சமூக வலைத்தளங்கள்:

RSS:

வத்திக்கான் வானொலி

உலகோடு உரையாடலில் திருத்தந்தை மற்றும் திருஅவையின் குரல்

மொழி:
வத்திக்கான் வானொலி

முகப்பு பக்கம் / வார ஒலிபரப்பு / சமூக ஆய்வு

வாரம் ஓர் அலசல் : பாடம் கற்றவர்கள் சொல்லும் பாடம்


மார்ச்,20,2017. தமிழகத்தின் சீர்காழிக்கு அருகிலுள்ள தொடுவாய் என்ற ஊரில் மீனவத் தொழில் செய்து பிழைப்பு நடத்தியவர்கள் ஜெயக்குமார்-ராஜவள்ளி தம்பதியர். கடற்கரையோரத்தில் இருந்த இவர்களின் வீட்டை, 2004ம் ஆண்டு, டிசம்பர் 26ம் தேதியன்று நடந்த சுனாமி ஆழிப்பேரலை அடித்துச் சென்றுவிட்டது. இத்தம்பதியர், இம்மாதத்தின் இரண்டாவது வாரத்தில், ஒரு நாள், விகடன் அலுவலகம் சென்று, ``ஐயா... இந்த ஒரு இலட்சம் ரூபாயை அரசிடம் சேர்க்கணும். அதுக்கு உங்க உதவி வேணும்!’’என்று சொல்ல, அதற்கு அந்த அலுவலகத்தினர், ``என்ன பணம் இது... எதுக்காக இதை அரசிடம் ஒப்படைக்கணும்?’’ என்று கேட்க, ஜெயக்குமார் அதற்குரிய காரணத்தை இவ்வாறு விளக்கியிருக்கிறார்.

சுனாமி வந்த அன்று காலையில், எங்களின் மூத்த மகன் உதயகுமார், வீட்டுக்கு முன்னால் கிடந்த படகில் விளையாடிக் கொண்டிருந்தார். திடீரென்று கடல் பொங்கி,  கண்மூடிக் கண் திறப்பதற்குள், கடல் தண்ணீர் பனை மர உயரத்துக்குப் பாய்ந்து வந்து எங்கள் வீட்டையே அடித்துச் சென்று விட்டது. மனைவி ராஜவள்ளியை கடல் தண்ணீர் இழுத்துக்கொண்டுபோய் ஊருக்கு வெளியே போட்டு விட்டது. நான் என் மகனைக் காப்பாற்றுவதற்காக ஓடிப் போனேன். அப்படியே படகோடு சேர்த்து என்னையும் கடல் இழுத்துக்கொண்டு போய், சிறிது நேரம் கழித்து, மறுபடியும் கரையில் வந்து எறிந்தது. எழுந்து பார்த்த போது, மகன் உதயகுமாரைக் காணவில்லை. ஊர் மக்களோடு சேர்ந்து என் மகனைத் தேடினேன். கிடைக்கவில்லை. என் இரண்டாவது மகன் அப்போது ஊருக்கு வெளியே இருந்ததால், எந்த ஆபத்தும் இல்லாமல் தப்பித்தார். பின்னர், அரசு அதிகாரிகள் வந்து, இறந்துபோனவர்கள் பட்டியலில் எம் மகன் பேரையும் சேர்த்தார்கள். ஒரு இலட்சம் ரூபாய் நஷ்ட ஈடு கொடுப்பதாகச் சொன்னார்கள். மகனே இல்லை என்பதால், அந்தப் பணத்தை வாங்கத் தயங்கினேன். அப்போது அதிகாரிகளும், ஊர் மக்களும், உன் மகன் இறந்துவிட்டாலும், இப்போதிருக்கின்ற உன் குடும்பத்தைக் காப்பாற்றுவதற்கு, அரசு தருகிற உதவித் தொகையை வாங்கிக்கொள் என்று சொன்னார்கள். அரசு நிவாரண நிதியாக, ஒரு இலட்சம் ரூபாயை வங்கியில் போட்டு, காசோலை புத்தகத்தை, எங்கள் கையில் கொடுத்தனர் அதிகாரிகள்.

