சமூக வலைத்தளங்கள்:

RSS:

வத்திக்கான் வானொலி

உலகோடு உரையாடலில் திருத்தந்தை மற்றும் திருஅவையின் குரல்

மொழி:
வத்திக்கான் வானொலி

முகப்பு பக்கம் / திருத்தந்தை பிரான்சிஸ் / பயணங்கள்

மிலான் நகர திருப்பலியில் திருத்தந்தையின் மறையுரை


மார்ச்,25,2017. அன்பு சகோதர, சகோதரிகளே,

நமது வரலாற்றின் மிக முக்கியமான அறிவிப்பை இப்போது கேட்டோம் (காண்க. லூக்கா 1,26-38). திருமுழுக்கு யோவான் பிறப்பைக் குறித்து வழங்கப்பட்ட செய்தியின் (காண்க லூக்கா 1,5-20) வெளிச்சத்தில் பொருள் செறிந்த இப்பகுதியைச் சிந்தித்துப்பார்க்க விழைகிறேன்.

மக்கள் அனைவரும் வெளியில் காத்துக்கொண்டிருந்த வேளையில், குரு செக்கரியா இறைவன் சன்னதியில் பணியாற்றியபோது, திருமுழுக்கு யோவானின் பிறப்பு குறித்த செய்தி வழங்கப்பட்டது. இயேசுவின் பிறப்பு குறித்த செய்தியோ, அதிகம் அறியப்படாத ஒரு கிராமத்தில், ஒரு வீட்டில், மரியா என்ற இளம் பெண்ணுக்கு வழங்கப்பட்டது.

இறைவன் வந்து தங்க விழையும் ஆலயங்கள், நாம் எதிர்பாராத இடங்களில் இருக்கும் என்பதை இந்நிகழ்வு காட்டுகிறது. எந்த ஒரு மனிதச் சூழலும் இறைவன் வந்து தங்குவதற்குப் புறம்பான சூழல் இல்லை.     

மரியாவின் இல்லம் தேடி வந்த இறைவன், நம் ஒவ்வொருவர் இல்லத்தையும், நம் சாதாரண வாழ்வையும் தேடி வருகிறார். நமது இல்லங்களில், நாம் பணியாற்றும் இடங்களில், நமது நகரங்களில் "மகிழுங்கள், ஆண்டவர் உங்களோடு இருக்கிறார்" என்ற நற்செய்தி ஒலிக்கிறது.

"இது எப்படி நிகழும்?" என்று மரியா கலங்கி நின்றதைப்போல, நாமும் நமது சூழல்களை எண்ணி புரியாமல் நிற்கிறோம். வறியோர், புலம்பெயர்ந்தோர், வேலையற்ற இளையோர் என்ற பல பிரச்சனைகளை எண்ணி நாமும் கலங்கி நிற்கிறோம், நம்பிக்கை இழக்கிறோம். நம்மைச்சுற்றி மிகத் துரித வேகத்தில் நடைபெறும் நிகழ்வுகள், நமது நம்பிக்கையையும், மகிழ்வையும் களவாடிச் செல்கின்றன. இந்த வேகத்தால், நமது வாழ்வு முன்னேறும் என்ற கருத்து சொல்லப்பட்டாலும், நமது குடும்பம், நண்பர்கள், நாம் வாழும் சமுதாயம் ஆகியவற்றிற்கு நேரம் ஒதுக்கமுடியாமல் தவிக்கிறோம்.

நற்செய்தியின் மகிழ்வை இன்று நமது நகரங்களில் எவ்விதம் வாழ்வது? இன்றையச் சூழலில் கிறிஸ்தவ நம்பிக்கையை எவ்விதம் கொண்டிருப்பது?

இவ்விரு கேள்விகளும், நம்மையும், நமது குழந்தைகளையும் உள்ளடக்கியுள்ளன.

குழம்பி நின்ற மரியாவுக்கு வானதூதர் அளித்த பதிலில், நாம் மூன்று கருத்துக்களை உணரலாம்.

1. வரலாற்று நினைவை வரவழைத்தல்:

மீட்பின் வரலாற்றில் மரியா ஒரு பகுதி என்பதை வானதூதர் உணர்த்தினார். உடன்படிக்கையின் மகள் அவர் என்பதை புரிந்துகொள்ளச் செய்தார். நாமும், வரலாற்றினால் உருவாக்கப்பட்டவர்கள். இரு உலகப் போர்களின் வேதனைகளை உணர்ந்த ஒரு நாட்டில் நாம் வாழ்கிறோம். கடினமான உழைப்பால் மீண்டும் கட்டியெழுப்பப்பட்ட வரலாற்றில் வாழ்கிறோம். எனவே, அனைத்தும் எளிதாகக் கிடைக்கும் என்ற மந்திர, தந்திரத்தை நம்பாமல் இருக்க, நமது வரலாற்று நினைவு உதவி செய்யும்.

2. கடவுளின் மக்கள் என்ற உண்மையில் பங்கேற்றல்:

மரியாவுக்கு உணர்த்தப்பட்ட வரலாற்று நினைவு, அவர் கடவுளின் மக்கள் என்ற குழுமத்தில் ஒருவர் என்பதையும் புரிந்துகொள்ள உதவியது. பல வேறுபாடுகளைக் கொண்ட சமுதாயத்தில் நாம் வாழ்ந்தாலும், அனைவரும் கடவுளின் மக்கள் என்ற உணர்வே, நம் அனைவரையும் ஒருங்கிணைக்க முடியும்.

3. முடியாதது, முடியும் என்ற உணர்வு:

"கடவுளால் இயலாதது ஒன்றுமில்லை" (லூக்கா 1:37) என்ற வார்த்தைகளை, வானதூதர் மரியாவுக்கு வழங்குகிறார். நம்மை மட்டுமே சார்ந்து நாம் வாழும்போது, நமது சக்திகளுக்குள் நாம் சிறைப்பட்டுவிடுகிறோம். இறைவனின் அருளுக்காக நம்மை திறந்து வைக்கும்போது, முடியாதது என்பனவும் முடிகின்றது. நமது சக்திகளை நம்பி, நம்பிக்கையின்மையில் சிறைப்படுவதற்குப் பதில், கடவுளின் அருளில் நம்பிக்கைக் கொண்டு, முடியாததென தெரிவனவற்றையும் முடிப்போம்.

புனித அம்புரோஸ், இந்த நற்செய்திப் பகுதிக்கு அளித்த விளக்கத்தில், "மிகக் கடினமானச் சூழல்களிலும், நம்பிக்கை கொண்ட மரியாவைப் போன்ற உள்ளத்தை கடவுள் தொடர்ந்து தேடுகிறார்" என்று கூறியுள்ளார். அவ்வகை உள்ளத்தையும், நம்பிக்கையையும் இறைவன் நமக்கு வழங்குவாராக!

ஆதாரம் : வத்திக்கான் வானொலி