சமூக வலைத்தளங்கள்:

RSS:

வத்திக்கான் வானொலி

உலகோடு உரையாடலில் திருத்தந்தை மற்றும் திருஅவையின் குரல்

மொழி:
வத்திக்கான் வானொலி

முகப்பு பக்கம் / திருஅவை / இந்தியா, இலங்கை

இந்திய கத்தோலிக்கக் காரித்தாஸ், புற்றுநோயுற்றோருக்கு உதவிகள்


டிச.29,2016. இந்திய ஆயர் பேரவையின் சமுதாயக் கரமாகச் செயலாற்றும் கத்தோலிக்கக் காரித்தாஸ் அமைப்பு, வரும் 2017ம் ஆண்டு தவக்காலத்தில், புற்றுநோய் தடுப்பு, புற்றுநோயுற்றோருக்கு உதவிகள் என்ற முயற்சிகளைத் தீவிரப்படுத்த முடிவு செய்துள்ளது.

"வாழ்வுக்கு ஆம் என்றும், புற்றுநோய்க்கு இல்லை என்றும் சொல்லுங்கள்" என்ற மையக்கருத்துடன் மேற்கொள்ளப்படும் இந்த விழிப்புணர்வு முயற்சியால், வாழ்வை ஆதரித்து வளர்க்க முடிவு செய்துள்ளோம் என்று, காரித்தாஸ் இயக்குனர், அருள்பணி பிரடெரிக் டிசூசா அவர்கள் ஆசிய செய்தியிடம் கூறினார்.

இந்தியாவில் ஒவ்வோர் ஆண்டும் 7 இலட்சத்திற்கும் அதிகமானோர் புற்றுநோயால் பாதிக்கப்படுகின்றனர்; இவர்களில் 5,56,400 பேர் இறந்துவிடுகின்றனர் என்றும், தற்போது இந்தியாவில் ஏறத்தாழ 25 இலட்சம் மக்கள் இந்த நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் ஆசிய செய்திக்குறிப்பு கூறுகிறது.

புற்று நோயுற்றவர்களுக்கு உதவிகள் செய்யும் ஒரு முயற்சி, 2014ம் ஆண்டு, கேரள மாநிலத்தில் துவக்கப்பட்டு, அது நல்ல பலன்களை அளித்து வருவதால், அதே திட்டத்தை, இந்தியாவின் பல மாநிலங்களிலும் துவங்க, 2017ம் ஆண்டு முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்று, அருள்பணி பிரடெரிக் டிசூசா அவர்கள் தெரிவித்தார்.

1962ம் ஆண்டு இந்தியாவில் நிறுவப்பட்ட காரித்தாஸ் அமைப்பின் வழியே இதுவரை, 23,000த்திற்கும் அதிகமான திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன என்றும், இவற்றில், தவக்காலத்தில் மேற்கொள்ளப்படும் திட்டங்கள் நலம் தொடர்பான திட்டங்கள் என்றும் ஆசிய செய்தி கூறுகிறது.

ஆதாரம் : AsiaNews / வத்திக்கான் வானொலி