சமூக வலைத்தளங்கள்:

RSS:

வத்திக்கான் வானொலி

உலகோடு உரையாடலில் திருத்தந்தை மற்றும் திருஅவையின் குரல்

மொழி:
வத்திக்கான் வானொலி

முகப்பு பக்கம் / திருஅவை / இந்தியா, இலங்கை

கடத்தப்பட்ட அ.பணி தாமஸ் விரைவில் விடுதலை செய்யப்படுவார்


மே,20,2016. ஏமன் நாட்டில், கடந்த மார்ச் மாதத்தில் தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட இந்திய சலேசிய அருள்பணியாளர் தாமஸ் உழுன்னலில் (Thomas Uzhunnalil) அவர்கள், உயிரோடு இருக்கிறார் எனவும், அவர் விடுதலை செய்யப்படும் காலம் நெருங்கியுள்ளது எனவும், இந்திய அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அருள்பணி தாமஸ் அவர்கள், பாதுகாப்பாக உள்ளார் என்றும், அவரின் விடுதலையை உறுதிசெய்வதற்கு கடைசி முயற்சிகள் இடம்பெற்று வருகின்றன என்றும், இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் அவர்கள் கூறியதாக, ஆசியச் செய்தி நிறுவனம் கூறியது.

ஏமன் நாட்டின் ஏடன் நகரில், அன்னை தெரேசா சபையினர் நடத்திய வயதானவர் இல்லத்தில், கடந்த மார்ச் 4ம் தேதி, ஆயுதம் ஏந்திய மனிதர்களால் கடத்தப்பட்ட அருள்பணி தாமஸ் உழுன்னலில் அவர்கள், ஐ.எஸ். இஸ்லாமிய அரசிடம் இல்லை, ஆனால், அவர், ஏமன் பகுதியில், அரசுப் படைகளுக்கு எதிராகப் போரிடும் புரட்சிக் குழுவிடம் உள்ளார், இது, Shiite Houthi புரட்சிக் குழுவாக இருக்கக்கூடும் என்று, ஆசியச் செய்தி வட்டாரங்கள் கூறுகின்றன. இந்தப் புரட்சிக்குழு, கடந்த ஓராண்டுக்கு மேலாக, ஏமன் அரசுக்கு எதிராகப் போராடி வருகிறது.

இதற்கிடையே, இந்த அருள்பணியாளர் விடுதலை செய்யப்படுவதற்கு, அதிகமான முயற்சிகளை எடுக்குமாறு, இந்திய ஆயர் பேரவை, அமைச்சர் சுவராஜ் அவர்களுக்கு, கடந்த மார்ச் 28ம் தேதி கடிதம் அனுப்பியது குறிப்பிடத்தக்கது.

ஆதாரம் : EWTN / வத்திக்கான் வானொலி