ஜெயக்குமாரைத் தொடர்ந்து ராஜவள்ளி அவர்கள் இவ்வாறு சொன்னார். இரவும் பகலும், மகன் நினைவாகவே அழுது கொண்டிருந்தோம். அதனால், அந்தப் பணத்தை எடுக்கவே மனது வரவில்லை. இந்நிலையில், எங்கள் வீட்டு நண்பர் சீர்காழி கேசவன், இம்மாதத் தொடக்கத்தில், `உங்கள் மகன் உயிரோடு இருக்கிறான். வேளாங்கண்ணி பேருந்து நிலையத்திற்கு வாருங்கள் என தகவல் அனுப்பினார். எல்லாச் சாமியையும் கும்பிட்டுக்கொண்டே பேருந்தில் ஏறி வேளாங்கண்ணிக்குச் சென்றோம். எங்கள் மகன் எதையோ பறிகொடுத்தவன் மாதிரி வெறித்து நின்று கொண்டிருந்தான். `என் சாமீனு ஓடிப் போய் அவனைக் கட்டிக்கிட்டு அழுதேன். அவன் உடம்பெல்லாம் நடுங்கியது. திடீர் திடீர்னு கத்தினான். அதிக நேரத்துக்குப் பிறகுதான், அவன் கொஞ்சம் சமாதானமானான். பின், அவனை அழைத்துக்கொண்டு எங்கள் ஊருக்கு வந்தோம். இந்த மகன் செத்துப்போனான் என்று சொல்லித்தானே, அரசு எங்களுக்கு ஒரு இலட்சம் ரூபாய் கொடுத்தது. இப்போது மகன் உயிரோடு கிடைத்து விட்டான், இனிமேல் அந்தப் பணம் எதற்கு? அதனால், அந்தப் பணத்தைத் திரும்பக் கொடுப்பதற்கு முடிவு செய்தோம். விடயம் கேள்விப்பட்டு ஊர் மக்கள் திட்டினார்கள். ஊருக்குத் தெரியாமல் கிளம்பி நாகப்பட்டினம் கலெக்டர் அலுவலகம் போனோம். அப்போது கலெக்டர் இல்லை. அவருக்குக் கீழ் இருந்தவர்கள், `பணத்தை வைத்துக்கொள்ளுங்கள். யாரும் எதுவும் சொல்ல மாட்டார்கள் என்று, எங்களைத் திருப்பி அனுப்பி விட்டார்கள். என்ன செய்யலாம் என்று சிந்தித்தபோது, கேசவன் அண்ணன்தான் இங்கு கூட்டிக்கொண்டு வந்தார். இந்தப் பணத்தை எப்படியாவது அரசிடம் திருப்பிக் கொடுத்து விடுங்கள் என்றார் ராஜவள்ளி .

சென்னை ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்லில் எவ்வளவு பணம் விளையாடப் போகிறதோ என்ற அச்சம் நிலவும் இவ்வேளையில், இத்தம்பதியரின் செயல், நம்மை வியப்படையச் செய்கிறது. மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு பணம் தேவையில்லை என்று தெளிவாகச் சொல்லிவிட்டனர் ஜெயக்குமார்-ராஜவள்ளி தம்பதியர். மார்ச் 20, இத்திங்கள், உலக மகிழ்ச்சி நாள். 2012ம் ஆண்டு ஜூன் 28ம் தேதி, ஐ.நா.வின் 193 நாடுகளும் பொது அவையில் ஒரே மனதாக, இந்த நாளை அங்கீகரித்தன. Jayme Illien என்ற ஐ.நா. ஆலோசகரின் பரிந்துரையால் கொண்டுவரப்பட்ட இந்த உலக நாள் 2013ம் ஆண்டில் முதன் முறையாக கடைப்பிடிக்கப்பட்டது. மகிழ்ச்சி என்பது, மனித உரிமை என்பதையும், மகிழ்ச்சி, மனிதரின் அடிப்படையான இலக்கு என்பதையும் வலியுறுத்தும் நோக்கத்தில், Illien அவர்கள், ஐ.நா.வில் இந்தப் பரிந்துரையை முன் மொழிந்தார். இவர், இப்பரிந்துரையை முன்வைப்பதற்கு 32 ஆண்டுகளுக்கு முன்னர், கொல்கத்தா நகர் வீதி ஒன்றில், புனித அன்னை தெரேசா சபையினரால் கண்டுபிடிக்கப்பட்டு அச்சபையினரின் இல்லத்தில் வளர்க்கப்பட்டவர். பின்னர், Anna Belle Illien என்ற அமெரிக்க பெண்ணால் தத்து எடுக்கப்பட்டார். Jayme Illien அவர்கள், தற்போது, ஐ.நா.வில், பல முக்கிய பதவிகளை வகித்து வருகிறார். இத்தினத்தை முன்னிட்டு, ஐ.நா. நிறுவனம், 2016ம் ஆண்டின் மகிழ்ச்சியான நாடுகள் பட்டியலை வெளியிட்டுள்ளது. மொத்தம், 155 நாடுகள் கொண்ட இந்தப் பட்டியலில் இந்தியா 118வது இடத்தில் உள்ளது. டென்மார்ச் முதல் இடத்திலும், சுவிட்சர்லாந்து இரண்டாவது இடத்திலும், ஐஸ்லாந்து மூன்றாவது இடத்திலும்... இப்படி, இந்த பட்டியலில், நாடுகள் இடம்பெற்றுள்ளன.

