2018-07-17 15:35:00

இமயமாகும் இளமை - இந்திய வரலாற்றில் தடம் பதித்த இளம்பெண்


இந்திய விளையாட்டு வரலாற்றில் ஒரு புதிய சாதனையை நிகழ்த்தியுள்ளார், அஸ்ஸாம் மாநிலத்தைச் சேர்ந்த, 18 வயது நிரம்பிய, ஹீமா தாஸ் (Hima Das) என்ற இளம்பெண். இவர், பின்லாந்தின் டாம்பெரே (Tampere) எனும் நகரில், ஜூலை 10 முதல் 15 முடிய நடைபெற்ற 20 வயதுக்குட்பட்டவர் உலக விளையாட்டுப் போட்டிகளில், 400 மீட்டர் ஓட்டத்தில், தங்கப் பதக்கத்தை வென்றுள்ளார்.

இதுவரை நடைபெற்றுள்ள ஒலிம்பிக், மற்றும், உலகப் போட்டிகளில், ஹாக்கி, டென்னிஸ், பாட்மின்டன், குத்துச்சண்டை, பளு தூக்குதல், துப்பாக்கிச் சுடுதல் போன்ற பிரிவுகளில், தங்கம், வெள்ளி, வெண்கலப் பதக்கங்களை வென்றுள்ளது இந்தியா. ஆனால், தடகள ஒட்டப்பந்தயங்களில், இந்தியா, இதுவரை, ஒருமுறைகூட தங்கம் வென்றதில்லை. அந்தக் குறையை, இளம்பெண் ஹீமா தாஸ் அவர்கள், ஜூலை 12, கடந்த வியாழனன்று நிறைவு செய்தார்.

அஸ்ஸாம் மாநிலத்தின் நாகாவோன் (Nagaon) என்ற ஊரில், ஓர் எளிய குடும்பத்தில் 6வது குழந்தையாகப் பிறந்த ஹீமா அவர்கள், தேசிய அளவிலும், ‘காமன்வெல்த்’ போட்டிகளிலும் பதக்கங்களை வென்றுள்ளார். ஓட்டப் பந்தயங்களில் தன் பயிற்சியைத் துவங்கி இரண்டு ஆண்டுகளே ஆன நிலையில், இளம்பெண் ஹீமா அவர்கள் அடைந்துள்ள முன்னேற்றம் தன்னை வியக்க வைத்துள்ளது என்று, அவரது பயிற்சியாளர் நிப்போன் (Nipon) அவர்கள் கூறியுள்ளார்.

தங்க மகள் ஹீமா தாஸ் அவர்களைப் பற்றிய செய்தி வெளியானதும், இந்தியர்கள், 'கூகுள்' வழியே, இவரைப்பற்றிய விவரங்களைத் தேடினர். அவர்களில் பெரும்பாலானோர் தேடிய விவரம், ஹீமா தாஸ் அவர்களின் சாதி என்ன என்ற விவரம்! சாதி வெறி என்ற நஞ்சை இளம் தலைமுறையினருக்கும் ஊட்டி வளர்க்க முயலும் இந்திய சமுதாயத்தில், இளம்பெண் ஹீமா தாஸ் அவர்கள், இன்னும் பல சிகரங்களை அடையவேண்டும் என்று வாழ்த்துவோம்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.