சமூக வலைத்தளங்கள்:

RSS:

வத்திக்கான் வானொலி

உலகோடு உரையாடலில் திருத்தந்தை மற்றும் திருஅவையின் குரல்

மொழி:
வத்திக்கான் வானொலி

முகப்பு பக்கம் / திருத்தந்தை பிரான்சிஸ் / எழுத்து வடிவில்

கிறிஸ்தவ ஒன்றிப்பு முதுபெரும்தந்தை பர்த்தலோமேயுவுக்கு விருது


டிச.07,2016. கிறிஸ்துவில் நம்பிக்கை கொண்டுள்ள அனைவரையும் ஒருங்கிணைக்கும் முயற்சியில், கிறிஸ்தவ ஒன்றிப்பு முதுபெரும் தந்தை முதலாம் பர்த்தலோமேயு அவர்கள் வெளிப்படுத்தியுள்ள ஆர்வம் போற்றுதற்குரியது என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் ஒரு வாழ்த்துச் செய்தியை அனுப்பியுள்ளார்.

நவம்பர் 6, இச்செவ்வாயன்று கொண்டாடப்பட்ட புனித நிக்கோலஸ் திருநாளையொட்டி, இத்தாலியின் பாரி மறைமாவட்டத்தில் அமைந்துள்ள புனித நிக்கோலஸ் பசிலிக்காவில், முதுபெரும் தந்தை பர்த்தலோமேயு அவர்களுக்கு, புனித நிக்கோலஸ் கிறிஸ்தவ ஒன்றிப்பு விருது வழங்கப்பட்டதை பாராட்டி, திருத்தந்தை, இந்த வாழ்த்துச் செய்தியை அனுப்பி வைத்தார்.

கீழைநாட்டவருக்கும், மேற்கத்திய நாட்டவருக்கும் நெருக்கமான புனித நிக்கோலஸ் திருநாளன்று இந்த விருது வழங்கப்படுவது பொருத்தம் என்று, திருத்தந்தை கூறிய வாழ்த்துக்களை, பாரி-பித்தோந்தோ (Bari-Bitonto) உயர் மறைமாவட்டத்தின் பேராயர் Francesco Cacucci அவர்கள், முதுபெரும் தந்தைக்கு வாசித்தளித்தார்.

அடிப்படைவாதப் போக்கு வளர்ந்துள்ள இன்றைய நாள்களில், ஒருவரை ஒருவர் புரிந்துகொள்ளுதல், ஒருங்கிணைதல் ஆகிய முயற்சிகளை அனைத்து மதங்களும், குறிப்பாக, கிறிஸ்தவப் பிரிவுகளும் மேற்கொள்வது அவசியம் என்று, கிறிஸ்தவ ஒன்றிப்பு விருது பெற்ற முதுபெரும் தந்தை பர்த்தலோமேயு அவர்கள், தன் ஏற்புரையில் கூறினார்.

மேலும், புனித நிக்கோலஸ் பசிலிக்காவில் நிகழ்ந்த திருப்பலியில் கலந்துகொண்ட முதுபெரும் தந்தை, மக்களை  வர்த்தகப் பொருள்களாக்கும் போக்கு, இறைவன் பெயரால் வளரும் மத அடிப்படைவாதம், முன்னேற்றம் என்ற பெயரால் உருவாகும் சுற்றுச்சூழல் சீரழிவு இவற்றைக் கண்டு நாம் மௌனம் காக்க முடியாது என்று தன் உரையில் குறிப்பிட்டார்.

ஆதாரம் : AsiaNews / வத்திக்கான் வானொலி