தென் அமெரிக்க நாடான பொலிவியாவில், அமேசான் மழைக்காடுகளில் வாழ்கின்ற Tsimane (pronounced "chee-may-nay") இன மக்கள் உலகிலேயே நலமான இதயத்தைக் கொண்டிருப்பவர்கள் என்றும், இம்மக்களில், வயதானவர்கள் உட்பட எவருக்குமே இதயத் தமனிகளில் அடைப்புகள் இல்லை என்றும், Lancet இதழில் வெளியான ஓர் ஆய்வு தெரிவிக்கிறது. இந்த மக்களின் வாழ்க்கை முறைகள், ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முந்தைய மனித நாகரிகத்தை ஒத்ததாக உள்ளன எனவும், இவர்கள் மிகவும் அற்புதமானவர்கள் எனவும், இவர்கள் நம் அனைவருக்கும் எடுத்துக்காட்டாக விளங்குகின்றனர் எனவும் ஆய்வாளர்கள் கூறுகின்றனர். கடின உழைப்பாளிகளான சீ-மா-னே மக்களில், பெண்கள், நாளொன்றுக்கு  ஏறக்குறைய 16,000 அடிகள் (steps a day) நடந்தால், ஆண்களோ 17,000 அடிகள் வீதமும் நடக்கின்றனராம். அறுபது வயதுக்கு மேற்பட்டவர்கள்கூட ஒவ்வொரு நாளும் 15,000 அடிகளுக்கு மேல் நடக்கிறார்களாம். "சிறிய சமூகக் குழுக்களாக வாழும் அவர்களின் வாழ்க்கை, சமுதாயச் சார்புடையதாகவும், நேர்மறையான கண்ணோட்டத்தைக் கொண்டதாகவும் இருக்கின்றது" என்று ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

