சமூக வலைத்தளங்கள்:

RSS:

வத்திக்கான் வானொலி

உலகோடு உரையாடலில் திருத்தந்தை மற்றும் திருஅவையின் குரல்

மொழி:
வத்திக்கான் வானொலி

முகப்பு பக்கம் / திருஅவை / ஆசியா

ஈராக் நாட்டில் பணிகளை மீண்டும் துவக்கும் இயேசு சபையினர்


மார்ச்,23,2017. ஈராக் நாட்டில் இயேசு சபையினர் தங்கள் பணிகளை மீண்டும் துவங்குவது, தங்கள் நாட்டுக்கு, குறிப்பாக, கிறிஸ்தவ சமுதாயத்திற்கு கிடைத்த ஓர் ஆசீர் என்று, கல்தேய வழிபாட்டு முறை முதுபெரும் தந்தை, லூயிஸ் இரபேல் சாக்கோ அவர்கள் கூறினார்.

1969ம் ஆண்டு, ஈராக் நாட்டில் ஆட்சியைக் கைப்பற்றிய ஓர் அரசியல் கட்சியால் நாட்டை விட்டு வெளியேற்றப்பட்ட இயேசு சபையினர், மீண்டும் அந்நாட்டில் தங்கள் பணிகளைத் துவக்க வழங்கப்பட்டுள்ள அனுமதியைக் குறித்து, முதுபெரும் தந்தை சாக்கோ அவர்கள் தன் மகிழ்வை வெளியிட்டார் என்று, வத்திக்கான் நாளிதழ் L'Osservatore Romano கூறியுள்ளது.

தங்கள் நாட்டைவிட்டு வெளியேற்றப்பட்ட வேளையில், இயேசு சபையினர் மேற்கொண்டிருந்த கல்விப்பணியை அவர்கள், மீண்டும் தொடர்வது, ஈராக் நாட்டிற்கு மிக அவசரமானத் தேவையாக உள்ளது என்று முதுபெரும் தந்தை சாக்கோ அவர்கள் கூறினார்.

இயேசு சபையினரின் புலம்பெயர்ந்தோர் பணிக்குழு, 2014ம் ஆண்டு முதல், ஈராக் நாட்டின் எர்பில் நகரிலும், குர்திஸ்தான் பகுதியிலும் பணிகளைத் துவங்கியிருந்தது என்பதை, முதுபெரும் தந்தை சாக்கோ அவர்கள் சுட்டிக்காட்டினார்.

இயேசு சபையினர் தங்கள் நாட்டைவிட்டு வெளியேற்றப்பட்ட வேளையில் அவர்களிடம் இருந்த அனைத்துச் சொத்துக்களும், கல்தேய திருஅவையின் கண்காணிப்பில் ஒப்படைக்கப்பட்டதென்றும், அவற்றை மீண்டும் இயேசு சபையினரிடம் ஒப்படைக்க தயாராக இருப்பதாகவும், முதுபெரும் தந்தை சாக்கோ அவர்கள் எடுத்துரைத்தார்.

1932ம் ஆண்டு முதல், ஈராக் நாட்டில், கல்விப்பணியாற்றிய இயேசு சபையினர், 1956ம் ஆண்டு நிறுவிய ஹிக்மா (Hikma) பல்கலைக் கழகத்தின் வழியே, பெண்களுக்கும் கல்வி புகட்டத் துவங்கினர் என்பதும், இயேசு சபையினர் ஈராக் நாட்டைவிட்டு வெளியேற்றப்பட்டபோது, அவர்களிடம் பயின்ற மாணவர்களில், 70 விழுக்காட்டினர், இஸ்லாமியர் என்பதும் குறிப்பிடத்தக்கன.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி