சமூக வலைத்தளங்கள்:

RSS:

வத்திக்கான் வானொலி

உலகோடு உரையாடலில் திருத்தந்தை மற்றும் திருஅவையின் குரல்

மொழி:
வத்திக்கான் வானொலி

முகப்பு பக்கம் / திருஅவை / இந்தியா, இலங்கை

அனைத்துத் துறையினராலும் அங்கீகரிக்கப்பட்டவர் அன்னை தெரேசா


செப்.,05,2016. நொபெல் அமைதி விருது வழியாக உலக சமுதாயத்தாலும், பாரத ரத்னா விருது மூலம் இந்திய அரசாலும் கௌரவிக்கப்பட்டுள்ள அன்னை தெரேசா, தற்போது தன் விசுவாசத்திற்காக புனிதராக அறிவிக்கப்பட்டுள்ளது, அனைத்துத் துறையிலும் அவர் அங்கீகரிக்கப்பட்டுள்ளதை காட்டுவதாக உள்ளது என்றார், இந்திய ஆயர் பேரவைத் தலைவர், கர்தினால் பசிலியோஸ் கிளீமிஸ்.

அன்னை தெரேசாவின் சமூகப் பணிகளில் நம்பிக்கைக் கொண்டோருக்கும், அவரின் விசுவாச வாழ்வில் நம்பிக்கைக் கொண்டோருக்கும் இந்த புனிதர் பட்டமளிப்பு நாள், முக்கியத்துவம் நிறைந்த ஒன்று என CNA செய்தி நிறுவனத்திற்கு வழங்கிய பேட்டியில் எடுத்துரைத்த கர்தினால் கிளீமிஸ் அவர்கள், புனித அன்னை தெரேசா, ஏழைகளுக்குப் பணிபுரிவதோடு தன் சேவையை நிறுத்திவிடவில்லை, மாறாக, ஏழைகளுக்கு ஆற்றவேண்டியப் பணியில் ஒவ்வொருவரின் பங்களிப்பையும் வலியுறுத்தினார் என்று கூறினார்.

அன்னையின் கைகளில், ஆயுதங்களை விட வலிமையான ஒரு கருவியை அனைவரும் பார்த்தனர், அதுவே இறைவனின் அன்பும் கருணையும் எனவும் கூறினார் கர்தினால் கிளீமிஸ்.

புனித அன்னை தெரேசா பராமரித்த ஏழைகளிலும் நோயாளிகளிலும், அவர், மதம், இனம், மொழி என எந்த பாகுபாட்டையும் காணவில்லை என்ற கர்தினால், அதே செய்தியுடனேயே இன்றும் திருஅவை இந்தியாவில் தன் பணிகளைத் தொடர்ந்து ஆற்றுகின்றது என்று கூறினார்.

இரக்கம் என்பது நம் அனைவரையும் ஒன்றிணைத்துக் கொண்டு வருகிறது, ஏனெனில் இரக்கம் தேவைப்படாத மனிதர் என்று எவரும் இல்லை, இறைவனின் கொடையாகிய இரக்கமே நம் ஒவ்வொருவரையும் ஆறுதல்படுத்தி நமக்குப் பலத்தை வழங்குகிறது என மேலும் கூறினார் இந்திய ஆயர் பேரவைத் தலைவர், கர்தினால் கிளீமிஸ்.

ஆதாரம் : CNA /வத்திக்கான் வானொலி