மகிழ்ச்சியாக வாழ்வது, மனிதரின் அடிப்படை உரிமைகளில் ஒன்று. பணமும் வசதிகளும் மட்டுமே வாழ்க்கையில்லை, இவை மட்டுமே மகிழ்ச்சி தராது என்பதையே பெரியோர் பலரும் திரும்பத் திரும்பச் சொல்கின்றனர். சித்தார்த்த கௌதமருக்கு மாளிகை வாழ்வு மகிழ்ச்சி தந்திருந்தால், அவர் புத்தராக மாறியிருக்க வாய்ப்பில்லை. அமெரிக்கத் தொழிலதிபரான ஆப்பிள் நிறுவனத்தின் ஸ்டீவ் ஜாப்ஸ் (Steve Jobs) அவர்களின் இறுதி வாக்குமூலம் சொல்வதும் இதுதான். இந்த வாக்குமூலத்தை தமிழில், மனிதன் என்ற இணைய பக்கத்தில் பார்த்தோம்.“நான் வணிக உலகில் வெற்றியின் உச்சத்தைத் தொட்டிருக்கிறேன். பிறரின் பார்வையில் என் வாழ்க்கை வெற்றிகரமானதுதான். பணமும் வசதிகளும் மட்டுமே வாழ்வில்லை என்பதை என் வாழ்க்கையின் இறுதிக்கட்டத்தில்தான் அறிந்துகொண்டேன். இதோ! இந்த மரண நேரத்தில், நோயுற்று படுத்துக்கொண்டு என் முழு வாழ்வையும் திரும்பிப் பார்க்கும் இந்தத் தருணத்தில் வாழ்வில் எனக்குக் கிடைத்த அங்கீகாரங்கள், பணம், புகழ், சொத்து, செல்வாக்கு எல்லாமே செல்லாக்காசாக, பொருளற்றதாக, மரணத்தின் முன் தோற்றுப்போய் நிற்பதை உள்ளூர உணர்கிறேன். இந்த இருளில் என் உயிரைத் தக்க வைக்கப் போராடிக்கொண்டிருக்கும் மருத்துவ இயந்திரங்களின் மெல்லிய ஓசைகள் மட்டுமே காதுகளில் ஒலிக்கின்றன. கடவுளின் மூச்சுக்காற்றையும் மரணத்தையும் மிக மிக அருகில் உணர்கிறேன். வாழ்வில் நாம் வாழ்வதற்குப் போதுமான பணத்தை சேர்த்த பின், பணத்திற்குத் தொடர்பில்லாத, மனத்திற்குத் தொடர்புடைய சிலவற்றையும் சம்பாதிக்கத் தொடங்க வேண்டும் என்பது இப்போதுதான் எனக்குப் புரிகிறது. அவை உறவாகவோ, நட்பாகவோ, கலையாகவோ, அறமாகவோ, நம் இளமையின் கனவாகவோ இருக்கலாம். அவைதான் வாழ்வில் மிகமிக இன்றியமையாதவை என்பதை காலங்கடந்து இப்போது நான் உணர்கிறேன். கடவுள் நம் புலன்களின் மூலம் அனைவரின் மனத்திலும் இருக்கும் அன்பை உணரச் செய்யும் ஆற்றலைக் கொடுத்திருக்கிறார், பணத்தால் நாம் உண்டாக்கியிருக்கும் அனைத்து மகிழ்ச்சியும் வெறும் மாயைகளே! நான் சம்பாதித்த பணம் எதையும் என்னுடன் கொண்டு போக முடியாது. நான் மகிழ்ந்திருந்த என் நினைவுகள் மட்டுமே இப்போது என்னுடன் இருக்கின்றன. உங்கள் பணத்தை வைத்து நீங்கள் என்ன வேண்டுமானாலும் வாங்கலாம், ஆனால் அந்தப் பணத்தின் மூலம் உங்கள் வலியை, உங்கள் துயரை, யாரையும் வாங்கிகொள்ளுமாறு செய்யமுடியாது; முடியவே முடியாது. பணத்தின் வழியாக வாங்கும் பொருட்கள் தொலைந்துவிட்டால்.. அவற்றை மீண்டும் வாங்கிவிடலாம். ஆனால் நீங்கள் தொலைத்து, அதைப் பணத்தால் வாங்கமுடியாது என்ற ஒன்று உண்டென்றால், அது உங்கள் வாழ்க்கைதான். வாழ்வில் எந்தக் கட்டத்தில் நீங்கள் இருந்தாலும் பரவாயில்லை, இப்போதாவது வாழ்வை வாழத் தொடங்குங்கள். நாம் நடித்துக்கொண்டிருக்கும் வாழ்க்கை எனும் நாடகத்தின் திரை எப்போது வேண்டுமானாலும் இறக்கப்படலாம் என்பதை நினைவில் கொள்ளுங்கள். உங்களின் குடும்பத்தினருக்கு, பெற்றோர்க்கு, மனைவிக்கு, மக்களுக்கு, உறவினர்க்கு, நண்பர்களுக்கு, இயலாதவர்களுக்கு அன்பை வாரிவாரி வழங்குங்கள். உங்களை நீங்கள் எப்பொழுதும் மகிழ்ச்சியாக வைத்துக் கொள்ளுங்கள். அனைவரையும் மனமார அன்புகூருங்கள். அன்பு செலுத்திக் கொண்டே இருங்கள்”.. இப்படிக்கு, மரணப்படுக்கையில் ஸ்டீவ் ஜாப்ஸ் என்று அவர், எழுதியிருக்கிறார்.  அன்பர்களே, உலகம் ஒரு விசித்திரமான கல்லூரி. இங்கே பாடம் சொல்லிக்கொடுத்துத் தேர்வு வைப்பது இல்லை. தேர்வு வைத்த பிறகே பாடம் கற்பிக்கப்படுகிறது என்றார் சுவாமி விவேகானந்தர். எனவே நமக்கு முன் வாழ்க்கைப் பாடம் கற்றவர்கள் சொல்லும் அனுபவம், நமக்குப் பாடமாகட்டும். மகிழ்ச்சியாக வாழும் முறைகளைக் கற்றுக்கொள்வோம்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி