2018-07-12 15:53:00

சுற்றுச்சூழல் பேரழிவுக்குரிய எச்சரிக்கைகள் விடப்பட்டுள்ளன


ஜூலை,12,2018. ஜப்பானில் நிகழ்ந்த அணுகுண்டு பேரழிவு உட்பட, மனித வரலாற்றில் பல பேரழிவுகள் நிகழ்ந்துள்ளன என்றும், தற்போது சுற்றுச்சூழல் பேரழிவு நிகழப்போவதை உணர்த்தும் முதல் எச்சரிக்கைகள் விடப்பட்டுள்ளன என்றும் மியான்மார் கர்தினால் சார்ல்ஸ் மாங் போ அவர்கள் பீதேஸ் செய்திக்கு அறிக்கையொன்றை அனுப்பியுள்ளார்.

தான் வழங்கும் குறிப்புக்கள், உலக வங்கி அளித்துள்ள புள்ளிவிவரங்களின் அடிப்படையில் கூறப்படுகின்றன என்பதை தெளிவுபடுத்திய கர்தினால் போ அவர்கள், தற்போதைய நிலை தொடர்ந்தால், 2050ம் ஆண்டுக்குள் 15 கோடிக்கும் அதிகமான மக்களுக்கு ஒரு கிண்ணம் நீரும் கிடைக்காமல் போகும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.

செல்வம் கொழிக்கும் நாடுகள், எதிர்காலத்தைக் குறித்து எவ்வித அக்கறையுமின்றி, இயற்கையை அளவுக்கதிகமாக பயன்படுத்தி வருவதால், வளரும் நாடுகளும், வறுமைப்பட்ட நாடுகளும் துன்புற்று வருகின்றன என்று கர்தினால் போ அவர்கள் கவலை வெளியிட்டார்.

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வெளியிட்ட 'இறைவா உமக்கே புகழ்' என்ற திருமடல், நாம் வாழும் ஆபத்தான காலத்திற்கு தகுந்த வழிகாட்டி என்று கூறிய கர்தினால் போ அவர்கள், செல்வந்தர்கள் கேட்க விரும்பாத உண்மைகளைப் பேச, திருத்தந்தையைப் போல நாம் ஒவ்வொருவரும் அழைக்கப்பட்டுள்ளோம் என்று எடுத்துரைத்தார்.

இவ்வுலகை அழிவுக்கு இட்டுச்செல்லும் வகையில், பணமும், அகந்தையும் இணைந்து உருவாக்கியுள்ள பந்தத்தை உடைப்பதற்கு, நல்மனம் கொண்டோர் அனைவரோடும் கத்தோலிக்கத் திருஅவை பந்தங்களை உருவாக்கவேண்டும் என்று யாங்கூன் பேராயர் கர்தினால் போ அவர்கள் அழைப்பு விடுத்துள்ளார்.

ஆதாரம் : Fides / வத்திக்கான் செய்திகள்








All the contents on this site are copyrighted ©.