சமூக வலைத்தளங்கள்:

RSS:

வத்திக்கான் வானொலி

உலகோடு உரையாடலில் திருத்தந்தை மற்றும் திருஅவையின் குரல்

மொழி:
வத்திக்கான் வானொலி

முகப்பு பக்கம் / திருஅவை / உலகம்

தம்பதியர் லூயிஸ் மார்ட்டின், மரி செலி கெரின் மார்ட்டின்


அக்.17,2015. அக்டோபர் 18, இஞ்ஞாயிறு 89வது உலக மறைபரப்பு ஞாயிறு. உலகின் அனைத்து மக்களும் தங்களின் மூலங்களுக்குச் சென்று தங்களின் கலாச்சார விழுமியங்களைக் காக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. இத்தேவையை நிறைவேற்றும் சவாலை திருஅவை இக்காலத்தில் எதிர்கொள்கின்றது என்று இந்த மறைபரப்பு ஞாயிறுக்கென திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வெளியிட்ட செய்தியில் கூறியிருக்கிறார். இஞ்ஞாயிறன்று திருஅவையில் மற்றுமொரு சிறப்பான நிகழ்வு நடைபெறவுள்ளது. மறைபரப்பு நாடுகளுக்குப் பாதுகாவலர்களில் ஒருவராகிய புனித குழந்தை தெரேசாவின் பெற்றோர் லூயிஸ் மார்ட்டின், மரி செலி கெரின் மார்ட்டின் ஆகிய இருவரையும் புனிதர்கள் என அறிவிக்கவுள்ளார் திருத்தந்தை. திருஅவையில் திருமணமானவர்கள் அருளாளர்களாக, புனிதர்களாக அறிவிக்கப்பட்டிருக்கின்றபோதிலும்,  ஒரு தம்பதியர் இருவரையும் ஒரே நேரத்தில் புனிதர்களாக அறிவிப்பது திருஅவை வரலாற்றில் இதுவே முதன்முறையாகும். குடும்பம் குறித்த 14வது உலக ஆயர்கள் மாமன்றத்தில் கலந்துகொள்ளும் தந்தையருடன் வத்திக்கான் தூய பேதுரு வளாகத்தில் திருப்பலி நிறைவேற்றி, லூயிஸ் மார்ட்டின் தம்பதியர், இன்னும், பேச்சாளர்கள் புதல்வியர் சபையை நிறுவிய இத்தாலிய அருள்பணியாளர் வின்சென்சோ குரோஸ்ஸி(1845-1917), திருச்சிலுவை சகோதரிகள் சபையின் இஸ்பானிய அருள்சகோதரி அமல மரியின் மரியா(1926-1998) ஆகியோரை புனிதர்கள் என அறிவிப்பார் திருத்தந்தை. மார்ட்டின் தம்பதியரைப் புனிதர் நிலைக்கு உயர்த்துவது குறித்த ப்ரெஞ்ச் பத்திரிகையாளர் Caroline Pigozziன் கேள்விக்குப் பதிலளித்த திருத்தந்தை, மார்ட்டின் தம்பதியர் தங்கள் வாழ்வு முழுவதும், தங்கள் இல்லத்திலும், வெளியிலும், இயேசுவில் நம்பிக்கை வைப்பதன் அழகுக்குச் சான்று பகர்ந்தனர், இவர்கள் நற்செய்தி அறிவிக்கும் தம்பதியர், ஏழைகளுக்குத் தங்கள் இதயத்தையும், இல்லத்தையும் திறந்தவர்கள், இவர்கள் தங்களின் ஐந்து குழந்தைகளுடன், தங்களின் நேரத்தையும், பணத்தையும், சக்தியையும் தேவையில் இருந்தவர்க்குச் செலவழித்தவர்கள், இத்தம்பதியரின் கடைசி மகளான புனித குழந்தை தெரேசா மீது நான் மிகுந்த பக்தி வைத்திருக்கிறேன், ஏனென்றால், இந்த இளம் கார்மேல் சபை அருள்சகோதரி, இறையருள் பற்றி அதிகமாகப் பேசும் புனிதர்களில் ஒருவராய் இருக்கிறார், இதனால்தான் நான் இப்புனிதரிடம் செபிப்பேன் என்று கூறினார்.

லிசிய தெரஸ், குழந்தை தெரேசா, சிறுமலர் என்றெல்லாம் போற்றிப் புகழப்படும் புனிதரின் அப்பாவும் அம்மாவும் ஒரே நிகழ்வில் புனிதர்களாக அறிவிக்கப்பட்டனர். புனித குழந்தை தெரேசாவின் அப்பா லூயிஸ் மார்ட்டின்(1823-1894), அம்மா மரி செலி கெரின் மார்ட்டின்  (Marie Zelie Guerin Martin 1831-1877)ஆகிய இருவருமே உயர்ந்த விழுமியங்களுக்குத் தங்களை அர்ப்பணித்து விசுவாச வாழ்வுக்குச் சிறந்த எடுத்துக்காட்டாய்த் திகழ்ந்தவர்கள், ஏழைகள் மீது மிகுந்த அக்கறை காட்டியவர்கள், திருமண வாழ்வுக்கும், குடும்ப ஆன்மீகத்திற்கும் மிகச் சிறந்த எடுத்துக்காட்டுகளாய் வாழ்ந்தவர்கள், 19 வருட திருமண வாழ்வில் தினமும் திருப்பலிக்குச் செல்வது, செபம், உண்ணாநோன்பைக் கடைப்பிடிப்பது, ஓய்வு நாளைப் பிரமாணிக்கமாய் கடைப்பிடிப்பது, வயதானவர்களையும், நோயாளிகளையும் சந்திப்பது, ஏழைகளை தங்கள் வீட்டிற்குள் வரவேற்பது என அனைத்திலும் திறந்து விளங்கியவர்கள் என்று, திருப்பீட புனிதர் பேராயத் தலைவர் கர்தினால் ஆஞ்சலோ அமாத்தோ அவர்கள் வத்திக்கான் வானொலியில் கூறினார்.

புனிதர்கள் லூயிஸ் மார்ட்டின், மரி செலி ஆகிய இருவரின் குடும்பங்களுமே இராணுவப் பின்னியைக் கொண்டவை. லூயிஸின் தாத்தா ப்ரெஞ்ச் பேரரசர் நெப்போலியன் இராணுவத்தில் இருந்தவர். லூயிஸ் தனது சிறு வயதில் பல ப்ரெஞ்ச் இராணுவ மையங்களில் வாழ்ந்தவர். அதனால் வாழ்வில் நன்னெறியிலும், கட்டுப்பாட்டிலும் வல்லவர். லூயிசின் தந்தையும் இராணுவத்தில் இருந்தவர். இராணுவத்திலிருந்து ஓய்வுபெற்ற பின்னர், பிரான்சின் நார்மண்டி மாநிலத்தில் அலென்சோன் நகரில் குடியேறினார். லூயிசும் அந்நகரிலே கல்வி கற்றார். தனது இருபதாவது வயதில் ஸ்ட்ராஸ்பூர்க் சென்று கடிகாரங்கள் செய்வது, பழுதுபார்ப்பது மற்றும் அவற்றை வர்த்தகம் செய்யும் தொழிலைக் கற்றார். படிக்கும் காலத்தில், ஆல்ப்ஸ் மலையிலுள்ள புனித பெரிய பெர்னார்டு ஆதீனத்திற்குத் திருப்பயணமாகச் சென்றார். அந்த ஆதீன வாழ்வு இவரை எவ்வளவு தூரம் கவர்ந்திருந்தது என்றால் அங்கிருந்து ஒரு வெள்ளை ரோஜா மலரைக் கொண்டு வந்தார். அதை அவர் சாகும்வரை பத்திரமாகப் பாதுகாத்தார். இறைவனுக்குத் தன்னை முழுமையாக அர்ப்பணிக்க விரும்பி அந்த அகுஸ்தீன் சபை ஆதீனத்தில் சேர்வதற்கு விண்ணப்பித்தார். அப்போது அவருக்கு வயது 23. அந்த இடம் கடல்மட்டத்திற்கு ஆறாயிரம் அடி உயரத்தில் இருந்தது. இதனால் குளிர்காலத்தில் மைனஸ் இருபது டிகிரி குளிர் இருக்கும். எனினும் இங்கு சேர விண்ணப்பித்தார். ஆனால் இலத்தீன் மொழியைக் கற்று வரும்படி ஆதீனத் தலைவர் லூயிசிடம் கூறினார். அதனால் இவர் திரும்பி வந்து இலத்தீன் கற்கத் தொடங்கினார். ஆனால் அதை இடையிலே கைவிட்டார். துறவு ஆதீனத்திற்கும் அவர் செல்லவில்லை. எனவே தனது கைகடிகாரத் தொழில் படிப்பைத் தொடர்ந்தார். பாரிஸ் நகர் சென்று, 2 அல்லது 3 ஆண்டுகளுக்கு மேல் இத்தொழிலை நன்றாகக் கற்றார். பின்னர் அலென்சோன் நகர் சென்று சொந்தமாக வீடு ஒன்று வாங்கி குடியேறினார். இங்கு கைகடிகாரம் செய்தல், பழுதுபார்த்தல் ஆகிய தொழில்களைச் செய்ததோடு, நகைக் கடை ஒன்றையும் தொடங்கினார். சில சொத்துக்களையும் வாங்கினார். திருமணம் செய்துகொள்ளும் எண்ணம் இல்லாமலே இருந்தார். ஆனால் லூயிசின் தாய், தனது மகன் பற்றி வேறு மாதிரி கனவு கண்டார்.  

அலென்சோன் நகர் கையால் துணிகளில் கைவேலைப்பாடுகள் செய்வதற்கு புகழ் பெற்ற நகரம். இந்நகரில், துணிகளில் கைவேலைப்பாடுகள் செய்யும் ஓரிடத்தில லூயிசின் தாய் மரி செலியைச் சந்தித்தார். தனது மகனும் செலியைச் சந்திப்பதற்கு ஏற்பாடுகள் செய்தார். லூயிசும், செலியும் சந்தித்தனர். 1858ம் ஆண்டு ஜூலை 13ம் தேதியன்று திருமணமும் செய்து கொண்டனர். அப்போது லூயிசுக்கு வயது 34. செலிக்கு வயது 26. இதற்கிடையே, செலியும் திறமையானவர். ப்ரெஞ்ச் மொழி தேர்வில் 11 தடவைகளுக்கு பத்து தடவை முதல் மதிப்பெண்கள் பெற்றவர். துணிகளில் கைவேலைப்பாடுகள்  செய்வதிலும் திறமையானவர். செலியும் அருள்சகோதரியாக வேண்டுமென்றே விரும்பினார். ஆனால் முடியவில்லை. திருமணமான நாளில், கன்னியராக இருந்த தனது சகோதரியின் கன்னியர் இல்லம் சென்று கண்ணீரைச் சிந்தியிருக்கிறார். ஆயினும் பிற்காலத்தில் செலி தனது திருமண வாழ்வு குறித்து வருந்தியதே இல்லை. லூயிசுக்கும் செலிக்கும் திருமணமான பின்னர் முதல் பத்து மாதங்கள் இவர்கள் சகோதர சகோதரிகளாகவே வாழ்ந்தனர். பின்னர் இறைவன் இதை விரும்பவில்லை என்று இருவரும் உணர்ந்து திருமண வாழ்வைத் தொடங்கினர். 15 ஆண்டுகளில் இரு ஆண் குழந்தைகளும் ஏழு பெண் குழந்தைகளும் பிறந்தனர். ஆனால் ஜோசப் என்ற பெயர் கொண்ட இரு ஆண் குழந்தைகள் ஒரு வயதிலும், ஹெலன் என்ற பெண் குழந்தை ஐந்தரை வயதிலும், மெலானி எந்ற குழந்தை இரு மாதங்களுக்குள்ளும் இறந்தனர். இப்படி இவர்களின் ஒன்பது குழந்தைகளில் நால்வர் இறந்து விட்டனர். கடைக்குட்டியான புனித குழந்தை தெரேசா, மரி, பவுலின், லியோனி, செலின் ஆகிய  ஐந்து பெண் பிள்ளைகளும் அருள்சகோதரிகளாகி விட்டனர்.

மற்ற நான்கு குழந்தைகளும் சிறு வயதிலே இறந்தபோது ஊர் மக்கள் இனிமேல் குழந்தைகளைப் பெற்றுக்கொள்ள வேண்டாம் என்று சொன்ன போது, அவ்வார்த்தைகள் தனக்கு மிகுந்த கவலையைத் தந்ததாக செலி சொல்லியுள்ளார். இக்குழந்தைகளுக்கு வாழ்வு என்றென்றும் முடிந்துவிடவில்லை. வாழ்வு குறுகியது. துன்பங்கள் நிறைந்தது. ஆயினும் நாங்கள் எங்களின் குழந்தைகளை விண்ணகத்தில் சந்திப்போம் என்று செலி கூறியுள்ளார். வர்த்தகம் சம்பந்தமாக தந்தை லூயிஸ் அடிக்கடி பாரிஸ் சென்று விடுவார். அப்போதெல்லாம் குழந்தைகளையும், தொழிலையும் தனியாகவே கவனித்தார் செலி. தங்களின் துணி கைவேலைப்பாடுகள் நிறுவனத்தில் வேலை செய்ய வரும் தொழிலாளரின் குழந்தைகளையும் இவர் கவனித்துக் கொள்வார். இவர் யாரையும் புண்படுத்தமாட்டார். மலரந்த முகத்துடனே எப்போதும் இருப்பார்.

ப்ரெஞ்ச்-புருசியப் போர் நடைபெற்ற சமயத்தில் 1870ம் ஆண்டில் புருசியர்கள் பிரான்சை ஆக்ரமித்தனர். அலென்சோன் நகரின் வீடுகளில் அவர்கள் புகுந்தனர். இது நெப்போலியனின் வழிவந்த ப்ரெஞ்ச் படைவீரர்களுக்கு அவமானத்தைக் கொடுப்பதாக இருந்தது. நகரமே கைவிடப்பட்டு அனைவரும் கண்ணீர் சிந்தினர். அச்சமயத்தில் ஒன்பது படைவீரர்கள் லூயிஸ்-செலி வீட்டை ஆக்ரமித்திருந்தனர். அவர்களில் ஒருவர் இவர்கள் வீட்டிலிருந்த கடிகாரத்தை திருடி விட்டார். லூயிஸ் அவரைக் கையோடு பிடித்து கழுத்தைப் பிடித்து வீட்டைவிட்டு துரத்தி விட்டார். மறுநாள் லூயிஸ் ஒரு புகார் கொடுத்தார். அடுத்த நாள் ஓர் ஆணை பிறப்பிக்கப்பட்டது. வீடுகளைச் சூறையாடிவர்கள் சுட்டுக் கொல்லப்பட வேண்டுமென்று. மேலும், ஒரு ஜெர்மானியப் படைவீரர் இதற்காக ஏற்கனவே தூக்கிலிடப்பட்டுவிட்டார். உடனடியாக லூயிஸ் அதிகாரியிடம் சென்று, தனது புகாரைத் திரும்பப் பெற்றுக் கொண்டார். தனது கடிகாரத்தைத் திருடியவரைச் சுட வேண்டாமெனக் கேட்டுக்கொண்டார். இந்நிகழ்வு லூயிசின் உணர்வுகளைக் கொந்தளிக்க வைக்கும் என்று அவரின் மகள்கள் எதிர்பார்த்தனர். ஆனால் நிலைமை வேறு விதமாக இருந்தது. இந்த அமைதியான பண்பே லூயிஸ் ஆன்மாக்களை பின்னாளில் வெல்வதற்குக் காரணமானது.

19 ஆண்டுகள் திருமண வாழ்வுக்குப் பின்னர் தனது 46வது வயதில் 1877ம் ஆண்டு ஆகஸ்ட் 28ம் தேதி செலி இறந்தார். தனது தாயின் மரணம் பற்றி எழுதியுள்ள புனித குழந்தை தெரேசா, அப்போது எனக்கு வயது நான்கு. சகோதரிகளாகிய நாங்கள் ஐவரும் வயது வரிசைப்படி அம்மாவின் மரணப் படுக்கையருகில் முழந்தால்படியிட்டுச் செபித்துக் கொண்டிருந்தோம். எனது தந்தையும் எங்களுடன் இருந்தார். அவர் வாழ்வில் இருமுறை அழுது பார்த்துள்ளேன். அதில் ஒன்று எனது அம்மாவின் மரணம் என்று எழுதியுள்ளார். தாயில்லாத குழந்தைகள் மீது லூயிஸ் மிகுந்த பரிவுடன் நடந்துகொண்டார். செலியின் இறப்புக்குப் பின்னர் இக்குடும்பம் லிசியே நகரில் குடியேறியது. லூயிஸ் ஒருமுறை வர்த்தகத்திற்காக கான்ஸ்டான்டிநோபிள் சென்ற சமயம் எழுதிய கடிதத்தில், உங்கள் தந்தையிடமிருந்து ஆயிரம் முத்தங்கள். உங்களை அன்புகூரும் உங்கள் தந்தை உங்களை தனது இதயத்தில் தாங்கியுள்ளார். எனது இதயத்தோடு உங்களை அணைக்கிறேன் என்று எழுதியிருந்தார். லூயிஸ் தனது அனைத்து துன்பங்கள் மத்தியில் பொறுமை காத்தார். தனது முழு நம்பிக்கையையும் இறைவனில் வைத்தார். 1894ம் ஆண்டு ஜூலை 29ம் தேதி மாரடைப்பால் அமைதியான மரணத்தைத் தழுவினார் லூயிஸ். வாழ்வின் துன்பங்கள், இன்பங்கள் மத்தியில் இறைவனில் லூயிஸ் மார்ட்டின்- மரி செலி தம்பதியர் கொண்டிருந்த விசுவாசமும் நம்பிக்கையுமே வாழ்வை நடத்திச் சென்றுள்ளது. இறைபராமரிப்பு இவர்களின் பிள்ளைகளை மிகுந்த அக்கறையுடன் கவனித்துக் கொண்டது. இவ்விருவரின் உடல்களும் தோண்டி எடுக்கப்பட்டு, லிசியே நகரில் இவர்களின் மகள் புனித தெரேசாவின் பசிலிக்காவில் புதைக்கப்பட்டுள்ளது. 

இவ்வுலகத்தைவிட மேலான விண்ணக மதிப்புடைய ஒரு தாயையும், ஒரு தந்தையையும் இறைவன் எனக்குக் கொடுத்தார் என்ற புனித தெரேசாவின் வார்த்தைகள் புனிதர்கள் லூயிஸ் மார்ட்டின்-மரி செலி தம்பதியர் சமாதி மீது எழுதப்பட்டுள்ளன. தம்பதியர் தூய பெற்றோராய் வாழவும், உலகின் குடும்பங்களுக்காகவும் இத்தூயவர்களிடம் நாம் செபிப்போம்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி