2018-07-12 15:41:00

200வது ஆண்டு விழா கொண்டாடும் எழும்பூர் அரசு கண் மருத்துவமனை!


ஜூலை,12,2018. உலகின் மிக தொன்மையான மருத்துவமனைகளில் ஒன்றான சென்னை எழும்பூர் அரசு கண் மருத்துவமனை, அதன் 200வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.

1809ம் ஆண்டு லண்டனில் துவங்கப்பட்ட மார்பீல்டு கண் மருத்துவமனைக்கு அடுத்தபடியாக, 1819ல், சென்னையில், டாக்டர் ராபர்ட் ரிச்சர்ட்சனால் சென்னை அரசு கண் மருத்துவமனை தொடங்கப்பட்டது.

இந்த மருத்துவமனை, தெற்காசிய நாடுகளில் முதலில் துவக்கப்பட்டது என்பதும், உலக அளவில் இரண்டாவதாக துவக்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கன.

இந்த மருத்துவமனையில்தான் டாக்டர் கிரிக் பேட்ரிக் என்பவரால் ‘மெட்ராஸ் ஐ’ எனப்படும் கண் நோய் முதன் முதலில் கண்டுபிடிக்கப்பட்டது. இந்தியாவிலேயே முதன்முறையாக 1948-ஆம் ஆண்டில் இந்த மருத்துவமனையில் கண் வங்கி தொடங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, தானம் பெறப்படும் கண்களைப் பொருத்தும் அறுவைச் சிகிச்சையும் முதன்முறையாக இந்த மருத்துவமனையில்தான் நடைபெற்றது.

இந்த மருத்துவமனையில் அமைந்துள்ள அருங்காட்சியகத்தில் 1819, 1910, 1920-ஆம் ஆண்டுகளில், நோயாளிகளுக்கு ஏற்பட்ட நோய்கள் குறித்து, அப்போதைய மருத்துவக் கண்காணிப்பாளர்களால் எழுதப்பட்ட விவரங்கள், சிகிச்சை விவரங்கள் உள்ளிட்டவை காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

1985ம் ஆண்டு முதல், இதுவரை, 2.6 இலட்சம் பேருக்கு, கண்புரை அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டுள்ளன. இந்த மருத்துவமனையில் முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், இதுவரை, ரூ.2.78 கோடி செலவில் 2,945 பயனாளிகள் பயன்பெற்றுள்ளனர்.

வரலாற்று சிறப்பு மிக்க எழும்பூர் கண் மருத்துவனையின் 200வது ஆண்டு தொடக்க விழா ஜூலை 11, இப்புதன்கிழமை நடைபெற்றது.

ஆதாரம் : தினமணி / வத்திக்கான் செய்திகள்








All the contents on this site are copyrighted ©.