சமூக வலைத்தளங்கள்:

RSS:

வத்திக்கான் வானொலி

உலகோடு உரையாடலில் திருத்தந்தை மற்றும் திருஅவையின் குரல்

மொழி:
வத்திக்கான் வானொலி

முகப்பு பக்கம் / திருஅவை / உலகம்

பேராயர் அவுசா Seton Hall பல்கலைக்கழகத்தில் உரை


மார்ச்,07,2017. சந்திப்பும், உரையாடலுமே, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் அரசியல் சாணக்கியம் என, திருப்பீட உயர் அதிகாரி ஒருவர், அமெரிக்க ஐக்கிய நாட்டின் நியு ஜெர்சி மாநிலத்தின், Seton Hall பல்கலைக்கழகத்தில் உரையாற்றியபோது கூறினார்.

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் அரசியல் சாணக்கியம் குறித்து, அப்பல்கலைக்கழகத்தின் தூதரகச் செயலாட்சித்திறன் மற்றும், பன்னாட்டு உறவுகள் துறையில், பேராசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும், ஐ.நா. தலைமையகத்தில், திருப்பீடத்தின் பிரதிநிதியாகச் செயலாற்றும் பேராயர் பெர்னார்தித்தோ அவுசா அவர்கள் உரையாற்றுகையில் இவ்வாறு கூறினார்.

திருப்பீடத்தின் தூதரகப் பணி என்பது, சமயச்சார்பற்ற ஓர் உலகில், திருஅவையின் பெயரில், திருஅவையால் ஆற்றப்படும் ஒரு மறைப்பணியாகும் என்பதால், திருஅவையின் ஏனைய மறைப்பணிகள் மற்றும், நடவடிக்கைகள் போலவே, தூதரகப் பணியும், ஆன்மாக்களின் மீட்பையே மிக உன்னதக் கொள்கையாகக் கொண்டிருக்கின்றது என்று கூறினார், பேராயர் அவுசா.

சந்திப்பும், உரையாடலுமே, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் சொற்களிலும், செயல்களிலும் ஒன்றிணைந்து இழையோடுவது எனவும் விளக்கிய, பேராயர் அவுசா அவர்கள், திருத்தந்தை, சந்திப்புக் கலாச்சாரத்தையும், ஒருமைப்பாட்டுணர்வையும், பிறரன்போடு தொடர்புபடுத்துகிறார் என்றும் கூறினார்.

ஐ.நா.வில், திருப்பீடத்தின் தூதரக உறவு பற்றியும் பேசிய பேராயர் அவுசா அவர்கள், 1945ம் ஆண்டில், ஐ.நா. நிறுவனம் உருவாக்கப்பட்டபோது, திருப்பீடம் ஐ.நா.வோடு தூதரக உறவை ஏற்படுத்த முதலில் தயங்கியது என்றும், ஐ.நா. பாதுகாப்பு அவையின் ஐந்து நிரந்தர உறுப்பு நாடுகளுக்குக் கொடுக்கப்பட்டுள்ள உரிமை உட்பட, சில விவகாரங்கள் குறித்து திருப்பீடம் கவலை கொண்டுள்ளது என்றும் தெரிவித்தார்.

1964ம் ஆண்டு ஏப்ரல் 6ம் தேதி, திருப்பீடம், ஐ.நா.வில், நிரந்தரப் பார்வையாளராக மாறியது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி