்பங்களையும் பெற்றிருந்ததை எடுத்துரைத்த கர்தினால் சொதானோ அவர்கள், "இறைவா, நீர் என்னிடமிருந்து எடுத்துக்கொண்டவற்றைக் குறித்து நான் முறையிடவில்லை, மாறாக, நீர் அளித்தவற்றிற்கு நன்றி கூறுகிறேன்" என்று புனித அகஸ்டின் பயன்படுத்திய செபத்தை கர்தினால் Tauran அவர்களும் கூறியிருப்பார் என்று தன் மறையுரையில் குறிப்பிட்டார்.

திருப்பலியின் இறுதியில், 11.45 மணியளவில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் பசிலிக்காவிற்கு வருகை தந்து, கர்தினால் Tauran அவர்களின் உடலுக்கு இறுதிச் சடங்குகளை நிறைவேற்றினார்.

கர்தினால் Tauran அவர்களின் அடக்கத் திருப்பலியில், வத்திக்கானில் பணியாற்றும் கர்தினால்கள், ஆயர்கள் ஆகியோருடன், அவரது உடன்பிறந்த சகோதரி Genevie've Dubert அவர்களும் கலந்துகொண்டார்.

தன் 75வது வயதில் இறையடி சேர்ந்த கர்தினால் Taruran அவர்களின் மறைவையடுத்து, கர்தினால்களின் எண்ணிக்கை 225 ஆகவும், இவர்களில் திருத்தந்தையைத் தேர்ந்தெடுக்கும் உரிமை பெற்றவர்கள் 124 ஆகவும் மாறியுள்ளன.

ஆதாரம் : வத்திக்கான் செய்திகள்

12/07/2018 15:25