சமூக வலைத்தளங்கள்:

RSS:

வத்திக்கான் வானொலி

உலகோடு உரையாடலில் திருத்தந்தை மற்றும் திருஅவையின் குரல்

மொழி:
வத்திக்கான் வானொலி

முகப்பு பக்கம் / திருஅவை / உலகம்

உலகளவில் கத்தோலிக்கரின் எண்ணிக்கை 128 கோடி


ஏப்.07,2017. உலகளவில் கத்தோலிக்கரின் எண்ணிக்கை சற்று அதிகரித்திருப்பதாகவும், உலகிலுள்ள கத்தோலிக்கரில், ஏறக்குறைய 56 விழுக்காட்டினர், பத்து நாடுகளில் உள்ளனர் எனவும், திருப்பீடம் வெளியிட்ட அறிக்கை கூறுகின்றது.

2017ம் ஆண்டின் "Annuario Pontificio" அதாவது 2017ம் ஆண்டின் வத்திக்கானின் புள்ளிவிபர ஆண்டு குறிப்பேட்டை வெளியிட்டுள்ள திருப்பீடம், ஆப்ரிக்காவில் கத்தோலிக்கரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது என்றும், பிரேசில், மெக்சிகோ, பிலிப்பின்ஸ், அமெரிக்க ஐக்கிய நாடு, இத்தாலி, பிரான்ஸ், கொலம்பியா, இஸ்பெயின், காங்கோ, அர்ஜென்டீனா ஆகிய பத்து நாடுகளில், பாதிக்கும் மேற்பட்ட கத்தோலிக்கர் உள்ளனர் என்றும் கூறியுள்ளது.

2015ம் ஆண்டு டிசம்பர் 31ம் தேதி நிலவரப்படி, உலகளவில் திருமுழுக்குப் பெற்றுள்ள கத்தோலிக்கரின் எண்ணிக்கை ஒரு விழுக்காடு அதிகரித்து, அது 128 கோடியே  ஐம்பது இலட்சமாக உயர்ந்துள்ளது என்றும், உலக மக்கள் தொகையில் கத்தோலிக்கர் 17.7 விழுக்காடு என்றும், திருப்பீடம் கூறியுள்ளது. இதை விளக்கிச் சொல்ல வேண்டுமெனில், ஆசியாவில், நூறு பேருக்கு 3.2, ஆப்ரிக்காவில் 19.4, ஓசியானியாவில் 26.4, ஐரோப்பாவில் 39.9, அமெரிக்காவில் 63.7 என, கத்தோலிக்கர் உள்ளனர்.

2015ம் ஆண்டின் இறுதியில், உலகில், 6,70,320 அருள்சகோதரிகளும், 4,15,656 அருள்பணியாளர்களும், 54,229 அருள்சகோதரர்களும், 45,255 தியாக்கோன்களும், 5,304 ஆயர்களும் இருந்தனர் என்றும், இவர்களில், ஆயர்கள் மற்றும் தியாக்கோன்களின் எண்ணிக்கை மட்டுமே அதிகரித்திருந்தது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

2015ம் ஆண்டில், அருள்பணியாளர்களின் எண்ணிக்கை குறைந்திருந்தது என்றும், 2010ம் ஆண்டில், உலகில், 2,900 கத்தோலிக்கருக்கு, ஓர் அருள்பணியாளர் வீதம் இருந்தனர் என்றும், இந்த விகிதம், 2015ம் ஆண்டில், 3,091 கத்தோலிக்கருக்கு, ஓர் அருள்பணியாளர் என, உயர்ந்தது எனவும், திருப்பீடம் கூறியுள்ளது. 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி