சமூக வலைத்தளங்கள்:

RSS:

வத்திக்கான் வானொலி

உலகோடு உரையாடலில் திருத்தந்தை மற்றும் திருஅவையின் குரல்

மொழி:
வத்திக்கான் வானொலி

முகப்பு பக்கம் / திருத்தந்தை பிரான்சிஸ் / பயணங்கள்

பாங்கி பேராலய வளாகத்தில் இளையோரிடம் திருத்தந்தை பேசியவை


நவ.30,2015. பாங்கி பேராலய வளாகத்தில் ஒப்புரவு அருள் அடையாளம், மற்றும், திருவிழிப்பு வழிபாட்டில் கலந்துகொண்ட இளையோரிடம் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் மனம் விட்டுப் பேசியவை:

அன்பு நண்பர்களே, உங்கள் சார்பில் பேசிய உங்கள் நண்பர், உங்கள் அடையாளம் வாழை மரம் என்று குறிப்பிட்டார். வாழ்வின் அடையாளம், வாழை. சக்தி நிறைந்த கனிகளை எப்போதும் வழங்கி வாழ்வது, வாழை. வாழை, வளர்ச்சிக்கும், உறுதிக்கும் சிறந்த அடையாளம்.

நீங்கள் தேர்ந்தெடுக்கவேண்டிய பாதையைச் சுட்டிக்காட்டுவது, வாழை. இந்நாட்டில் நடக்கும் மோதல்கள், வெறுப்பு, பிளவு இவற்றை விட்டுவிட்டு உங்களில் சிலர் வெளியேற விழைவதாக உங்கள் நண்பர் சொன்னார். தப்பித்துச் செல்வது, எப்போதும் ஒரு தீர்வு ஆகாது! தப்பித்துச் செல்ல விழைவோர், வாழ்வளிக்கும் துணிவு இல்லாதவர்கள். வாழைமரம், வாழ்வளிக்கிறது, அதையும், தொடர்ந்து அளிக்கிறது.

"தந்தையே, நாங்கள் என்ன செய்வது? எப்படி இதைத் தடுப்பது?" என்று உங்களில் சிலர் கேட்கலாம். இரண்டு, மூன்று கருத்துக்களைக் கூற விழைகிறேன்.

முதலில், செபம். செபம் சக்தி வாய்ந்தது! செபம் தீமையை வெல்கிறது! செபம் உங்களை இறைவனுக்கருகில் கொணர்கிறது. நீங்கள் செபிக்கிறீர்களா? (இக்கேள்விக்கு, கூடியிருந்த இளையோர் 'ஆம்' என்று பதில் தந்தனர்). செபிக்க மறவாதீர்கள்!

இரண்டாவது, அமைதிக்காக உழைப்பது. அமைதி என்பது கையெழுத்திடப்பட்டு, மூடிவைக்கப்படும் ஓர் ஒப்பந்தப் பத்திரம் அல்ல, அது ஒவ்வொரு நாளின் நடைமுறை வாழ்க்கை! அமைதி ஒரு செயல், ஒரு கலை! நமது கைகளால், வாழ்வால் காட்டப்படும் ஒரு செயல்.

எப்போதும் வெறுப்பு இல்லாமல் வாழ்வது; தீமை செய்பவரையும் மன்னிப்பது போன்றவை, உங்களை வெற்றிக்கு அழைத்துச் செல்லும். (நீங்கள் வெற்றி அடைய விரும்புகிறீர்களா அல்லது, தோல்வியடைய விரும்புகிறீர்களா? என்று திருத்தந்தை கேட்டபோது, அனைவரும் "வெற்றியடைய விரும்புகிறோம்" என்று கூச்சலிட்டனர்.) அன்பாலும், மன்னிப்பாலும் நீங்கள் வாழ்வில் வெற்றிபெற்றவர்களாக இருப்பீர்கள். அன்பு தோல்வியடையாது.

இளையோரே, இன்று நாம் இந்த இரக்கத்தின் கதவைத் திறந்துள்ளோம். இறைவனின் இரக்கத்தில் நம்பிக்கை கொண்டு, இந்தக் கதவின் வழியே ஆலயத்திற்குள் செல்வோம். அங்கு, நாம் ஒப்புரவு அருள் அடையாளத்தைப் பெறுவோம்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி