சமூக வலைத்தளங்கள்:

RSS:

வத்திக்கான் வானொலி

உலகோடு உரையாடலில் திருத்தந்தை மற்றும் திருஅவையின் குரல்

மொழி:
வத்திக்கான் வானொலி

முகப்பு பக்கம் / திருஅவை / ஆசியா

பேராயர் பீட்டர் பெர்னான்டோ தூத்துக்குடியில் நல்லடக்கம்


சன.02,2017. மறைந்த பேராயர் பீட்டர் பெர்னான்டோ அவர்கள், அன்பு, இரக்கம் நிறைந்தவராக விளங்கினார் என்று, அவரின் அடக்கத் திருப்பலியில் கலந்துகொண்டோர் கூறினர்.

தூத்துக்குடி பேராலய வளாகத்தில், இத்திங்கள்கிழமை காலையில் நிறைவேற்றப்பட்ட, பேராயர் பீட்டர் பெர்னான்டோ அவர்களின் அடக்கத் திருப்பலியில், பதினான்கு ஆயர்கள், நூற்றுக்கணக்கான அருள்பணியாளர்கள், அருள்சகோதரிகள், பொதுநிலையினர் என, பெருந்திரளானோர் பங்கேற்றனர்.

இத்திருப்பலியில் முன்னுரை வழங்கிய தூத்துக்குடி ஆயர் இவான் அம்புரோஸ் அவர்கள், பேராயர் பீட்டர், இறையியல் பேராசிரியர், உளவியல் மேதை, குரு மாணவர் பயிற்சியாளர், இறையழைத்தல் துறைத்தலைவர் போன்ற, பல துறைகளில் திறம்படப் பணிபுரிந்துள்ளார் என்பதைச் சுட்டிக்காட்டினார்.

மதுரைப் பேராயர் அந்தோனி பாப்புசாமி அவர்கள் தலைமையேற்ற இத்திருப்பலியில் மறையுரையாற்றிய திருச்சி ஆயர் அந்தோனி டிவோட்டா அவர்கள், அன்பே தன் வாழ்வின் இலக்கணம் என வாழ்ந்தவர் பேராயர் பீட்டர் என்றும், இவர் இறைவனோடு என்றும் ஒன்றித்திருந்தார் என்றும் குறிப்பிட்டார்.

திரு இருதயங்களின் பேராலயம் எனப்படும் சின்னக்கோயில் வளாகத்தில் நடைபெற்ற இத்திருப்பலிக்குப் பின், பேராயர் பீட்டர் பெர்னான்டோவின் உடல் பேராலயத்துக்குப் பவனியாக எடுத்துச் செல்லப்பட்டு, பேராலய நுழைவிலேயே நல்லடக்கம் செய்யப்பட்டது.

1939ம் ஆண்டு மார்ச் 22ம் தேதி, இடிந்தகரையில் பிறந்த பேராயர் பீட்டர் பெர்னான்டோ அவர்கள், 1971ம் ஆண்டு தூத்துக்குடி மறைமாவட்டத்தின் அருள்பணியாளராக திருப்பொழிவுச் செய்யப்பட்டார். 1996ம் ஆண்டு தூத்துக்குடி மறைமாவட்டத்தின் வாரிசுரிமை ஆயராக நியமிக்கப்பட்ட இவர், தூத்துக்குடியின் முன்னாள் ஆயர் அமலநாதரின் பணி ஓய்வுக்குப்பின், 1999ம் ஆண்டில் அம்மறைமாவட்டத்தின் ஆயராக பதவியேற்றார். 2003ம் ஆண்டில் மதுரை உயர் மறைமாவட்டத்தின் பேராயராக நியமிக்கப்பட்ட பேராயர் பீட்டர் பெர்னான்டோ அவர்கள், 2014ம் ஆண்டு பணி ஓய்வு பெற்றார். 2016ம் ஆண்டு, ஆண்டின் இறுதி நாளான, டிசம்பர் 31ம் தேதி, இறைபதம் சேர்ந்த பேராயரின் இறுதிச்சடங்கு, சனவரி 2ம் தேதி, இத்திங்களன்று தூத்துக்குடியில் இடம்பெற்றது.

ஆதாரம் : Ind.Sec/வத்திக்கான் வானொலி