சமூக வலைத்தளங்கள்:

RSS:

வத்திக்கான் வானொலி

உலகோடு உரையாடலில் திருத்தந்தை மற்றும் திருஅவையின் குரல்

மொழி:
வத்திக்கான் வானொலி

முகப்பு பக்கம் / உலகம் / மனித உரிமைகள்

சிறார்களை பாதிக்கும் போர் குறித்து யுனிசெஃப் கவலை


மார்ச்,13,2017. சிரியாவில்  கடந்த ஆண்டில், குழந்தைகளுக்கு எதிரான உரிமை மீறல்களும் வன்முறைகளும் மிகப்பெரிய அளவில் இடம்பெற்றதாக ஜ.நா.வின் குழந்தைகள் நிதி அமைப்பான யுனிசெஃப் அறிவித்துள்ளது.

2016ம் ஆண்டில் சிரியாவில் குழந்தைகள் கொல்லப்பட்டது, ஊனமாக்கப்பட்டது, கட்டாய இராணுவச் சேவைக்கு உட்படுத்தப்பட்டது போன்றவை, சிரியா முழுவதும் மிகப்பெரிய அளவில் இடம் பெற்றதாகக் கூறும் யுனிசெஃப் அமைப்பு, 2015ம் ஆண்டைவிட, 2016ம் ஆண்டின் கொடூரங்கள் 20 மடங்கு அதிகரித்திருந்தது என தெரிவித்தது.

கடந்த ஆண்டில் மட்டும், மருத்துமனைகள் மற்றும் மருத்துவப் பணியாளர்களுக்கு எதிராக 338 தாக்குதல்கள் இடம்பெற்றதாகவும் இவ்வமைப்பு தெரிவிக்கிறது.

வெடி குண்டுகள், துப்பாக்கிகள், வெடிவிபத்துக்கள் என்பவைகளையும் தாண்டி, தடுக்கவல்ல நோய்களால் இறக்கும் குழந்தைகளின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளதாகக் கூறும் இந்நிறுவனம், உதவி அமைப்புகளால் எட்டமுடியாத பகுதிகளில், குறிப்பாக புரட்சியாளர்களின் பிடியிலிருக்கும் பகுதிகளில் வாழும் 2 இலட்சத்து 80,000 குழந்தைகளையும் சேர்த்து 28 இலட்சம் சிறார் பெரும் ஆபத்திலிருப்பதாகத் தெரிவிக்கிறது.

6 ஆண்டுகளாக சிரியாவில் இடம்பெற்றுவரும் உள்நாட்டு மோதல்களால், சிரியா நாட்டின், ஏறத்தாழ 60 இலட்சம் சிறார்கள் மனிதாபிமான உதவிகளை சார்ந்து வாழும் நிலை ஏற்பட்டுள்ளது.

ஆதாரம் :  வத்திக்கான் வானொலி