2018-07-18 15:21:00

இமயமாகும் இளமை.....: சோதனைக்கு நடுவிலும் சாதிக்கும் மாணவன்


சீனிவாச பாண்டியன் என்ற அந்த மாணவருக்கு வயது 18 ஆகிறது. தினமும் இருவேளை இன்சுலின் ஊசி போட்டுக்கொள்ள வேண்டிய அவர், வறுமை காரணமாக ஒரு வேளை மட்டுமே போட்டுக் கொள்ளக்கூடிய சூழ்நிலை. அப்பாவும் இறந்துவிட்டார்.

ஒட்டல் ஒன்றில் அறைகளை சுத்தம் செய்யும் வேலையிலிருக்கும் அம்மாவின் நாலாயிரம் ரூபாய் சம்பளத்தில்தான் வீட்டு வாடகை உள்ளிட்ட அனைத்து செலவுகளையும் செய்து கொண்டு, தாயும் பிள்ளையுமாக இருக்கின்றனர்.

நடந்து முடிந்த பிளஸ் டூ தேர்வில் ஆயிரத்து நுாறு மதிப்பெண்கள் எடுத்து, மதுரை ஷெனாய் நகரில் உள்ள மாநகராட்சி பள்ளியில் முதல் மாணவராக வந்துள்ளார். நல்ல உள்ளங்களின் உதவியால், தற்போது, மதுரை தியாகராசர் கல்லுாரியில் இளங்கலை பட்டப்படிப்பில் நுழைந்துள்ளார்.

வாழ்வில் வெல்வதற்கு ஒரே வழி, படித்து முன்னேறிக் காட்டுவது மட்டுமே என்பதை இலட்சியமாகக் கொண்ட பாண்டியன், படிப்பில் நல்ல அக்கறை காட்டி வருகிறார். ஒரே ஒரு மாடி அறை கொண்ட வீட்டில், சின்ன தடுப்பு வைத்து சமைத்துக் கொள்கின்றனர் தாயும் மகனும். ஆனால், வீடு முழுவதும் நிறைந்து காணப்படுவது, புத்தகங்கள் புத்தகங்கள் புத்தகங்கள்தான். ஓர் அலமாரி நிறைய புத்தகங்கள் நிறைந்து காணப்படுகிறது.

‘சீனிவாசன் சினிமாவிற்கு போவதில்லை, வெளியே சுற்றுவதில்லை, டி.வி. கூட பார்ப்பதில்லை, எப்ப பார்த்தாலும் படிச்சிகிட்டுதான் இருப்பான்’, என்கிறது ஊரும் உறவும்.

''என் அம்மா மாதிரி இருக்கிறவங்க நிம்மதியா, மகிழ்ச்சியா வாழ வழிகாண வேண்டும், என்னை மாதிரி படிக்க நினைக்கிற மாணவர்களுக்கு பணம் ஒரு தடையாக இருக்கக்கூடாது, ஏழ்மை என்பதே இருக்கக்கூடாது. இதற்கெல்லாம் திட்டம் போட்டு செயல்படணும். அதற்கு நான் கலெக்டராகணும், ஆவேன். அதற்கு ரொம்பவே தயாராகிட்டு இருக்கேன்'' என்கிறார் சீனிவாச பாண்டியன் உறுதியாக.

அவரின் ஆர்வமும், ஆவலும் நிறைவேறட்டும் என நாமும் வாழ்த்துவோம்.

ஆதாரம் : வத்திக்கான் செய்திகள்








All the contents on this site are copyrighted ©.