சமூக வலைத்தளங்கள்:

RSS:

வத்திக்கான் வானொலி

உலகோடு உரையாடலில் திருத்தந்தை மற்றும் திருஅவையின் குரல்

மொழி:
வத்திக்கான் வானொலி

முகப்பு பக்கம் / திருத்தந்தை பிரான்சிஸ் / நிகழ்வுகள்

சிலுவைப்பாதையின் இறுதியில், திருத்தந்தை எழுப்பிய மன்றாட்டு


ஏப்.15,2017. ஏப்ரல் 14, புனித வெள்ளியன்று மாலை 9 மணியளவில், உரோம் நகரின் மறைசாட்சிகள் நினைவிடமான, கொலோசெயம் திடலில் நடைபெற்ற சிலுவைப்பாதையின் இறுதியில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் எழுப்பிய மன்றாட்டு:

காட்டிக்கொடுக்கப்பட்டு, குறைந்த விலைக்கு விற்கப்பட்ட கிறிஸ்துவே!

பாவிகளாலும், அதிகார வர்க்கத்தாலும் தீர்ப்பிடப்பட்ட கிறிஸ்துவே!

கன்னத்தில் அறையப்பட்டு, சிலுவையில் அறையப்பட்டு, வேதனையுற்ற கிறிஸ்துவே!

வாழ்வின் இறைவனாக இருந்தும், மண்ணில் புதைக்கப்பட்ட கிறிஸ்துவே!

உம்மிடம் மீண்டும் ஒருமுறை வந்துள்ளோம்; உம்மைக் காணும் தகுதியற்றவர்களாய், அவமானத்தால், எங்கள் கண்களைத் தாழ்த்தியபடி உம்மிடம் வந்துள்ளோம்.

எங்களைச் சுற்றி நிகழும் அழிவுகளை, அக்கிரமங்களை, மிகச்சாதாரண நிகழ்வுகளாக ஏற்றுக்கொள்வதால் உண்டாகும் அவமானம் இது.

மாசற்ற குழந்தைகள், பெண்கள் ஆகியோரின் இரத்தம் சிந்தப்படுவதால், நிறம், இனம், சமுதாய நிலை என்ற காரணங்களால் மனிதர்கள் பாகுபடுத்தப்படுவதால் உண்டாகும் அவமானம் இது.

யூதாஸைப்போல, பேதுருவைப்போல உம்மைக் காட்டிக்கொடுப்பதால், மறுதலிப்பதால் உண்டாகும் அவமானம் இது.

அநீதியைக் கண்டும், மௌனம் காப்பதால், உண்டாகும் அவமானம் இது.

ஆயர்களாக, அருள்பணியாளர்களாக, துறவியராக, உமது திருஅவை என்ற உடலைக் காயப்படுத்துவதால், உண்டாகும் அவமானம் இது.

இத்தனை அவமானங்கள் மத்தியில், உமது அளவுகடந்த இரக்கத்தின்மீது நம்பிக்கை கொண்டு வந்துள்ளோம்.

எங்கள் பெயர்கள் உமது இதயத்தில் பொறிக்கப்பட்டுள்ளன; எங்களை, உமது கண்ணின் விழியாய் காக்கின்றீர் என்ற நம்பிக்கையுடன் வந்துள்ளோம்.

கடினப்பட்ட எங்கள் இதயம், உமது சிலுவையால், மீண்டும் மென்மையாகும் என்ற நம்பிக்கையுடன் வந்துள்ளோம்.

உமது சிலுவையைச் சுமக்க, ஆண்களும், பெண்களும், இன்றும், துணிவுடன் முன்வருகின்றனர் என்ற நம்பிக்கையுடன் வந்துள்ளோம்.

பாலைநிலத்தில் ஒலிக்கும் குரலாக விளங்க, உமது திருஅவை முயற்சி செய்யும் என்ற நம்பிக்கையுடன் வந்துள்ளோம்.

குற்றமேதுமற்ற இறைமகனே! இயேசுவே! உமது சிலுவைமுன் மண்டியிட்டு கிடக்கிறோம். உமது விலாவிலிருந்து வடிந்த இரத்தமும், நீரும், எங்கள் பாவக்கறைகளைக் கழுவட்டும். வன்முறையால், போரால், அக்கறையின்மையால் துன்புறும் எங்கள் சகோதர, சகோதரிகளை நினைவுகூர்ந்தருளும். எங்களை சுயநலத்தில் கட்டிப்போட்டிருக்கும் தளைகளை உடைத்தருளும்.

கிறிஸ்துவே, உமது சிலுவையை ஏற்பதில் நாங்கள் வெட்கப்படாமலிருக்க கற்றுத்தாரும். சிலுவையைக் கொண்டு நாங்கள் மற்றவரை அடக்காமலிருக்கவும், அதனை மரியாதையுடன் வணங்கவும் கற்றுத்தாரும். ஆமென்.

திருத்தந்தையின் தலைமையில் நடைபெற்ற இச்சிலுவைப்பாதையில், 20,000த்திற்கும் மேலானோர் பங்கேற்றனர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், "கிறிஸ்துவின் சிலுவையே, இரவின் இருளைவிட, புலரும் ஞாயிறு சக்திமிக்கது என்பதையும், இறைவனின் நிரந்தர அன்பு எப்போதும் வெல்கிறது என்பதையும் எங்களுக்குச் சொல்லித் தாரும்" என்ற வார்த்தைகளை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஏப்ரல் 14, இவ்வெள்ளியன்று தன் டுவிட்டர் செய்தியாக வெளியிட்டார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி