2018-07-12 14:38:00

இமயமாகும் இளமை : பல்கலைக்கழக மாணவர்களின் உலக சாதனை


அண்ணா பல்கலைக்கழக மாணவர்கள் உருவாக்கிய, 'தக் ஷா' ஆளில்லா விமானம், தொடர்ந்து ஆறு மணி நேரம் பறந்து, உலக சாதனை படைத்துள்ளது. சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின், குரோம்பேட்டை எம்.ஐ.டி. கல்லுாரியும், 'இந்திய ஆட்டோமோட்டிவ் இன்ஜினியர்கள்' கூட்டமைப்பான, எஸ்.ஏ.ஐ. இந்தியா அமைப்பின் தென் மண்டல பிரிவும் இணைந்து, ஆளில்லா விமான வடிவமைப்பு போட்டியை, சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் ஜூலை 11, இப்புதனன்று நடத்தின. இந்நிகழ்ச்சியில், எம்.ஐ.டி. கல்லுாரியின் விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் மாணவர்கள் தயாரித்த, புகைப்பட கருவி பொருத்தப்பட்ட, தக்ஷா ஆளில்லா குட்டி விமானத்தை, தொடர்ந்து பல மணி நேரம் பறக்க விடும் முயற்சி நடந்தது. காலை ஒன்பது மணிக்கு விமானம் பறக்கவிடப்பட்டது. உலக சாதனை முயற்சி என்பதால், ஒரு குறிப்பிட்ட இடத்தில், நான்கு திசைகளிலும் புகைப்பட கருவிகள் பொருத்தப்பட்டு, அந்த இடத்தில் தரையில் இருந்து, பத்து முதல், பதினைந்து அடி உயரம் வரை, விமானம் நிலைநிறுத்தப்பட்டு, தொடர்ந்து 'ரிமோட் கன்ட்ரோல்' வழியாக பறக்கவிடப்பட்டது. ஆறு மணி நேரம், ஏழு நிமிடம், நாற்பத்தைந்து வினாடிக்கு, குட்டி விமானம் பயணத்தை நிறுத்தியது. எந்த குட்டி விமானமும் பறக்காதவகையில், 'தக்ஷா' விமானம், நீண்ட நேரம் பறந்து, உலக சாதனை படைத்தது. இயல்பைவிட அதிக வேகத்தில், பலமான காற்று தொடர்ந்து வீசிய நிலையிலும், இந்த சாதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மற்ற குட்டி விமானங்கள், பேட்டரியால் இயங்கும் வகையில் தயார் செய்யப்பட்டது. தக் ஷா விமானம், ஆறு கிலோ எடையில், எரிபொருள் நிரப்பி, அதில் இருந்து, மின்சாரம் தயாரித்து இயங்கும் வகையில், மொத்தம் 18 கிலோ எடையுடன் உருவாக்கப்பட்டு உள்ளது. வெள்ள மீட்புப் பணி, இராணுவப் பணி, வேளாண் பணியில் பல ஏக்கர் நிலத்துக்கு உரம் துாவுதல், உறுப்பு தானத்துக்கு, உறுப்புகளை எடுத்து செல்வது போன்ற பல பணிகளுக்கு குட்டி விமானங்கள் பயன்படுத்தப்படும். அண்ணா பல்கலைக்கழகத்தின் குட்டி விமானங்கள், குரங்கணி மலை தீ விபத்து, சென்னை பெரு வெள்ளம், உத்தரகாண்ட் வெள்ளம், மதுரை கிரானைட் விவகாரம் உள்ளிட்டவற்றில், ஆய்வு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளன. மேலும், இவை, பெரியளவில் மக்கள் கூடும் நிகழ்வுகள், விழாக்கள், மாநாடுகளில், பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு பணியிலும் பயன்படுத்தப்பட்டுள்ளன. இந்த நிகழ்வில், 90 அணியினர், நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து, குட்டி விமான மாடல்களை காட்சிக்கு வைத்தனர் (தினமலர்).

ஆதாரம் : வத்திக்கான் செய்திகள்








All the contents on this site are copyrighted ©.