சமூக வலைத்தளங்கள்:

RSS:

வத்திக்கான் வானொலி

உலகோடு உரையாடலில் திருத்தந்தை மற்றும் திருஅவையின் குரல்

மொழி:
வத்திக்கான் வானொலி

முகப்பு பக்கம் / திருஅவை / ஆசியா

பாகிஸ்தானில், பயங்கரவாதம் புற்றுநோயாகப் பரவியுள்ளது


பிப்.17,2017. பாகிஸ்தானின் சிந்து மாநிலத்தில், 13ம் நூற்றாண்டைச் சேர்ந்த மசூதி ஒன்று தற்கொலை குண்டுவெடிப்பால் தாக்கப்பட்டுள்ளதற்கு, தனது வன்மையான கண்டனத்தை வெளியிட்ட அதேவேளை, பாகிஸ்தானில், பயங்கரவாதம் புற்றுநோயாகப் பரவியுள்ளது என்று, அந்நாட்டு ஆயர் பேரவைத் தலைவர், கராச்சி பேராயர், ஜோசப் கூட்ஸ் அவர்கள், குறை கூறியுள்ளார்.

ஒரு முஸ்லிம் நாட்டில், ஒரு முஸ்லிம் திருத்தலம் தாக்கப்பட்டுள்ளது கவலையளிக்கின்றது எனத் தெரிவித்த பேராயர் கூட்ஸ் அவர்கள், பாகிஸ்தான் சமுதாயத்தில், பயங்கரவாதம், நீண்ட காலமாக வேரூன்றியுள்ளது என்று கூறினார்.

அரசு அல்லது இராணுவம் மட்டும், தனித்து நின்று பயங்கரவாதத்தை ஒழிக்க முடியாது, ஆனால், சமய வேறுபாடின்றி, நாட்டின் அனைத்து மக்களும் ஒன்றிணைந்து, அமைதியான வழிகளில் செயல்பட்டு, பயங்கரவாதத்தை ஒழிக்க முன்வர வேண்டுமெனவும், பேராயர், கூட்ஸ் அவர்கள், UCA செய்தியிடம் கூறியுள்ளார். 

சிந்து மாநிலத்தில் சேவான் நகரில் உள்ள லால் ஷபாஸ் குல்லந்தர் மசூதியில், பிப்ரவரி 15, இப்புதனன்று ஏராளமான மக்கள் கூடியிருந்தபோது, கையெறி குண்டை, ஒருவன் வீசினான்; ஆனால், அது வெடிக்கவில்லை. இதையடுத்து, கூட்டத்துக்குள் புகுந்த அவன், திடீரென, தன் உடலில் மறைத்து வைத்திருந்த குண்டை வெடிக்கச் செய்தான். இத்தாக்குதலில், குறைந்தது 72 பேர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும், 200க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர் என ஊடகச் செய்திகள் கூறுகின்றன.

பிரதமர் நவாப் ஷெரிஃப், இத்தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளதோடு,  பாகிஸ்தான் மக்களை "ஒற்றுமையாக இருக்குமாறு" வலியுறுத்தியுள்ளார். 

ஆதாரம் : UCAN / வத்திக்கான் வானொலி