சமூக வலைத்தளங்கள்:

RSS:

வத்திக்கான் வானொலி

உலகோடு உரையாடலில் திருத்தந்தை மற்றும் திருஅவையின் குரல்

மொழி:
வத்திக்கான் வானொலி

முகப்பு பக்கம் / வத்திக்கான் / உரைகள்

நம் துன்ப நேரங்களில் இறைவனோடு பேச வேண்டும்


பிப்.11,2017. நோய், துன்பம், பயம் போன்ற வாழ்வின் போராட்டங்களில், நாம் இறைவனோடு பேசும்போது, எளிதாக அவற்றைக் கடந்து செல்ல முடியும் என, திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்கள், லூர்து அன்னை திருத்தலத்தில் கூறினார்.

பிரான்ஸ் நாட்டின் லூர்து அன்னை திருத்தலத்தில், பிப்ரவரி 11, இச்சனிக்கிழமையன்று, 25வது உலக நோயாளர் தினத் திருப்பலியை நிறைவேற்றி, மறையுரையாற்றிய, கர்தினால் பரோலின் அவர்கள், “இதோ நான் இருக்கிறேன்” என, அன்னை மரியா கூறியதை மையப்படுத்தி, தன் சிந்தனைகளை வழங்கினார்.

இந்நாளில் சிறப்பிக்கப்பட்ட உலக நோயாளர் தினத்தின் தலைப்பான, "வல்லவராம் கடவுள் எனக்கு அரும்பெரும் செயல்கள் செய்துள்ளார் (லூக்.1:49)" என்பது பற்றியும் விளக்கிய கர்தினால் பரோலின் அவர்கள், இந்த உலக நாளின் 25வது ஆண்டு நிறைவை, இத்திருத்தலத்தில் சிறப்பிப்பது, இறைவனின் திருவருள் எனவும் தெரிவித்தார். இத்திருத்தலத்திற்குத் திருப்பயணம் மேற்கொள்ளும் கிறிஸ்தவர்களுக்கும், ஏனைய மதத்தவருக்கும் நன்றி தெரிவித்த கர்தினால் பரோலின் அவர்கள், கடவுள் நம்மிடம் மாபெரும் காரியங்களைக் கேட்கவில்லை, ஆனால் அவரில், நாம் நம்பிக்கை வைக்க வேண்டுமெனக் கேட்கிறார் எனவும் கூறினார்.

புனித திருத்தந்தை 2ம் ஜான் பால் அவர்கள், 1992ம் ஆண்டில் இந்த உலக நோயாளர் தினத்தை உருவாக்கினார் எனவும், முதல் உலக நோயாளர் தினம், 1993ம் ஆண்டு பிப்ரவரி 11ம் தேதி,  லூர்து அன்னை திருத்தலத்தில் சிறப்பிக்கப்பட்டது எனவும் கூறிய கர்தினால், லூர்து அன்னை விழா மற்றும், இந்த உலக நாளில் கலந்துகொண்ட எல்லாருக்கும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.

நாம் இறைவனோடு உரையாடல் நடத்த வேண்டுமென அன்னை மரியா விரும்புகிறார், இது ஒவ்வொருவருடனும் உரையாடல் நடத்த உதவுகின்றது என்றும், கர்தினால் பரோலின் அவர்கள், தன் மறையுரையில் கூறினார்.

கர்தினால் பரோலின் அவர்கள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் சிறப்புப் பிரதிநிதியாக, இந்த 25வது உலக தினத்தை, லூர்து திருத்தலத்தில் தலைமையேற்று சிறப்பித்தார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி