சமூக வலைத்தளங்கள்:

RSS:

வத்திக்கான் வானொலி

உலகோடு உரையாடலில் திருத்தந்தை மற்றும் திருஅவையின் குரல்

மொழி:
வத்திக்கான் வானொலி

முகப்பு பக்கம் / திருஅவை / உலகம்

"11ம் பயஸ் முதல் பிரான்சிஸ் முடிய: மதச் சுதந்திர முயற்சிகள்"


மார்ச்,31,2017. மதச் சுதந்திரத்தைக் குறித்து திருஅவை கொண்டுள்ள கண்ணோட்டத்தைப் புரிந்துகொள்ள, இறையியல், வரலாறு, சட்டங்கள் என்ற பல்வேறு கோணங்களில், கடந்த ஆண்டுகளை பின்னோக்கி பார்ப்பது பயனளிக்கும் என்று, திருப்பீட உயர் அதிகாரி ஒருவர், கருத்தரங்கு ஒன்றில் உரையாற்றினார்.

பன்னாட்டு உறவுகள் திருப்பீட அவையின் செயலராகப் பணியாற்றும் பேராயர், பால் ரிச்சர்ட் காலகர் அவர்கள், மிலான் நகரில் இயங்கிவரும், தூய இதய கத்தோலிக்க பல்கலைக் கழகத்தில், மார்ச் 30, இவ்வியாழனன்று வழங்கிய ஓர் உரையில், இவ்வாறு கூறினார்.

"பதினோராம் பயஸ் முதல், பிரான்சிஸ் முடிய: மதச் சுதந்திரத்தை நிலைநாட்ட திருப்பீடத்தின் முயற்சிகள்" என்ற தலைப்பில் நடைபெற்ற கருத்தரங்கில் உரையாற்றிய பேராயர் காலகர் அவர்கள், பல்வேறு கருத்தியல்களால் பிளவுபட்டிருக்கும் இன்றைய ஐரோப்பிய கண்டத்தில், மதச் சுதந்திரத்தைப் பற்றி சிந்திப்பது பயனுள்ள முயற்சி என்று கூறினார்.

அரசின் அதிகாரப்பூர்வ அங்கமாக மதங்கள் அமைந்தது, மனித வரலாற்றில் தொன்றுதொட்டு இருந்தது என்பதைக் குறிப்பிட்டு பேசிய பேராயர் காலகர் அவர்கள், திருஅவைக்கும், பல்வேறு அரசுகளுக்கும் இருந்த உறவால் உண்டான விளைவுகளையும் தன் உரையில் சுருக்கமாகச் சுட்டிக்காட்டினார்.

19 மற்றும் 20ம் நூற்றாண்டுகளில் தலைமைப் பொறுப்பேற்றிருந்த திருத்தந்தையர்கள், அரசையும், மதத்தையும் தனித்தனியே காணும் முயற்சிகளை மேற்கொண்டனர் என்பதை, பேராயர் காலகர் அவர்கள் பல்வேறு எடுத்துக்காட்டுகளுடன் கூறினார்.

2ம் வத்திக்கான் சங்கத்தை கூட்டிய திருத்தந்தை புனித 23ம் ஜான் அவர்களின் காலம் முதல், அருளாளர் 6ம் பவுல், புனித 2ம் ஜான்பால், 16ம் பெனடிக்ட் மற்றும் திருத்தந்தை பிரான்சிஸ் ஆகிய அனைவரும் மதச் சுதந்திரம் குறித்து வெளியிட்டுள்ள பல்வேறு கருத்துக்களை, தன் உரையில் எடுத்துரைத்தார், பேராயர் காலகர்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி