சமூக வலைத்தளங்கள்:

RSS:

வத்திக்கான் வானொலி

உலகோடு உரையாடலில் திருத்தந்தை மற்றும் திருஅவையின் குரல்

மொழி:
வத்திக்கான் வானொலி

முகப்பு பக்கம் / திருத்தந்தை பிரான்சிஸ் / மறைக்கல்வி, மூவேளை உரை

மறைக்கல்வி உரை: இவ்வுலகின், மற்றும், சிலுவையின் எதிர் நோக்கு


ஏப்.,12,2017. கிறிஸ்தவ எதிர்நோக்கு என்ற தலைப்பிலேயே கடந்த சில வாரங்களாக தன் புதன் மறைக்கல்வி உரையை வழங்கிவரும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இயேசுவின் பாடுகளின் காலமான இப்புனித வாரத்தின் புதனன்று, 'இவ்வுலகின் எதிர்நோக்கும், சிலுவையின் எதிர் நோக்கும்' என்ற தலைப்பில் மறைக்கல்வி உரையை வழங்கினார்.

'கோதுமை மணி மண்ணில் விழுந்து மடியாவிட்டால் அது அப்படியே இருக்கும். அது மடிந்தால்தான் மிகுந்த விளைச்சலை அளிக்கும் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன். தமக்கென்றே வாழ்வோர் தம் வாழ்வை இழந்து விடுவர். இவ்வுலகில் தம் வாழ்வைப் பொருட்டாகக் கருதாதோர் நிலைவாழ்வுக்குத் தம்மை உரியவராக்குவர்', என்ற இயேசுவின் வார்த்தைகள், தூய யோவான் நற்செய்தியிலிருந்து முதலில் வாசிக்கப்பட, தன் மறைக்கல்வி உரையைத் தொடர்ந்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

அன்புச் சகோதர சகோதரிகளே! கிறிஸ்தவ நம்பிக்கைக் குறித்த நம் தொடர் மறைக்கல்வி உரையில், சிலுவையின் மறையுண்மை குறித்து இப்புனித வாரத்தில் நோக்குவோம். நம் கிறிஸ்தவ எதிர்நோக்கு என்பது, முடிவற்ற நிறைவைத் தரத் தவறும் இவ்வுலக எதிர்நோக்குப் போன்றது அல்ல. கிறிஸ்தவ நம்பிக்கை என்பது, இறைவனின் முடிவற்ற அன்பில் தன் அடிப்படையைக் கொண்டது. மேலும்  இது, கிறிஸ்துவின் தியாக மரணம், மற்றும், புதிய வாழ்வுக்கான அவரின் உயிர்ப்பு எனும் மறையுண்மையில் வெளிப்படுத்தப்பட்டது. தன் பாடுகள் மற்றும் மரணம் குறித்து எடுத்துரைக்கும் இயேசு, விதை என்ற உருவகத்தைப் பயன்படுத்துகின்றார். விதை மண்ணில் விழுந்து மடியவில்லையெனில் அது விளைச்சலைத் தராது என்கிறார் இயேசு. கடவுளின் வாழ்வு எனப்படும், தன்னையே வழங்கும் அன்பு, இருளை ஒளியாகவும், பாவத்தை மன்னிப்பாகவும், தோல்வியை முடிவற்ற வெற்றியாகவும் மாற்றவல்லது என்பதை, இயேசுவின் மீட்பளிக்கும் மரணம் மற்றும் உயிர்ப்பு, நமக்குக் காண்பிக்கின்றன. இவ்வாறு, இயேசுவின் சிலுவை, நம் வாழ்வுக்கு அர்த்தத்தையும் பாதையையும் வழங்கும் கைவிடா எதிர்நோக்கின் ஆதாரமாகிறது. சிலுவையின் நிழலையும் தாண்டி, நாம் அழைப்புப் பெற்றுள்ள, மகிமையின் ஒளியை நாம் நோக்குகிறோம். உயிர்ப்பை நோக்கிய இந்தப் புனித நாள்களில் இருக்கும் நாம், இயேசுவின் முடிவற்ற அன்பைப் பின்பற்றி வாழ்வதற்கான முயற்சிகளைத் தூண்டுவதற்கும், நமது முடிவற்ற நம்பிக்கைகளுக்கும், ஆதாரமாக இருக்கும், சிலுவையிலறையப்பட்ட இயேசுவைக் குறித்துத் தியானிப்போம்.

இவ்வாறு, தன் புதன் மறைக்கல்வி உரையை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அனைவருக்கும் தன் அப்போஸ்தலிக்க ஆசீரையும் அளித்தார்.

ஆதாரம் :  வத்திக்கான் வானொலி