சமூக வலைத்தளங்கள்:

RSS:

வத்திக்கான் வானொலி

உலகோடு உரையாடலில் திருத்தந்தை மற்றும் திருஅவையின் குரல்

மொழி:
வத்திக்கான் வானொலி

முகப்பு பக்கம் / தி௫ச்சபை

எதிர்காலத் திருத்தந்தைக்கு என் நிபந்தனையற்ற மரியாதையையும், கீழ்ப்படிதலையும் தெரிவித்துக் கொள்கிறேன் - திருத்தந்தை 16ம் பெனடிக்ட்


பிப்28,2013. என் சகோதர கர்தினால்களாகிய உங்களுடன் நான் வாழ்ந்த எட்டு ஆண்டுகளில், ஒளிமிகுந்த அழகான நாட்களும், மேகங்கள் சூழ்ந்த நாட்களும் இருந்தன என்று திருத்தந்தை 16ம் பெனடிக்ட் கூறினார்.
கடந்த 600 ஆண்டுகளுக்கும் மேலாக, திருஅவை வரலாற்றில் இடம்பெறாத ஒரு நிகழ்வு இவ்வியாழனன்று வத்திக்கானில் இடம்பெற்றுள்ளது. அதாவது, தலைமைப் பொறுப்பில் இருக்கும் திருத்தந்தை, தலைமைப் பீடத்தை விட்டு இறங்கும் நிகழ்வு அது.
கடந்த எட்டு ஆண்டுகளாக கத்தோலிக்கத் திருஅவையின் தலைமைப் பொறுப்பை ஏற்று பணியாற்றிய திருத்தந்தை 16ம் பெனடிக்ட் தன் பணிக்காலத்தின் இறுதிநாளன்று காலை உரோம் நகரில் உள்ள, மற்றும் அண்மைக் காலங்களில் உலகெங்கிலுமிருந்து உரோம் நகர் வந்துள்ள கர்தினால்களை ஒரு குழுவாக இறுதி முறை திருப்பீடத்தில் சந்தித்தார்.
அவர்களுக்கு வழங்கிய சிறு உரையில், தன் உளமார்ந்த நன்றியை அவர்களுக்குத் தெரிவித்தபின், திருஅவை பற்றிய ஒரே ஒரு எண்ணத்தை அவர்களுடன் பகிர்வதாகக் கூறினார்.
"திருஅவை என்பது திட்டமிட்டு செய்து முடிக்கப்பட்ட ஒரு மேசை போன்ற அமைப்பு அல்ல, மாறாக, அது வாழும் உண்மை; வாழும் ஏனைய உயிர்களைப் போல் திருஅவையும் வளர்ந்து வருகிறது, இந்த உயிரின் இதயத் துடிப்பாக இருப்பவர் கிறிஸ்து" என்று Romano Guardini என்ற இறையியலாளர் எழுதியிருந்த வார்த்தைகளை மேற்கோள் காட்டிப் பேசியத் திருத்தந்தை, வாழும் திருஅவைக்கு ஓர் எடுத்துகாட்டை இப்புதன் மறைபோதகத்தின்போது கூடியிருந்த இலட்சக்கணக்கான மக்களிடம் காண முடிந்தது என்று கூறினார்.
கன்னி மரியா இறைவார்த்தையை நம்பிக்கையுடன் உள்ளத்தில் ஏற்றதால், இறைமகனை தன் உதரத்தில் தாங்க முடிந்தது, அதேபோல், மக்களும் இறைவார்த்தையை நம்பிக்கையுடன் ஏற்று வாழும்போது, அவர்களது பல்வேறு போராட்டங்கள் மத்தியிலும் இறைவனின் இருப்பு அவர்கள் மத்தியில் வாழ்வதை உணர முடிகிறது என்று எடுத்தரைத்தார் திருத்தந்தை.
தன் உரையின் இறுதியில் கர்தினால்கள் அனைவரோடும் தான் செபத்தில் ஒன்றித்திருப்பதாகக் கூறியத் திருத்தந்தை, அடுத்துவரும் நாட்களில் சகோதர கர்தினால்கள் அனைவரும் தூய ஆவியாரின் தூண்டுதல்களுக்குத் தங்களையே முற்றிலும் கையளிக்க தனது சிறப்பான செபங்கள் உண்டு என்ற உறுதியளித்தார்.
இங்கு அமர்ந்திருக்கும் கர்தினால்களாகிய உங்கள் மத்தியில் எதிர்காலத் திருத்தந்தையும் அமர்ந்திருக்கக்கூடும் என்ற வாய்ப்பு உள்ளதால், அவருக்கு என் நிபந்தனையற்ற மரியாதையையும், கீழ்ப்படிதலையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்று தன் உரையை நிறைவு செய்தத் திருத்தந்தை 16ம் பெனடிக்ட், அனைவருக்கும் தன் அப்போஸ்தலிக்க ஆசீரை வழங்கினார்.
கூட்டத்தின் இறுதியில், 144 கர்தினால்களும், மற்றும் திருத்தந்தையுடன் திருப்பீடப் பணியில் ஈடுபட்டிருந்த அதிகாரிகள் அனைவரும் ஒவ்வொருவராகத் திருத்தந்தையைத் தனிப்பட்ட முறையில் சந்தித்து, தங்கள் வாழ்த்துக்களைத் தெரிவித்தனர்.