சமூக வலைத்தளங்கள்:

RSS:

வத்திக்கான் வானொலி

உலகோடு உரையாடலில் திருத்தந்தை மற்றும் திருஅவையின் குரல்

மொழி:
வத்திக்கான் வானொலி

முகப்பு பக்கம் / திருத்தந்தை பிரான்சிஸ் / எழுத்து வடிவில்

பணம் அல்ல, பிறரை அன்பு கூர்வதே உன்னை செல்வராக்கும்


பிப்.07,2017. வருகிற மார்ச் முதல் நாள் தொடங்கும் தவக்காலத்திற்கென, “இறைவார்த்தை ஒரு கொடை. மற்ற மனிதர்களும் ஒரு கொடை” என்ற தலைப்பில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் எழுதியுள்ள தவக்காலச் செய்தி, இச்செவ்வாயன்று வெளியிடப்பட்டது.

இறைவார்த்தையிலும், அருளடையாளங்களிலும், மற்ற மனிதரிலும் கிறிஸ்துவைச் சந்திக்க நம்மையே புதுப்பித்துக் கொள்வதற்கும், நம் கண்களைக் கட்டிப்போடும் பாவத்தினின்று தூய்மையடைவதற்கும், தேவையில் இருப்போரில் கிறிஸ்துவைக் கண்டு அவர்களுக்குப் பணிசெய்வதற்கும் ஏற்ற காலம், தவக்காலம் என்றும், இச்செய்தியில் கூறியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

திருஅவை நமக்கு வழங்கும், நோன்பு, செபம், தர்மம் செய்தல் ஆகியவை வழியாக, நம் ஆன்மீக வாழ்வை ஆழப்படுத்தவும், முழு மனத்துடன், நாம் இறைவனிடம் திரும்பி வரவும், தவக்காலத்தில் அழைப்பு விடுக்கப்படுகின்றோம் என்றும், திருத்தந்தை கூறியுள்ளார்.  

லூக்கா நற்செய்தியில் கொடுக்கப்பட்டுள்ள, செல்வரும் இலாசரும் என்ற உவமையை மையப்படுத்தி, தனது தவக்காலச் செய்தியை வழங்கியுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், செல்வரைவிட, ஏழை மனிதர் இலாசரைப் பற்றி, நற்செய்தியில் எவ்வாறு விரிவாகக் கொடுக்கப்பட்டுள்ளது என்பதையும் விளக்கியுள்ளார்.

மற்ற மனிதர்களும் ஒரு கொடையே என்றும், மக்களோடு சரியான உறவு வைத்திருப்பது என்பது, மக்களின் மதிப்பை நன்றியுணர்வுடன் ஏற்பதில் அடங்கியுள்ளது என்றும், செல்வரின் வீட்டுக் கதவுக்கருகில் ஏழை மனிதர் இருப்பது, தொந்தரவு கிடையாது, ஆனால் அது மனமாற்றத்திற்கு அழைப்பு விடுப்பதாக உள்ளது என்றும் கூறியுள்ளார் திருத்தந்தை.

எந்த ஒரு மனிதரும், அவர் நம் அடுத்த வீட்டு நபரோ அல்லது நமக்குத் தெரியாத ஏழையோ, யாராய் இருந்தாலும், ஒவ்வொரு மனிதரும் ஒரு கொடை என்பதால், நம் இதயக் கதவைப் பிறருக்குத் திறக்குமாறு இந்த உவமை அழைப்பு விடுக்கின்றது என்று கூறியுள்ள திருத்தந்தை, தேவையில் இருக்கும் அனைவரின் முகத்திலும் கிறிஸ்துவைக் கண்டு, அவர்களுக்கு, நம் கதவுகளைத் திறப்பதற்கு, தவக்காலம் ஏற்ற காலம் என்று கூறியுள்ளார்.

நாம் ஒவ்வொருவரும், இத்தகைய மக்களை, ஒவ்வொரு நாளும் சந்திக்கிறோம், நாம் சந்திக்கும் ஒவ்வொரு வாழ்வும், ஏற்கப்படவும், மதிக்கப்படவும், அன்புகூரப்படவும் தகுதியுடைய ஒரு கொடை; வாழ்வை, குறிப்பாக, நலிந்தவர்களின் வாழ்வை வரவேற்று, அன்புகூர, நம் கண்களைத் திறப்பதற்கு, இறைவார்த்தை நமக்கு உதவுகின்றது என்றும் கூறியுள்ளார் திருத்தந்தை.

இலாசர் போன்று, அந்தச் செல்வருக்குப் பெயர் கொடுக்கப்படவில்லை, ஆனால், அவர் விலையுயர்ந்த ஆடை அணிந்தவராக, அவரின் செல்வச் செழிப்பு நற்செய்தியில்  விளக்கப்பட்டுள்ளது எனவும் கூறியுள்ள திருத்தந்தை, பணத்தின் மீது ஆசை வைப்பது எல்லாத் தீமைகளுக்கும் காரணம் (1திமொத்.6,10) என்ற புனித பவுலின் கூற்றையும் குறிப்பிட்டுள்ளார்.

நம்மை உண்மையான செல்வராக்குவது பணம் அல்ல, ஆனால் பிறரை அன்புகூர்வதே என்றும், தனது தவக்காலச் செய்தியில் குறிப்பிட்டு, மனமாற்றத்தின் உண்மையான பயணத்தில் தூய ஆவியார் நம்மை இட்டுச் செல்வாராக எனச் செபித்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி