2018-07-14 15:34:00

சுவீடன் திருஅவை, புலம்பெயர்ந்தவர் திருஅவை


ஜூலை,14,2018. “மனித சமுதாயத்தின் ஒரு நகர்வு : புலம்பெயர்ந்தவர்களும், அவர்களைப் பற்றிய தகவல்களும்” என்ற தலைப்பில், சுவீடன் நாட்டின் ஸ்டாக்கோமில், ஐரோப்பாவில் புலம்பெயர்ந்தோர் பணிக்குப் பொறுப்பான ஆயர்கள் மற்றும் பிரதிநிதிகள் கூட்டம் ஒன்றை நடத்தி வருகின்றனர்.

ஐரோப்பிய ஆயர் பேரவையின் புலம்பெயர்ந்தவர் பணிக்குழுவின் தலைவரான, ஸ்டாக்கோம் கர்தினால் Anders Arborelius அவர்களின் அழைப்பின் பேரில், ஜூலை 13, இவ்வெள்ளியன்று ஆரம்பித்துள்ள இக்கூட்டம், ஜூலை 15, இஞ்ஞாயிறன்று நிறைவடையும்.

இக்கூட்டத்தில் தொடக்கவுரையாற்றிய கர்தினால் Arborelius அவர்கள், சுவீடன் கத்தோலிக்க திருஅவை, புலம்பெயர்ந்தவர் திருஅவை என்றும், இத்திருஅவையிலுள்ள பெரும்பாலான கத்தோலிக்கர், வேறு நாடுகளிலிருந்து குடியேறியவர்கள் என்றும், மேலும் சிலர், சுவீடனில் பிற கிறிஸ்தவ சபைகளிலிருந்து வந்தவர்கள் என்றும் கூறினார்.

கிறிஸ்தவர்களாகிய நாம் எல்லாரும், கடவுளின் இறையாட்சிப் பாதையில் திருப்பயணிகள் எனவும், இந்த அருளை உண்மையிலேயே நாம் உணர்ந்தால், புலம்பெயர்ந்தவர்களை மனத்தாராளத்துடன் வரவேற்போம் எனவும், கர்தினால் Arborelius அவர்கள் கூறினார்.

புலம்பெயரும் மக்களுக்கும், அவர்களை ஏற்பவர்களுக்கும் இடையே நிலவும் உறவு, பற்றி இக்கூட்டத்தில் ஆராயப்பட்டு வருகின்றது.

ஆதாரம் : வத்திக்கான் செய்திகள்








All the contents on this site are copyrighted ©.